Tuesday, July 1, 2014

விபத்தில் முடிந்த இலக்கியப் பயணம்! - காற்றில் கரைந்த பாரத ஸ்டேட் வங்கியின் ‘இளம் எழுத்தாளர்’ ஜெயக்குமாரின் கனவுகள்

சந்தால் இன மக்களுடன் ஜெயக்குமார் (வலது ஓரம்)

 தி இந்து:செவ்வாய், ஜூலை 1, 2014

நாகர்கோவிலை அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். மதுரையில் பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தார். சனிக்கிழமை இரவு, மதுரையில் இருந்து பஸ்ஸில் நாகர்கோவில் வந்தார். பஸ்ஸில் இருந்து இறங்கியபோது கால் தவறி கீழே விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டது.

சக பயணிகள் உதவியுடன் ஆட்டோவில் வீடு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இலக்கிய வேட்கை

வங்கிப் பணியில் இருந்த போதும், ஜெயக்குமாருக்கு தீராத இலக்கிய வேட்கை இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்பவர். வட இந்தியாவில் வாழும், `சந்தால்’ பழங்குடி இனத்தவர் குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார்.
நெசவாளர்களின் வாழ்வியல் குறித்து ‘நூலும் வாழ்வும்’என்ற நூலை எழுதியிருந்தார். 1980-களில் இருந்தே கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர், கவிஞர் சுரதாவிடமிருந்து ‘கவிமாமணி’ விருதும், பாரத ஸ்டேட் வங்கியின் ‘இளம் எழுத்தாளர்’ விருதும் பெற்றவர்.

`சந்தால்’ மக்கள்

பாரத ஸ்டேட் வங்கியின் கிளை கணக்குகள் ஆய்வுக்காக பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு 2010-ம் ஆண்டு ஆய்வாளராக அனுப்பப்பட்டிருந்தார் ஜெயக்குமார். அப்போதுதான், அங்குள்ள சந்தால் எனும் பழங்குடி மக்களோடு பழகும் வாய்ப்பை பெற்றார்.

சந்தாலிய கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரத்தோடு ஒத்திருப்பதாக ஆழமாக சில கட்டுரைகளை பதிவு செய்தார். நார்வேயைச் சேர்ந்த போடிங் என்பவர் 1880-ம் ஆண்டில் சந்தாலிகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை, தமிழில் மொழி பெயர்த்தார். இதன் மூலம் சந்தாலிகளின் பின்தங்கிய வாழ்க்கை வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

தீராத இலக்கிய தாகம் உடைய ஜெயக்குமார், இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன், `தி இந்து’ நாளிதழிடம் `சந்தாலிகள்’ குறித்து தனது விழிகள் விரித்து பேசியவை இவைதான்:
‘சந்தாலிகளை பார்த்ததுமே, அவர்கள் திராவிடர்கள் எனத் தோன்றியது. வட இந்தியாவில் அனைத்து இனப்பெண்களும் முக்காடிடும் பழக்கத்தில் இருந்தபோது, சந்தால் பெண்கள் மட்டும் முக்காடு அணியவில்லை. நம் பெண்களைப் போல் பூ சூடியிருந்தனர்.

நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அதே நாளில் ‘சொஹரே’ என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடுகின்றனர். மூன்று நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில், முதல் நாள் ‘துசு’ என சொல்லப்படும் பசுஞ் சாணியால் கையால் பிடிக்கப்பட்ட சுவாமிக்கு எட்டு வகை தானியங்களை படையலிடுகின்றனர்’ என, அவர்கள் குறித்து அடுக்கிக் கொண்டே சென்றார் ஜெயக்குமார்.

மொழிபெயர்ப்பு ஆசை

உலகில் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய பழங்குடி இனமான சந்தாலிகளின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசையில் சந்தாலியும் தமிழும் தெரிந்த அருட்தந்தை ரிச்சர்ட் உள்ளிட்ட பலரையும் ஆர்வத்துடன் சந்தித்து வந்தார் ஜெயக்குமார்.

தனது இலக்கிய தாபம் தீர்வதற்குள் சப்தமின்றி நொடிப் பொழுதில் ஜெயக்குமார் அடங்கிப் போனதுதான் பரிதாபம். ஆனாலும், அவரது ஆசைப்படியே அவரது கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.


No comments:

Post a Comment