செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2012, 12:05 [
டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை குத்தகைக்குத் தந்த நிறுவனங்கள் அதைத் திரும்பப் பெற படாதபாடுபட்டு வருகின்றன.
கிங்பிஷர் நிறுவனம் இந்திய விமானத்துறை ஆணையத்துக்கு ரூ. 290 கோடி நிலுவை வைத்துள்ளது. அதே போல மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல நூறு கோடியை நிலுவை வைத்துள்ளது.
அதே போல தனக்கு விமானங்களை குத்தகைக்குத் தந்த நிறுவனங்களுக்கும் கிங்பிஷர் பல்லாரயிரம் கோடி நிலுவை வைத்துள்ளது.
பெரும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள கிங்பிஷர் நிறுவனம், பெரும்பாலான விமான சேவைகளை ரத்து செய்துவிட்டது. இதையடுத்து விமானங்களைத் திரும்பப் பெற குத்தகைக்குத் தந்த நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
ஆனால், தனக்குத் தர வேண்டிய பணத்தை கிங்பிஷர் தராத வரை விமானங்களைத் தர மாட்டோம் என விமான நிலைய ஆணையம் கூறி வருகிறது. இதனால் குத்தகைக்குத் தந்தவர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகின்றன.
சமீபத்தில் இரு விமானங்களைத் திரும்பப் பெற கிங்பிஷரிடம் கையில், காலில் விழுந்து ரூ. 1 கோடியை வாங்கி விமான நிலைய ஆணையத்திடம் கட்டிவிட்டு, விமானங்களை மீட்டுச் சென்றுள்ளது ஒரு நிறுவனம்.
கிங்பிஷரிடம் உள்ள 40 விமானங்களில் 30 விமானங்கள் குத்தகைத்து எடுக்கப்பட்டவை. இதை குத்தகைக்குத் தந்த பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை ஆகும்.
இந்த விமான நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 3,000 கோடி தேவைப்படுவதாகத் தெரிகிறது. இந் நிலையில் சம்பள பாக்கி கோரி கடந்த சனிக்கிழமை முதல் கிங்பிஷர் விமானிகள் மீண்டும் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
சம்பளம் தொடர்பாக விஜய் மல்லையா அவ்வப்போது அனுப்பும் 'விளக்க இ-மெயில்களை' அந்த நிறுவன ஊழியர்கள் யாரும் இப்போதெல்லாம் நம்புவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 8,000 கோடி கடன் வைத்துள்ள கிங்பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.