தி இந்து கிருபாகரன்.ஆர்11-12-13புதன், டிசம்பர் 11, 2013
எறும்பூரக் கல்லும் தேயும்; நொடிகள் கடக்க காலமும் போகும். காதலில் விழுந்தவர்களுக்குத்தான் காலம் சடுதியில் பறக்கும். நாள்களைக் கடத்துவதே பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும். அதிலும் நூறு ஆண்டுகள் என்றால் எத்தனை பெரிய பிரம்மிப்பாக இருக்கும்? எதற்கு இந்த முன்னுரை? ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே நிகழும் இயல்பான அதிசயத்தை வரவேற்க வேண்டிதான்.
நொடி, நிமிடம், மணி, தினம், வாரம், மாதம், ஆண்டு இந்த ஒழுங்கில் அவ்வப்போது சில அபூர்வ நிகழ்வுகள் வெளிப்படும். உதாரணத்துக்கு, கடந்த ஆண்டில் 12-12-12 சிறப்பு நாளாக அறியப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டில் 11.12.13!
தொடர்ச்சியாய் எழுதி வைத்தது போல அமைந்த இந்த தினம், இனி என்று வரும்? அதற்கு நூறு ஆண்டுகள் கடக்க வேண்டும். அதாவது 2113-ம் ஆண்டில்தான், மனித குலம் மீண்டும் 11.12.13 என்ற தினத்தை தரிசிக்கும்.
இதுபோன்ற நூற்றாண்டு களுக்கு ஒருமுறை வரும் வித்தி யாச தினங்களை மேற்கத்திய நாடுகளில் கொண்டாடும் விதமே அலாதியானது. திருமணம், நிச்சயதார்த்தம், காதலை வெளிப்படுத்துதல் எனத் தொடங்கி, நாள் ஓடிவிடுமே என்று அறுவைச்சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக்கொள்வது வரை வரலாறாய் மாற்றி வருகின்றனர்.
தபால் முத்திரையே எளிய வழி
இதுபோன்ற கலாச்சாரம் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்த நாட்களை மாணவ, மாணவிகளும், சிறுவர், சிறுமியர்களும்கூட தங்களது பொக்கிஷங்களாக மாற்றலாம். அதற்கு தபால் முத்திரைகள் மட்டுமே எளிய வழி என்கிறார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற, தேசிய விருது பெற்ற தபால்துறை அலுவலர் நா.அரிஹரன்.
‘என்றுமே அழிக்கப்படாத, காலத்தால் அழிக்க இயலாதபடி, ஒவ்வொரு நாட்களையும் நினைவுகூர்வது தபால்துறை முத்திரை மட்டுமே. தபால் வில்லைகள்கூட, சில நேரங்களில் தவறுதலாக அச்சிடப்படலாம். ஆனால், தபால் முத்திரைகள் என்றுமே தவறாவதில்லை. காரணம், இன்றுவரை தவறாத நடைமுறையால், மனிதனால் இந்த முத்திரைகள், இன்றுவரை அச்சிடப்படுகின்றன’.
‘அட்டைக்கு மூன்று ரூபாய் வரை செலவழித்து, தயாரித்து நமக்கு வெறும் 50 பைசாவில் தபால்துறை தரும், ஒரு வரலாற்று நினைவுப் பொருளே இந்த தபால் அட்டையும், அதில் உள்ள முத்திரைகளும். இவற்றை, பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தாலே, பெருமையாய் இருக்கும். அதை பாதுகாத்து வைத்து நமது குழந் தைகளுக்கு காட்டினால், எவ் வளவு பெருமையாய் இருக்கும்?’
‘மாணவ, மாணவிகள் நாணய சேமிப்பு, தபால் வில்லைகள் சேமிப்பு என, பல சேமிப்புகளில் திறமைகளைக் காட்டுகின்றனர். அதன்படியே இந்த தபால் முத்திரைகளையும் ஆவணப்படுத்துங்கள். அது ஒவ்வொரு நாட்களையும், உங்களிடமே விட்டு வைக்கும். அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாணயங்கள் முதல், எதையும் நாம் இதுபோன்ற சிறப்பான நாட்களில் குறிப்பிட்டுப் பெற முடியாது. ஆனால், அதற்கு விதிவிலக்கு, தபால் முத்திரைகள் மட்டுமே’ என்கிறார் நா.ஹரிகரன்
தனது சேகரிப்புகளான பல முக்கிய தபால் முத்திரைகளை நமக்குக் காட்டினார். 7.7.07, 9.9.09, 10.11.12, 12.12.12 என இவர் சேகரித்துள்ள நூற்றாண்டு சிறப்புமிக்க தபால் முத்திரைகள் ஏராளம். அதில் குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நாளான 31.12.99-ஐயும், 1.1.2000 என்ற முத்திரையையும் வாங்கி பாதுகாத்து வைத்துள்ளார்.