தி இந்து கா. சு. வேலாயுதன்வெள்ளி, ஜனவரி 3, 2014
இப்போதெல்லாம் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் பெறும் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தகவல் கொடுக்காமலும், அப்படி கொடுக்கும்போது சிக்கல் இல்லாமல் பதிலளிப்பதும் எப்படி?’ என்று தனியாக ஒரு குழு வகுப்பெடுத்து தப்பு செய்யும் அதிகாரிகளை காப்பாற்றிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் பெறும் உரிமை சட்டம் வந்ததிலிருந்தே ஆடிப் போயிருக்கிறார்கள் நம் அதிகாரிகள். பொது மக்கள் கேட்கும் தகவல்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரி தகவல் தராமல் இருப்பாரேயானால் மேல்முறை யீட்டின் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் செலுத்த வைக்க முடியும் என்பதும் பீதிக்கு முக்கிய காரணம்.
இதன்மூலம் பல்துறைகளிலும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் செய்யக்கூடிய தகிடுதத்தங்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றன. எனவே மக்களுக்கு முழுமை யான பயனளிக்க கூடிய சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள் லோக் சத்தா கட்சியினர்.
அது குறித்து இக்கட்சியின் மாநிலத்தலைவர் ஜெகதீஸ்வரனி டம் பேசினோம். அரசாங்க மக்கள் சாசனத்தில் அத்தியாவசியம் பெறக்கூடியதாக 150 சேவை கள் இடம் பெற்றுள்ளது. அதை அதிகாரிகள் செய்தே தரவேண்டிய தற்கான காலவரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது உதாரணமாக குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ரேசன் கார்டு குறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி பதில் தர வேண்டும். பதில் சரியானதாக இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை அதிகாரி முதலாவது அதிகாரிக்கு காலதாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.250 அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க இந்த சேவை உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. இவ்வாறு மொத்தம் 11 துறைகள் இதற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் 150 சேவைகளுக்கு மக்கள் சாசனத்தில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. ஆர்.டி.ஓவில் பழகுநர், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு என்பது ஒரு நாளில் வழங்கப்பட வேண்டும் என்பது சேவை உரிமையில் உள்ளது. அப்படி வழங்காத அலுவலர் மீது ஒரு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.
மார்ச் 2010-ம் ஆண்டு மார்ச் 7 அன்று இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. உடனடியாக மத்திய பிரதேசமும், அதைத் தொடர்ந்து பீகார்,உ.பி, ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திராஞ்சல், இமாச்சல்பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இது அமலுக்கு வந்துள்ளது!’’ என்கிறார் இவர்.
இதுபற்றி இக்கட்சியின் கோவை செய்தித் தொடர்பாளர் மனோஜ் கூறும்போது, “இந்தசட்டத்தை நன்றாக அமல்படுத்தியதற்காக மத்தியபிரதேச மாநில அரசுக்கு 2012-ம் ஆண்டு ஐ.நா. விருது கிடைத்தது.
இச்சட்டத்தை பற்றி கேரள முதல்வர் உம்மன்சாண்டி குறிப்பிடும்போது, “இனி அரசின் கருணையில் மக்கள் இல்லை. ஒவ்வொரு பொதுச்சேவையும் பெறுவது மக்களின் உரிமை. இச்சட்டம் கேரள மக்களின் ‘மேக்னா கார்ட்டா’ என்றார். இது இந்த 12 மாநிலங்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மேக்னா கார்ட்டாவாக விளங்க வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு இது உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம்!’’ என்றார்.
இந்த சட்டத்தைபற்றி :
நோக்கம் :[
மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடவுச்சீட்டு போன்ற 150 சேவைகளை, சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் இச்சேவையை பெற வழிவகுக்குகிறது.
- சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு , ஒவ்வொரு அரசு ஊழியரும் துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என கூறுகிறது.
அபராதம் :[
இச்சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் கால அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அதிகாரியின் ஊதியத்திலிருந்து, 500 முதல், 50,000 ரூபாய் வரை, அபராதமாக பிடித்தம் செய்து, மனுதாரருக்கு நஷ்டயீடாக வழங்கப்படுகிறது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறது.
நிறைவேற்றியுள்ள மாநிலங்கள் 13
- மத்தியப் பிரதேசம் - 2010
- உத்தரப் பிரதேசம் - ஜனவரி,2011
- பீகார் - மே, 2011
- பஞ்சாப் - ஜூலை,2011
- ஜம்மு காஷ்மீர் - ஜூலை,2011
- இமாச்சலப் பிரதேசம் - ஆகஸ்ட்,2011
- ராஜஸ்தான் - ஆகஸ்ட்,2011
- சத்தீஸ்கர் - செப்டம்பர்,2011
- தில்லி - செப்டம்பர்,2011
- உத்தரகண்ட் - அக்டோபர்,2011
- ஜார்க்கண்ட் - நவம்பர்,2011
- கர்நாடகம் - நவம்பர்,2011
- கேரளம் - ஜூலை,2012