-
இதை எழுதும்போது எனது மகன் ஷான், காதில் பொருத்தப்பட்ட ஹெட்போன் மூலம் ‘கேட் எம்பயர்ஸ்' இசைக் குழுவின் பாடலைக் கேட்டபடி வீட்டுக்கு வெளியே ஒரு சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறான்.
அழகான நண்பகல் நேரமிது. ஷான், கல்லூரியில் சேர்வதற்கு முன்னதான ஒரு கோடைக் காலம்! தனது வாழ்வில் பல கோடைக் காலங்களை ஷான் பார்ப்பான் என்றாலும், இந்த சில வாரங்கள்தான் அவன் சுதந்திரமாக உலவுவான்.
எனது மகன்களைப் பற்றிய நினைவுகளுடன் எனது சிறுவயது நினைவும் என்னைச் சூழ்கிறது.
சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், ரிச்சர்டு லிங்க்லேட்டர் இயக்கிய ‘பாய்ஹுட்', 8 வயதில் ஆபிரகாம் லிங்கனை பாதித்த அடிமை முறை பற்றிய திரைப்படமான ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' ஆகியவற்றைப் பார்த்தேன்.
இரு திரைப்படங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. ‘பாய்ஹுட்' படத்தின் தொடக்கக் காட்சியில், புல்தரையில் படுத்துக்கொண்டே வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களைப் பார்க் கிறான், ஏழு வயது மேசன். ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' படத்திலும் இதே போன்ற காட்சி வருகிறது. எதிர்கால எழுச்சி நாயகர்கள் இருவரும் கோடைக் கால மேகங்களின் நகர்வை ரசிக்கின்றனர்.
1960-களில் நானும் அதுபோன்ற கோடைக் காலங்களைக் கடந்துவந்திருக்கிறேன். ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறும் ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் பிற்காலத்தில் நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
எனினும் எனது இளமைக்காலத்தில், ஒரு சிறுவனுக்குரிய அனைத்து செயல்களையும் செய் திருக்கிறேன். பேரானந்தத்துக்குரிய அனுபவம் அது. பென்சில்வேனியாவின் வயல்வெளிகளிலும் வனப் பகுதியை ஒட்டிய கிராமப்புறங்களிலும் எனது இளமைக் காலம் கழிந்தது. ஏரிகளில் மீன்பிடிக்கச் சென்றதும், பாலங்களிலிருந்து ஓடைகளில் குதித்து நீந்தியதும், அப்பாவுடன் இணைந்து வெடி வெடித்ததும் நினைவில் நிற்கின்றன. கோடைக் கால விடுமுறையின்போது கைவிடப்பட்ட பள்ளி மைதானத்தின் பின்புறம் கெவின் வால்ஷ் என்ற சிறுவனிடம் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதும்தான்!
எனது துணைவி டெய்ர்ட்ரி தனது கோடைக் கால இளமை தருணங்களைப் பற்றிச் சொல்லி யிருக்கிறாள். ஆச்சரியம் என்னவென்றால், எனது இளமைக் கால நினைவுகளின் பட்டியலுக்கும் அவளுடைய அனுபவங்களுக்கும் பெரிய வித்தி யாசமில்லை. பிற்காலத்தில், சங்கடம் தரும் வகையில் பாலின மாற்றத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இளமையில் ஒரு சிறுவனாக நான் கழித்த கோடைக் கால நினைவுகள் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. அந்தச் சிறுவனின் கனவுகள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.
‘தி பெட்டர் ஏஞ்செல்ஸ்' திரைப்படம் பனிப் போர்வை போர்த்திய லிங்கன் நினைவிடத்திலிருந்து தொடங்கி, 1817-ம் காலத்திய இண்டியானா பகுதிக்கு சட்டென மாறுகிறது. காட்சிகள் செல்லச் செல்ல அந்தச் சிறுவன் எப்படிப் பின்னாட்களில் அமெரிக்காவின் அதிபராகிறான் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. தனக்குள் இருந்த சிறுவனைப் போர்க்களத்தில் லிங்கன் உணர்ந்திருப்பாரா?
முதிர்ந்த தங்கள் உடல்களுக்குள் தங்கள் இளம் பிராயத்துச் சிறுவர்களைத் தேடும் ஆன்மாக்கள் இந்த உலகம் முழுதும் நிரம்பியுள்ளன. எனக்குள் இருந்த சிறுவனின் தேடலில் பல முறை நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை ஒரு சிறுவனாகப் பார்த்தவர்களில் யாரும் இன்று உயிருடன் இல்லை. அதில் எனக்கு வருத்தமுண்டு. எனக்குள் நான் அடிக்கடிக் கேட்டுக்கொள்ளும் கேள்வி: “நான் எப்படி, இப்படி ஆனேன்?” இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது என்பது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான அமைதியைக் கண்டுபிடிப்பதற்கு ஒப்பானது.
இன்றும், வானில் மிதக்கும் மேகங்களைப் பார்க்கும் சமயங்களில், இளம் வயதில் கடந்துவந்த கோடைக் காலங்களை நினைத்துக்கொள்வேன்.
என் மகனைப் பார்க்கும்போது என்னுள் அன்பும், இழப்பின் வலியும் பெருகுகின்றன. ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' படத்தில் லிங்கனின் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை என் மகனிடம் சொல்ல விரும்புகிறேன்.
லிங்கன் தனது வீட்டை விட்டுத் தொலைதூரப் பயணத்தைத் தொடங்கும்போது, ஆசிரியர்சொல்கிறார்: “
இந்த வனத்தில் அவன் இனி இருக்கப்போவதில்லை.
அவன் தனது சுவடுகளைப் பதிப்பான்!”
தி இந்து: வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014