ஆதாரம் : தினமலர் :டிசம்பர் 31,2011
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.6 விழுக்காடு அதிகரித்து 326.6 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலர்களாக அதிகரித்துள்ளது.
2011ம் ஆண்டில் வெளி நாட்டில் இருந்து வாங்கிய வணிகக் கடன்கள், ஏற்றுமதிக் கடன்கள், குறைந்த கால கடன்கள் ஆகியவற்றின் கூட்டுத் தொகை இதுவாகும்.
இது கடந்த ஆண்டு 306.4 பில்லியனாக இருந்தது. வெளி நாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளில் உள்ள நிதிகள், வணிகக் கடன்கள் ஆகியவையும் இதில் அடக்கமாகும்.
இந்தியாவின் மொத்த கடனில் குறைந்த கால கடன்கள் 21.9 விழுக்காடு, நீண்ட காலக் கடன்கள் 78.1 விழுக்காடு ஆகும். வெளி நாட்டில் இருந்து வாங்கிய வர்த்தகக் கடன்கள் 30.3 விழுக்காடு, வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்பு நிதி 16 விழுக்காடு, மற்ற கடன்கள் 15 விழுக்காடு. 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை இந்தியா வாங்கிய வர்த்தக கடன்கள் 27.4 விழுக்காடு அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால்,வெளி நாட்டில் இருந்து வாங்கிய வர்த்தகக் கடன்களுக்கு அளிக்க வேண்டிய வட்டிக்கு ரூபாயில் அதிகம் செலவழிக்க வேண்டியதிருக்கும் என்பதால் இது கவலையளிக்கக் கூடியதாகும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.