ஒன்இந்தியா :24 july 2012
சென்னை: வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை வருமான வரி அலுவலகத்தில் ரிட்டன் தாக்கல் செய்ய 40 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது.
இந்தியாவில் மாத சம்பளம் பெறுவோர், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் என்று பலதரப்பட்ட மக்களும் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. வரி செலுத்திய பிறகு ரூ.5 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களை தவிர, மற்றவர்கள் ரிட்டன் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி ரிட்டன் மனு தாக்கல் செய்ய உள்ளவர்களின் நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள முதன்மை வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் 40 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு கவுண்டர்கள் வரும் 28 முதல் 31ம் தேதி மாலை வரை செயல்படும். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்த கவுண்ட்டர்கள் செயல்படும். சிறப்பு கவுண்ட்டர்கள் சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சீதா.செந்தாமரைக்கண்ணன் கண்காணிப்பில் செயல்பட உள்ளது.
முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், 25க்கும் மேற்பட்ட ரிட்டன் மனுக்களை தாக்கல் செய்ய வருவோர் ஆகியோருக்கு, தனி கவுண்ட்டர்கள் செயல்படும். ரிட்டன் தாக்கல் செய்ய தேவையான விண்ணப்பத்தை வருமான வரித்துறை அலுவலங்களில் பெற்று கொள்ளலாம். மேலும் இணையதளத்திலும் அதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் பூர்த்தி செய்து கொடுக்கும் விண்ணப்பம், கலர் படிவமாக இருக்க வேண்டும்.
வருமான வரி ரிட்டன் படிவத்தில் பான் கார்டு நம்பர், முகவரி, வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ரிட்டன் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு உதவி செய்யவும், பான் கார்டு நம்பரை சரி பார்க்கவும் 15 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் வருமான வரித்துறை அலுவலகங்கள் இருந்தாலும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் ரிட்டன் தாக்கல் செய்ய சென்னையில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.