Friday, November 7, 2014

கருப்பு பண விவகாரத்தில் திடீர் திருப்பம் : 289 பேர் கணக்கில் பணம் காணோம்



தினகரன்  நவம்பர்  7, 2014

புதுடெல்லி: வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில், 289 பேர் கணக்குகளில் பணம் இல்லை எனவும், 122 பெயர்கள் இரு முறை இடம்பெற்றுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

இதனால் மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியல் சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்த தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், ராதா டிம்ளோ, பங்கஜ் சிமன்லால் லோதியா ஆகியோரது பெயர்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் 27ம் தேதி தாக்கல் செய்தது.

 மற்றவர்கள் மீது விசாரணை நடப்பதாகவும், வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அவர்களது பெயர்கள் தெரிவிக்கப்படும்.

 அதனால் கருப்பு பணம் பட்டியலில் உள்ள அனைவரது பெயர்களை தாக்கல் செய்யும் படி, ஐ.மு. கூட்டணி அரசுக்கு உச்சநீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், ‘‘வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை பாதுகாக்க நீங்கள் குடை பிடிக்க வேண்டாம். பட்டியலில் உள்ள அனைவரது பெயரையும் எங்களிடம் கொடுங்கள். எஸ்.ஐ.டி விசாரணைக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்Ó‘ என கூறியது. 

 இந்த கடுமையான உத்தரவை அடுத்து சுவிட்சர்லாந்தில் எச்.எஸ்.பி.சி வங்கியில் கடந்த 2006ம் ஆண்டு கணக்கு வைத்திருந்த 628 பேரின் பட்டியலை மத்திய அரசு கடந்த மாதம் 29ம் தேதி தாக்கல் செய்தது. 

அந்தப் பட்டியலை நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான எஸ்.ஐ.டி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது. இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் உதவியுடன் எஸ்.ஐ.டி 150 விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியலில் 289 பேரின் கணக்குகளில் ஒரு பைசா கூட இருப்பு இல்லை என்பது எஸ்.ஐ.டி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 122 பேரின் பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டுள்ளது. 

பட்டியலில் மீதம் உள்ளவர்கள் எப்போது வங்கி கணக்கு தொடங்கினர், 

அவர்களின் பண பரிவர்த்தனை பற்றி எந்த விவரமும் இல்லை. இதனால் வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எஸ்.ஐ.டி.க்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியல் பெரும் சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையை எஸ்.ஐ.டி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இன்னும் 300 பேரிடம் எஸ்.ஐ.டி விசாரணையை தொடங்க வேண்டும். இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் வரித்தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் தகவல்களை பெற்றுத் தரும்படி மத்திய அரசிடம் எஸ்.ஐ.டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளதாகவும், 75 நாடுகளிடம் மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஐ.டி.யிடம் நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

புதிய முறை

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தாங்களாகவே அந்தந்த வங்கிகளில் தகவல்கள் பெற்று வருமான வரித்துறையிடம் அளித்தால், வரி சட்டத்தின் கீழ் குறைவான தண்டனை கிடைக்கும் வழக்குகள் பதிவு செய்யும் புதியமுறையை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (சிபிடிடி) பின்பற்றுவதாகவும் எஸ்.ஐ.டியிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இச்சலுகை வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 100 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது அமலாக்கப் பிரிவின் நிதி மோசடி சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எஸ்.ஐ.டி விரும்புகிறது.

 அதனால் அமலாக்கப் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் திறமையான அதிகாரிகளை பணியமர்த்தி கருப்பு பணம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் எஸ்.ஐ.டி முயற்சி எடுக்கிறது.