Sunday, February 10, 2013

15 இடங்களில் குறைந்த செலவில் விமான நிலையங்கள்: மத்திய அமைச்சர் அஜித் சிங்



    திறக்கப்பட்ட புதுச்சேரி விமான நிலையப் பயணிகள் முனையம்.
பசுமை விமான நிலையத் திட்டத்தின்கீழ், நாட்டில் 15 இடங்களில் குறைந்த செலவிலான விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் கூறினார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் முனையத்தை சனிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து அவர் பேசியது:
புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 150 பயணிகளைக் கையாள முடியும். இங்கு 1,502 மீட்டர் நீள ஓடுதளம் இருக்கிறது. இதில் ஏடிஆர் 72 வகை விமானங்களை இயக்க முடியும். மேலும் தேவை ஏற்படும்போது இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான வசதிகளும் இங்கு உள்ளன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அவசியம். அதை மாநில அரசு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மக்களின் வாழ்க்கைத்தரம் மாறி வருகிறது. பயணிகள் விமானங்கள் உள்பட பல்வேறு துறைகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. சுற்றுலா, வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்காக மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளை இணைக்க விமானங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், விமான பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 15 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஆனால், சிறிய நகரங்களையும், புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் எப்படி சேவை வழங்கப்போகிறோம் என்பதே தற்போதைய சவாலாக இருக்கிறது. இதற்காக, பசுமை விமான நிலையத் திட்டத்தின்கீழ் புதிதாக 15 விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதில் பெரும்பாலானவை கட்டி, இயக்கி, மாற்றுதல் முறையில் கட்டப்படுகின்றன. குறைந்த செலவிலான விமான நிலையங்களை மேம்படுத்தும்போதும், பல பகுதிகளை இணைக்கும்போது விமான போக்குவரத்தின் அடுத்த புரட்சியாக இருக்கும் என்றார் அஜித்சிங்.
மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவைப்படும் 200 ஏக்கர் நிலமும் தமிழகப் பகுதியில் இருப்பதால், அதை கேட்டுப் பெற வேண்டும். புதுச்சேரி மக்கள் மீது தீராத அன்பு கொண்டிருந்த ராஜீவ்காந்தி பெயரை, இந்த விமான நிலையத்துக்குச் சூட்ட வேண்டும் என்றார்.
முதல்வர் என்.ரங்கசாமி: புதுச்சேரியில் உள்ள பழைமையான பிரெஞ்சு நாகரீக கட்டடங்களைப் பார்வையிட பலர் வருகின்றனர். நகரில் 31 பழைமையான கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் தேவை. அதைப் பெற நிதி தேவை. தமிழக முதல்வரோடு பேசி நிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக இதுபற்றி பேசி வருகிறோம். நிலம் கிடைத்தால், புதுச்சேரி மக்களோடு, தமிழக மக்களும் பயனடைவார்கள். அந்த நிலத்தைப் பெறுவதற்குரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.
துணைநிலை ஆளுநர் இக்பால்சிங்: சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர புதுச்சேரி விமான நிலையத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம், 2020-ல் நாட்டின் விமான நிலையங்களில் 100 மில்லியன் பயணிகள் பயன்படுத்தப்போவதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதில் 60 விழுக்காடு உள்நாட்டுப் பயணிகள். மேலும், 3.4 மில்லியன் டன்கள் சரக்கும் ஒவ்வொரு ஆண்டும் கையாளப்படுமெனக் கூறப்படுகிறது. வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, விமான நிலையங்களின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்றார்.
விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment