Showing posts with label 'கிராவிட்டி'. Show all posts
Showing posts with label 'கிராவிட்டி'. Show all posts

Monday, June 30, 2014

நம்மால் முடியும்: 'கிராவிட்டி' படத்தை மேற்கோள்காட்டி இஸ்ரோவில் பிரதமர் மோடி பேச்சு

இஸ்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி.

தி இந்து:திங்கள், ஜூன் 30, 2014

இஸ்ரோவில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'கிராவிட்டி' என்ற ஹாலிவுட் படத்தை மேற்கோள் காட்டி, இந்திய விண்வெளித் துறையின் வல்லமையை பெருமிதத்தோடு எடுத்துரைத்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
"பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், பி.எஸ்.எல்.வி. பயணத்தில் மேலும் ஒரு வெற்றி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நேரடியாக பார்வையிட்டது பெருமையளிக்கிறது. இதற்காக இஸ்ரோவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்கும், விண்வெளித் துறை வளர்ச்சிக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. 5 நாடுகளுடைய செயற்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் தாங்கிச் சென்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் நமக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நமது தேசத்தின் விண்வெளித் திட்டங்கள் மிகவும் தனிச்சிறப்பானவை. விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி பழங்கால தொன்மை வாய்ந்தது. பாஸ்கரச்சார்யா, ஆர்யபட்டா ஆகியோர் விட்டுச்சென்ற பணிகள் தான் இப்போதும் தொடர்கிறது.

விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம அளிக்கும். சார்க் நாடுகளுக்கு என தனி செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட 'கிராவிட்டி' என்ற திரைப்படத்தை உருவாக்க இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தை செலுத்த ஆன செலவைவிட அதிகமாக இருந்ததாக அறிந்தேன். குறைந்த செலவில் ஒரு மகத்தான சாதனையை நாம் செய்துள்ளோம். இது, நம் விஞ்ஞானிகளின் வல்லமையையே பறைசாற்றுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நாட்டில் பேரிடர் மேலாண்மையிலும் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக 'பைலின்' புயல் தாக்கியபோது அது குறித்து முன் அறிவிப்புகளை அவ்வப்போது துல்லியமாக வெளியிட்டு பல உயிர்களை காக்க உதவியது.

நமது ராக்கெட்டுகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் உலக அரங்கில் விண்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு பெறச் செய்துள்ளனர். விண்வெளித் துறைக்கு மேலும் பல வெற்றிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
நம்மால் முடியும்!"

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.