தி இந்து இராம.சீனுவாசன் டிசம்பர் 25 2013
உலகின் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பொருட்கள் பணம் என்று பயன்படுத்தப்பட்டுள்ளன. தங்கம், வெள்ளி, தானியங்கள், மிருகங்களின் பற்கள், சிப்பிகள் என்று பல பொருட்கள் பணமாக பயன்பாட்டில் இருந்துள்ளன. முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டப் பொருட்களின் மதிப்பு அவற்றின் மாற்று பயன்பாட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. உதாரணமாக உணவு தானியங்களை பணமாகப் பயன்படுத்தும் போது, அந்த தானியங்கள் கொடுக்கும் உணவின் மதிப்பே பணத்தின் மதிப்பாக எடுத்துகொள்ளப்பட்டது.
உணவுப் பொருட்களை பணமாகப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. தானியம் உணவுக்காகப் பயன்படுத்தும்போது அந்த தானிய பணத்தின் அளவும் குறையும். அந்த தானியம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், பணத்தின் அளவு உயரும். தானியப் பணத்தின் அளவு மாறும்போது அதனின் மதிப்பும் மாறிக்கொண்டே இருந்தது.
இதே காரணங்களுக்காக எளிதில் அழுகக்ககூடிய பழங்கள், காய்களைப் பணமாகப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவு. தங்கம் போன்ற உலோகங்கள் பணத்தின் மூன்று தன்மைகளையும் கொண்டிருந்தன. இவை நீண்ட காலத்திற்கு மதிப்பைக் கொண்டதாகவும், சிறு அலகுகளாகப் பிரிக்கக்கூடியதாகவும், பரிவர்த்தனை இடைப்பொருளாகவும் இருந்தன. கிடைப்பரிய உலோகங்கள், எளிதில் எடுத்து செல்லக்கூடியதாக இருந்ததால் பணம் போன்று பயன்படுத்தப்பட்டன.
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் பணமாகப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து, அதனை வங்கியில் சேமித்து வைக்கவும் துவங்கினர். சேமித்த தங்கத்திற்கான ரசீது பரிவர்த்தனையில் பயன்படுத்தப்பட்டது. ஒருவர் வங்கியில் வைத்த தங்கத்திற்கான ரசீது பரிவர்த்தனையில் மற்றவர்க்கு கொடுக்கப்பட, தங்கம் வைப்பும் மற்றவர்க்கு மாற்றப்பட்டது. இவ்வாறு தங்கத்தை மாற்றுவதற்கு பதில் தங்கம் வைப்பு ரசீது மாற்றப்பட்டது.
தங்கம் வைப்புக்காக வங்கிகள் கொடுத்த ரசீது, அந்த வங்கிகள் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தங்கத்துக்கு இணையாக பரிவர்த்தனையில் ஒப்புக்கொள்ளப்பட்டன. இந்த நம்பிக்கையை பயன்படுத்தி வங்கிகள் மேலும் தங்கம் இல்லாமலே ரசீது கொடுக்க ஆரம்பித்தன. இதுவே, அரசோ அல்லது மத்திய வங்கியோ வெளியிடும் சட்ட ரீதியான காகித பணம் உருவாவதற்கு அடிப்படையானது.
சட்ட ரீதியான பணத்திற்கு எவ்வித உள்ளார்ந்த மதிப்பும் இல்லை, ஆனால் அதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பைக் கொண்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லாரும் இந்த சட்டரீதியான பணத்தை பரிவர்த்தனை இடைப்பொருளாக ஒப்புகொண்டதால் இது பணமாக இருக்க முடிந்தது. சட்ட ரீதியான பணத்தை சிறு சிறு அலகுகளாக பிரிக்கமுடிந்ததால், (ஒரு பைசா முதல் ஆயிரம் ரூபாய் வரை) எல்லா பொருட்களின் விலைகளையும் எளிதில் பணமதிப்பில் கூறமுடியும். சட்ட ரீதியான காகிதப் பணம் பரிவர்த்தனை இடைப்பொருளாகவும், சிறு சிறு அலகுகளாக பிரிக்கவும், மதிப்பை தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருந்ததால், பணத்தின் அனைத்து செயல்பாடுகளையும் செய்யக்கூடிய சிறந்த பொருளாக இது கருதப்படுகிறது.
No comments:
Post a Comment