லாஜிக்கோடு கதை சொல்வது ஒரு ரகம். லாஜிக்கே இல்லாமல் மசாலாக்களை மட்டுமே நம்பிக் கதை பண்ணுவது இன்னொரு ரகம். ‘மான் கராத்தே’ இரண்டாவது ரகம்.
வலுவான ஒரு முடிச்சின் அடிப்படையில் சங்கிலித் தொடர் திரைக்கதை அமைக்கும் ஏ.ஆர். முருகதாஸ் எழுதிய மிகப் பலவீனமான கதை இது.
பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலையிழக்கும் ஐந்து நண்பர்கள் (மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்) அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் கையில் சித்தர் ஒருவர் ஒரு செய்தித்தாளைக் கொடுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வரவிருக்கும் செய்தித்தாள் அது. அதில் ஒரு செய்தி இவர்களைப் பற்றியது. ராயபுரத்தில் வாழும் பீட்டர் (சிவகார்த்திகேயன்) மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்கிறார். அதில் கிடைக்கும் பரிசுத் தொகையான 2 கோடியை, ஐந்து ஐ.டி. நண்பர்களுக்கும் அவர் கொடுப்பதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.
இதில் உற்சாகமடையும் அவர்கள் பீட்டரைப் பிடித்து வந்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆனால் அவருக்கு பாக்ஸிங் என்றாலே என்னவென்று தெரியாது. இதனால் அவருக்குப் பயிற்சியாளரை ஏற்பாடு செய்கிறார்கள். தான் காதலிக்கும் யாழினிக்கு (ஹன்சிகா) குத்துச் சண்டை பிடிக்கும் என்பதற்காகப் பீட்டரும் ஒப்புக்கொண்டு தயாராகிறார்.
முதல் இரண்டு சுற்றுக்களில் ‘மான் கராத்தே’ என்ற உத்தியை (எதிராளி முகத்தில் குத்த வரும்போது விலகிக்கொள்வது) பயன்படுத்திச் சிவகார்த்திகேயன் வெல்கிறார். இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிபெறும்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது. பல ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தக்கவைத்திருக்கும் தொழில்முறை குத்துச்சண்டை வீரரின் பெயரும் பீட்டர் (வம்சி கிருஷ்ணா) என்பதே அந்த உண்மை.
நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய பீட்டர் இவர்தானோ எனக் குழம்பும் ஐடி நண்பர்கள் ராயபுரம் பீட்டரை என்ன செய்தார்கள்? தனக்குக் குத்துச் சண்டை தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் காதலிக்காக இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு ராயபுரம் பீட்டர் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
கதையாகப் பார்க்கும்போது சுவையாகத் தோன்றலாம். ஆனால் காட்சிகளாகப் பார்க்கும்போது தலை கிறுகிறுக்கிறது. நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்ப்பே இல்லாத சரடுதான் ‘மான் கராத்தே’ கதை.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்த எதிர்நீச்சலின் எதிர்மறை பிம்பம் இது. அதில் இருந்த முயற்சி, தன்னம்பிக்கை இரண்டையும் இழிவுபடுத்தும் விதமாக ஒரே நாளில் ஒருவன் குத்துச்சாண்டை வீரனாகி, பல ஆண்டுகளாக உழைத்துச் சாம்பியன்ஷிப் வென்ற ஒருவனை வீழ்த்துவதுபோலக் காட்டி, குத்துச்சண்டையையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் இழிவுபடுத்துகிறார் இயக்குநர்.
கதையின் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமின்றி நாயகியின் அப்பா, ஐந்து ஐ.டி. நண்பர்கள், பயிற்சியாளராக வரும் ஷாஜி எனப் பல பாத்திரங்களும் பலவீனமாகவே இருக்கின்றன.
நடிப்பு, நடனம் இரண்டிலும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், டைமிங் சென்ஸைத் தவறவிட்டிருக்கிறார். மசாலாவை நம்பினோர் கைவிடப்படார் என்ற முடிவுடன் ஒரு புது இயக்குநர் (திருக்குமரன்) களம் இறங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹன்ஸிகா கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். காமெடியனாக வளர்ந்து வரும் சதீஷை வீணடித்திருக்கிறார்கள்.
படத்தில் நிமிர்ந்து உட்கார வைப்பவர் இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான். ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகமாகவே தட்டி அதைச் சராசரி ஆக்கிவிட்டிருக்கிறார்.
ராயபுரம் பீட்டருக்காக வெற்றியை விட்டுக் கொடுங்கள் என்று ரியல் பாக்ஸர் பீட்டரிடம் அவரது மனைவிச் சொல்கிறார். ‘உன்னை யாராவது கேட்டால் நான் விட்டுத் தருவேனா, அதே மாதிரிதான் பாக்ஸிங்கும்’ என்று உணர்ச்சிக்கரமாகப் பேசும் அவர், ராயபுரம் பீட்டரிடம், ‘உன் காதலியை விட்டுக்கொடு.. வெற்றியை விட்டுக் கொடுக்கிறேன்’ என்று வசனம் பேசுவது அருவருப்பான முரண்.
பெருங்கூட்டத்திடம் தர்ம அடி வாங்கிய பின், முகத்திலும், மூக்கிலும் ரத்தம் வடிய "மடங்க மடங்க அடிக்கிறதுலகூட இப்படியெல்லாங்கூடவா யோசிப்பாய்ங்க..! என்ற வடிவேலுவின் நிலைதான் ரசிகர்களுக்கும்.
மான் கராத்தே - ரசிகர்களை ஏமாற்றிய மாய மான்.
No comments:
Post a Comment