Saturday, April 27, 2013

பேராபத்தை நோக்கி...






First Published : 27 April 2013 03:20 AM IST
1990-இல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இப்போது இருக்கிறது என்று சொன்னால், சராசரி இந்தியனால் அதை நம்ப முடியாது. பாட்டாளியின் கையில் செல்பேசி; கிராமப்புறக் கடைகளிலும், உணவகங்களிலும்கூடக் கோகோ கோலா; குடிசைகளில்கூட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி; எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்கள்; வாரந்தோறும் புதிது புதிதாக மோட்டார் வாகனங்கள்; சுங்கம் வசூலிக்கப்படும் தங்க நாற்கரச் சாலைகள்; பல அடுக்குக் குடியிருப்புகள் என்று விஞ்ஞானத் தொழில்நுட்பத்தில், நவநாகரிக அடையாளத்தின் அத்தனை அம்சங்களும் கண்ணுக்குத் தெரியும்போது, நமது பொருளாதாரம் கால் நூற்றாண்டு காலத்துப் பொருளாதாரத்தைவிடப் பின்தங்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்பத்தான் முடியாது. ஆனால், நிதர்சன உண்மை என்னவோ அதுதான்!
1951-இல் இருந்து 1981 வரையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம், அதாவது ஜி.டி.பி. (உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு) 3.4 விழுக்காடு. 1981-இல் இருந்து 1991 வரையிலான ஜி.டி.பி.யின் சராசரி 5.2 விழுக்காடு. இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. விகிதம் 5 விழுக்காடோ, அதற்குக் கீழோ இருக்கக்கூடும். கடந்த பத்து ஆண்டுகளில் மிகக்குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஏற்படப்போவது இப்போதுதான்.
  இதற்குப் பெயரா வளர்ச்சி?
ஏனைய பொருளாதாரங்களைவிட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு நமது வளர்ச்சி 6.1 விழுக்காடு முதல் 6.7 விழுக்காடு வரை வளரக் கூடும் என்றும் ஒரு மாயத்தோற்றத்தை மத்திய அரசும், ஆளும் கட்சியும் பரப்பிக் கொண்டிருந்தாலும், எதார்த்த நிலைமை அப்படி இல்லை. இந்தியா இதற்குமேல் அடுத்த சில ஆண்டுகள் வளர்வது சாத்தியமில்லை என்றுகூட சர்வதேசப் பொருளாதார ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. நமது ஆட்சியாளர்கள் கடவுள்போல நம்பியிருக்கும் "ஐ.எம்.எப்' என அறியப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியமேகூடத் தனது சுற்றறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி 5.7% ஜி.டி.பி.யாகத்தான் இருக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால், மேலே குறிப்பிட்ட வசதிகள் எல்லாம் குறைந்துவிடுமா என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம். அந்த வசதிகள் குறையாது. ஆனால், வேலைவாய்ப்பு குறையும். விலைவாசி அதிகரிக்கும். இருக்கும் வசதிகளைக் குறைத்துக்கொள்ள மனது வராது. நிறையக் கடன் வாங்குவார்கள். கடனாளிகளின் கதி எப்படியாகும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? கிராமப்புற விவசாயிகள் தற்கொலைபோல நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் தற்கொலைகளும் அதிகரிக்கும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் 72.26 விழுக்காடு பேர் வாழ்கின்றனர். ஏறத்தாழ 24 கோடிக் குடும்பங்கள் வாழும் கிராமப்புறங்களில், 10 விழுக்காடு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களிலோ, 7.3 விழுக்காடு பேர் வேலையில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம், அடிப்படை வேலைவாய்ப்புத் தொழில்கள் என்று கருதப்படும் விவசாயம் (57%) கட்டுமானத் தொழில் (7.2%), தொழிற்சாலைகள் (6.7%), ஏனைய சேவைகள் (6.3%) போன்றவை எதுவுமே லாபகரமாக இயங்காமல் இருப்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உற்பத்தியை உறுதி செய்யாத திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது இன்னொரு மிகப்பெரிய வேதனை.
சாலை மேம்படுத்துதல், குளங்களில் தூர் வாருதல் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் உணவு உற்பத்தி, தொழில் உற்பத்தி போன்றவற்றை உறுதிப்படுத்தும் வேலைவாய்ப்புகள். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் ஆக்கபூர்வமான உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலாமல், அன்றாடச் செலவுக்கு பயனாளிகளுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் வேண்டுமானால் கிடைக்கலாமே தவிர, பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்படாது.
ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து 33,000 கோடி ரூபாய் விநியோகிக்கப்படுவது சரி. அதனால் ஏற்படும் உற்பத்திப் பெருக்கம் என்ன என்று கேள்வி கேட்க இங்கே யாருமில்லை. ஜி.டி.பி. வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி 2004-இல் அமைந்தது முதல், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது புறந்தள்ளப்பட்டு, சமூகப் பாதுகாப்பு என்கிற பெயரில் பல்வேறு வாக்கு வங்கித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் விளைவுதான் இப்போது, பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருப்பதும், வேலைவாய்ப்புக் குறைந்திருப்பதும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மத்திய அரசிடம் அனுமதிக்காக முடிவெடுக்கப்படாமல் தேங்கி நிற்கும் திட்டங்கள் மட்டும் 396. இவற்றில் 108 திட்டங்கள் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. 111 திட்டங்கள் கட்டமைப்புத் திட்டங்கள். 146 திட்டங்கள் கனிம வளச் சுரங்கங்கள் தொடர்பானவை. வனத் துறை அனுமதிக்காகக் காத்திருக்கும் திட்டங்கள் 409. இவை ஏன் முடியும், முடியாது என்று முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்க வேண்டும்? அரசு, இந்தத் திட்டங்களை ஏன் தேங்க வைத்திருக்கின்றது? பேரம் படியாததால் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், நிச்சயமாகச் செயல்பட மறந்து விட்டதால் என்று சொல்லிவிட முடியும்.
இந்தியப் பொருளாதாரம் பேராபத்தை எதிர்நோக்குகிறது. நாற்சந்தியில் இந்தியாவை நிறுத்தியிருக்கிறார்கள்.

மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், தேசம் சீர்குலைந்துவிடும்!