- தி இந்து பி.ஏ. கிருஷ்ணன் :வியாழன், நவம்பர் 14, 2013
நேருவின் உலகப்புகழ் பெற்ற சுயசரிதையைப் படித்த தாகூர், 1936-ம் ஆண்டு நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் நேருவை “ரிதுராஜ்” - வசந்தத்தின் இளவரசன் - எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் எழுதி 11 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் பிறந்தபோது, இந்து-முஸ்லிம் கலவரங்கள் நாட்டை உலுக்கிக்கொண்டிருந்தன. வசந்தம் வெகுதூரத்தில் இருந்தது. இருள், இதோ கவ்வப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தது. மேற்கத்திய மேதைகள் இந்தியா பல துண்டுகளாக உடைவதற்கு அதிக நாட்கள் எடுக்காது என்று எழுதிக் குவித்தனர்.
அன்று நாட்டை ஆளத் தேவையாக இருந்தது எதிர்கால இந்தியாவைப் பற்றிய நம்பிக்கை. நம்பிக்கையை உண்மையாக்க வேண்டும் என்ற மனவுறுதி, செயல்திறமை, அப்பழுக்கற்ற நாட்டுப்பற்று. இவையெல்லாம் அன்றிருந்த தலைவர்களுக்கு இருந்தது என்பது நாடு செய்த தவப்பயன் என்றுதான் கூற வேண்டும். இருளகன்று வசந்தம் பிறந்தது இவர்களால்தான்.
மக்கள் தலைவர்
தலைவர்கள் மக்களோடு மக்களாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தி. மற்றவர் நேரு. பஞ்சாபி எழுத்தாளர் துக்கல், ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதுகிறார். தில்லியின் கன்னாட்ப்ளேஸில் இருந்த முஸ்லிம்களின் கடைகளைக் கூட்டம் ஒன்று சூறையாடிக்கொண்டிருந்தது. திடீரென்று காரொன்றிலிருந்து நேரு இறங்கி, கூட்டத்துக்குள் புகுந்து, கண்ணில் பட்ட ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார். ‘‘என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’’ என்று இரைந்தார். கூட்டம் உடனே கலைந்துவிட்டது. அறை வாங்கியவர், ‘‘என்னைத்தான் நேரு அறைந்தார்” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு திரிந்தாராம்.
நேருவின் வீட்டினுள் நுழைய முயன்று, காவல்காரர்களால் தடுக்கப்பட்ட ஒருவர் நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு கடிதம் எழுதினார். நேருவின் செயலாளரிடமிருந்து பதில் வந்தது: ‘நீங்கள் மன்னிப்பீர்கள் என்று பிரதமர் நம்புகிறார்’.
சில நாட்கள், வேலை முடிந்ததும் இரவுக் காட்சி சினிமாவுக்கு அவர் செல்வாராம், நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு. ஹைதராபாத் நிஜாமுக்கும் நேருவுக்கும் கடிதப் போக்குவரத்து இருந்தது. கடிதம் ஒன்றில் நேரு எழுதுகிறார் - நிஜாமின் பேரனை அவன் மனதுக்குகந்த, படித்த பெண்ணை மணம்புரிய அனுமதிக்கும்படி! நேருவின் இந்த மானுடம்தான் எல்லோரையும் கவர்ந்தது; அவரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
வலிமைகளின் ஊற்றுக்கண்
இந்தியாவின் வலிமைகள் என்று நாம் கருதுபவை யாவை?
ஜனநாயகம்; மாற்றுக் கொள்கைகளுக்குப் போதிய இடம்தர வேண்டும் என்ற வலுவான நம்பிக்கை; மதச்சார்பின்மை பக்கம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல் அரசியல் களத்தில் இறங்க முடியாத கட்டாயம்; அடிப்படைக் கட்டமைப்புகள்; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள்.
இவையனைத்துக்கும் ஊற்றுக்கண் நேரு
இவற்றை உருவாக்க நேருவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிட மிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். பல தருணங்களில் அவர் தன்னந்தனியாகச் செயல்பட வேண்டிய கட்டாயம். எழுத்தாளர் ஒருவர் நேருவை ‘கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கும் மேதை’போன்றவர் என்று குறிப்பிட்டார்.
நேருவின் சோஷலிசம்
நேருவை முதலாளித்துவத்தின் தரப்பிலிருந்து விமரிசிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். நேருவின் கொள்கைகளின் மூலம் அதிகப் பயன் பெற்றவர்கள் இவர்கள்தான். கட்டற்ற சந்தையின் பெருமையைப் பேசும் இவர்கள், நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜுடித் ப்ரௌனின் வரிகளைப் படிக்க வேண்டும்:
சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங் களுக்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அரசுக்கு மட்டுமே வள ஆதாரங்களும் அதிகாரமும் இருக்கின்றன என்று நம்பியவர் நேரு மட்டும் அல்ல. போன நூற்றாண்டின் நடு ஆண்டுகளில் உலகம் முழுவதுமுள்ள அறிஞர்களின் மத்தியில் நிலவிய கருத்தொற்றுமைகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக, இரண்டாம் உலகப்போரினால் பேரிழப்புகளை அடைந்த நாடுகளை மறுகட்டமைப்பதிலும், ஏகாதிபத்தியத்திலிருந்து மீண்ட நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவதிலும், இந்த வழிமுறையே சரியானது என்று பலரும் எண்ணினர். இந்தியாவிலும் இந்தக் கொள்கையை பலர் ஆதரித்தனர். பெருமுதலாளிகளும்கூட. நாட்டைக் கட்டமைப்பதிலும் தொழில்மயமாக்குவதிலும் அரசு முன்னிற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
நேரு, சோஷலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் இப்பணியில் தன்னுடன் தோளோடு தோள் நிற்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், லோகியா, கிருபளானி போன்ற தலைவர்கள் ஆதரவு தருவார்கள் என்ற அவரது நம்பிக்கை வீணானது. கம்யூனிஸ்ட்டுகள் கனவுலகத்தில் இருந்தனர்.
கட்டமைப்பின் முதலாண்டுகள் வசந்த ஆண்டுகள்; எல்லோருக்கும் இல்லா விட்டாலும் குறிப்பிடத் தக்க அளவில் பலருக்கு. வசந்தத்தின் இளவரசன் நேரு.
மறக்கப்பட்ட சாதனை
நேருவைப் புகழ்பவர்கள்கூட அவரது மகத்தான சாதனை ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இந்துச் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டதில் முக்கியமான பங்கு நேருவுடையது. அம்பேத்கர் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் வரைவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பின் பரிமாணங்களை நாம் இன்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அன்றைய குடியரசுத் தலைவரான ராஜேந்திரப் பிரசாத் சட்டத்துக்கு அனுமதி மறுப்பேன் என்று பயமுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகளை தில்லியில் எரித்தனர். சட்டம் கொண்டுவர இயலாததால் அம்பேத்கர் பதவி விலகினார். நேருவால் உறுதியுடன் செயல்பட முடியவில்லை என்று அம்பேத்கர் குற்றம்சாட்டினார். ஆனால், நேரு 1952 தேர்தலின் கொள்கை அறிக்கையில் இந்தச் சட்டங்கள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். காங்கிரஸ் வெற்றியடைந்ததும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
முதல்முறையாக, இந்துப் பெண்களுக்குச் சொத்து உரிமை கிடைத்தது; பலதார மணம் தடை செய்யப் பட்டது; விவாகரத்து அனுமதிக்கப்பட்டது; கலப்புத் திருமணம் அனுமதிக்கப்பட்டது.
சீனாவுடன் போர்
நேருவுக்குப் பின்னடைவு ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம், 1962-ல் நடந்த சீனப் போர்தான். அவர் சீனாவை நம்பிக் கெட்டுப்போனார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. நட்பு மூலம் காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று அவர் நினைத்ததன் அடிப்படை, படேலுக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து விளங்குகிறது: நாம் ராணுவத்தைப் பலப்படுத்த முயன்றால் நமது திட்டங்களுக்குச் செலவுசெய்யப் பணம் இருக்காது. பலப்படுத்தினாலும் ராணுவம் நமது விரிந்த எல்லைகளை முழுவதுமாகக் காவல் செய்வது இயலாத காரியம்.
ஆனால், போர் தற்காலிகமானது, நட்புதான் நிலைத்து நிற்கக்கூடியது என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். அது தவறு அன்று என்பது இன்று நமக்கு விளங்குகிறது.
தீர்க்கதரிசி
அவரது செயலராகப் பணிபுரிந்த குண்தேவியா, ‘‘கம்யூனிஸ்ட்டுகள் பதவிக்கு வந்தால் எவ்வாறு எதிர்கொள்வது” என்று நேருவிடம் கேட்டார். ‘‘கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவில் ஒருபோதும் பதவியைக் கைப்பற்ற முடியாது’’ என்றார் நேரு. குண்தேவியா எழுதுகிறார்:
“நேரு சொன்னார், இந்தியாவுக்கு நேரக் கூடிய மிகப் பெரிய அபாயம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. வலதுசாரி இந்து மதவாதம்.”