Tuesday, September 9, 2014

பணம் பரம்பரையாக வருவதல்ல, மனப்பாங்கினால்…



தி இந்து:செவ்வாய், செப்டம்பர் 9, 2014

ஏழ்மையாக மடிவதும் செல்வத்தோடு வாழ்வதும், வாழ்க்கையில் அவரவர் தேர்ந்தெடுக்கும் வழிகளை பொறுத்தது. நூலாசிரியர் தெள்ளத் தெளிவாக கேள்விகளை கேட்டு பதில்களையும் அளிக்கிறார். ஏழைகள் உணவுக்காக வெகுதூரம் நடப்பதும், பணக்காரர்கள் உண்ட உணவு செறிப்பதற்காக நடப்பதும் வாழ்க்கையின் முரண்பாடுகள். ஆனால் பணம் என்னும் விதையை விதைத்து அது வளர்ந்து மரமாக, அதை தனதாக்கி கொள்வதில்தான் ஒருவருடைய திறமைகள் வெளிப்படும்.

ஏழையாக பிறப்பது அவரவர் குற்றம் அல்ல, ஆனால் ஏழையாக இறப்பது அவரவர்களே தேடிக்கொள்ளும் தவறான அணுகுமுறை மற்றும் முடிவு என்பது ஆசிரியர் கூற்று.
பணத்தை பெருக்கக் கூடிய முறைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நூல் ஆசிரியர் விவரிக்கும் பொழுது அந்த அறிதல் தெளிதல் ஆகிறது. உதாரணமாக வால்ட் டிஸ்னி என்ற கார்ட்டூனிஸ்ட் மிகவும் வெற்றி பெற்றதாக நாம் அறிகிறோம். ஆனால் அவர் அடைந்த தோல்விகளும் அவருடைய மனப்பாங்கும் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்தது என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார். 

பத்து வயதில் புகைப்படங்களை விற்றார், தின்பண்டங்களையும், பத்திரிக்கைகளையும் தொடர்வண்டியில் விற்றார். 22 வயதில் திவால் ஆனார். முதல் இரண்டு பேசாத அசைவூட்டி (animation) படங்களை விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்தனர். மூன்றாவது இசையுடன் கூடிய பேசும் அசைவூட்டு படங்கள் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

குடும்பத்தாரும், நண்பர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்த்த போதும் கேலிச்சித்திர கதாபத்திரங்களை அசைவூட்டி படமாக்கி வெளியிட்டதில் ஏராளமான பொருள் ஈட்டினார் என்பது வரலாறு. எனவே பணம் என்பது பரம்பரையாக வருவது அல்ல. ஒவ்வொருவருடைய மனப்பாங்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் அளிக்கும் மரியாதையும் பணத்தை பெருகுவதற்கு உதவும்.
திருபாய் அம்பானி ’முடியாது’ ’இல்லை’ என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மறுத்தவர். எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் சமர்த்தர். பொருளாதாரத்தில் மத்திய தர குடும்பத்தை சேர்ந்த அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளும், மனிதர்களும் கணக்கிலடங்காதது. உலக வியாபாரத்தில் ஈடுபட்டபோது அவரிடம் பணமோ, தொழில்நுட்ப தெளிவோ, வல்லுநர்களோ கிடையாது. ஆனால் சரியான மனப்பாங்கு மற்றும் தொலைநோக்குப் பார்வை காரணமாக பணம் குவிந்தது.
யார் ஒருவர் சாதாரண பிரச்சினைகளை பூதாகரமாக்கி கற்பனையில் திளைக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றியோ, பணமோ எட்டா கனி. பிரச்சினைகள் இல்லாத மனிதர்களோ, தொழிலோ கிடையாது. வெற்றியாளர்களும், செல்வத்தை குவித்தவர்களும் தீர்வை நோக்கி பயணித்தார்கள். மற்றவர்களோ தங்களுடைய பணிகளை சரிவர, திறம்பட செய்யாததற்கான காரணங்களை கூறி தங்களை தாங்களே மன்னித்தார்கள்.

ஜே.கே. ரோலிங் (Harry Potter) என்பவர் தன்னுடைய முதல் புத்தகத்தை வெளியிடும்போது தன் பெண் குழந்தையை வளர்ப்பதில் தீவிரமாக இருந்தார். ஆனாலும் அவர் குழந்தையோடும் எழுத்தோடும் போராடி, முடியாது என்ற பதில்களை விழுங்கி வெற்றியை தொட்டார் என்பது வரலாறு. வெற்றிக்கு உறுதியான நிலைப்பாடு இன்றியமையாதது. உறுதியான நிலைப்பாடு உள்ளவர்கள் வெற்றியை என்றேனும் அடைந்தே தீருவார்கள். இன்றைய தினம் அத்தனை நாவல்களிலும் உலகத்திலே அதிக அளவு செல்வத்தை குவித்தவர் இவரே ஆவார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் தத்தெடுத்த வளர்ப்பு பிள்ளை. கல்லூரிக்கு பணம் கட்ட இயலாதவர். ஆனால் அவருடைய நிலைப்பாடும், தெளிவான தொலைநோக்கும் செல்வத்தை குவித்தது. முடியுமா என்ற மலைப்பை முடித்துக் காட்டியவர். குழப்பமான, கடினமான நடைமுறைகளை எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் மாற்றி உறுதியான நிலைப்பாடு, தொலைநோக்கு பார்வை, சாதிக்க முடியும் என்ற மன உறுதி மற்றும் எவரும் தொட முடியாத சிகரத்தை தொட்ட சிறப்பு அனைத்தும் ஏழையாக மடிவதற்கு அல்ல, செல்வத்தோடு வாழ அவரே தேர்ந்தெடுத்த வழிமுறை. நாராயணமூர்த்தி செல்வத்தை தங்களைத் தேடி வரச்செய்தார். யாரும் நம்பிக்கை கொள்ளாத காலத்தில் தன் திறமை மீது நம்பிக்கையும் நாட்டில் உள்ள ஏராளமான பொறியாளர்களின் திறமையும், முன் எப்போதும் இல்லாத வெற்றி அடைய வழிகாட்டும் என்று தீவிரமாக நம்பினார். வெற்றி அடைந்தவர்களும், செல்வத்தை குவித்தவர்களும் சவால்களை கண்டு ஓடி ஒளிவதில்லை. எத்தகைய கடின இலக்கையும் எதிர்கொண்டு முடியவே முடியாது என்ற சூழ்நிலையில் விட்டு விலகுதல் தோல்வி எனப்படும்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் யாரும் எட்ட முடியாத சிகரத்தை தொட்டவர். அவருடைய விளையாட்டு திறமை முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவரும் முடிவுரை எழுதி காத்திருந்தனர். இந்நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதை போல விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் ‘வெல்பவர்கள் விட்டு ஓடுவது இல்லை, விட்டு ஓடுபவர்கள் வெல்ல முடியாது' என்ற கூற்றினை நூறு சதங்களை கடந்து நிரூபித்துக் காட்டினார்.

மேலே சொன்ன வால்ட் டிஸ்னி, திருபாய் அம்பானி, ஜே.கே. ரோலிங், ஸ்டீவ் ஜாப்ஸ், நாராயண மூர்த்தி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய அனைவரின் முயற்சிகளும், மனப்பாங்கும் எவ்வாறு வெற்றிக்கு வழிகாட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் கூறுகிறார். மனப்பாங்கை அறிந்து கொள்வதற்கு பத்து வெவ்வேறு வகையான கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன (பக்கம் 86).
தீர்மானமான தொடக்கம், தளராத தொடர் முயற்சி, எதிர்பாராத தடங்கல்கள் இவை அனைத்தையும் வெற்றிகரமாக கையாள்பவர்கள் வெற்றி படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வெயிட் பிலிப் அவர்களின் கூற்றை ஆசிரியர் அருமையாக கோடிட்டு காட்டியுள்ளார். பணத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை வெகு தெளிவாக எடுத்து கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக ஓய்வு கால பணப்புழக்கம் மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகளை வழிமுறைகளுடன் ஆசிரியர் எடுத்து கூறுகிறார். ஊழலை பற்றிய ஆசிரியரின் மனத்தாங்கல் உண்மையை எடுத்துரைக்கிறது (பக்கம் 240).

செல்வத்தை சேர்ப்பவர்கள் உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதில் கட்டாயம் இல்லை. அதேபோல உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளவர்கள் திறமையான முறையில் செல்வத்தை சேர்த்தவர்கள் என கருதமுடியாது. திறமையான செல்வம் சேர்த்தவர் அருகில் உள்ள குடிசையிலும் இருக்கலாம். அதன் முக்கிய கூறுகள் -

தேவைக்கு மேல் இருக்க கூடிய பணம்.
முடிவுகள் பணத்தால் பாதிக்கப்படக் கூடாது.
விரும்பும் வாழ்க்கையை வாழ்வது. சுருங்கக் கூறின் பணம் ஒருவரை படுத்தக்கூடாது.
பணத்தை வென்றவர்கள் எப்பொழுது தங்களுடைய செயலை நிறுத்திக்கொண்டு, இருக்கும் பணத்தை எப்படி செலவு செய்வது என்பதை தெளிவாக அறிவார்கள்.
பணம் வாழ்க்கையை முழுமையாக வாழ உதவுகிறது.
பணம் அடிப்படை நம்பிக்கைகளை வலுவூட்டு கிறது.
பணத்தை வென்றவர் லட்சாதிபதிகளில் ஒருவராக இருந்தாலும் லட்சத்தில் ஒருவராகவே இருப்பார்.
பணத்தை வென்றவர்களுக்கு கீழ்கண்ட குணாதிசயங்கள் தவிர்க்க முடியாதவை:
1.நம்பிக்கை கொள்வது.
2.அறிவை தேடுதல்.
3.சரியான நடவடிக்கை எடுத்தல்.
4.யதார்த்தமாக இருத்தல்.
5.அர்ப்பணிப்புணர்வு.
284 பக்கங்களில் ஒரு சிறிய உலகை உருவாக்கி பணம் சம்பாதிப்பது என்பது வேறு, பணத்தை வெல்வது என்பது வேறு என்ற கருத்தை தெளிவான உதாரணங்களுடனும், யதார்த்த நடையிலும் அர்ப்பணிப்புணர்வோடு நூலாசிரியர் எடுத்துக்கூறியுள்ளார். பணத்தை வெல்பவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment