Wednesday, January 22, 2014

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன் : : திகைப்பூட்டிய த்ரிஷ்யம்!



சினிமா பித்தன் தி இந்து புதன், ஜனவரி 22, 2014

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

திருஷ்டி தான் சுத்தி போடணும் 'த்ரிஷ்யம்' படத்துக்கு. அற்புதம்! இது வெறும் வார்த்தை அல்ல. ஒரு படம் பார்த்த பிறகு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி அடைந்தால் மட்டுமே இவ்வார்த்தை பிறக்கும். 'த்ருஷ்யம்' பார்த்து அரங்கை விட்டு வெளிவரும் பொழுது இவ்வார்த்தை தான் பலரின் இதழிலும்.
கையில் குடையுடன் வயல்வரப்பில் மோகன்லால் நடந்து செல்கிறார். 

சாதாரண ஃபேமிலி டிராமா என்று போஸ்டரை பார்த்து நீங்கள் எண்ணினால் கண்டிப்பாக ஏமாற்றம்தான். ஏன், ட்ரைலர் கூட த்ருஷ்யத்தை ஒரு சாதாரண படமாகத்தான் சித்தரித்தது. படம் பார்த்த பிறகு நீங்கள் அடையும் தாக்கமோ கண்டிப்பாக வேறுரகம் தான்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் இம்மொழி அறிவினையும், பொது அறிவினையும் சினிமா பார்த்தே கற்றுக் கொண்ட தீவிர சினிமா பித்தன் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்). சினிமா, மனைவி, இரு பெண் குழந்தைகள் இவை தான் இவரின் உலகம் எல்லாம். ஒரு முறை புதிதாக ஓர் ஆள் இவர்கள் கூட்டுக்குள் நுழைய, இவர்கள் வாழ்க்கை தடம் மாறுகிறது. மோகன்லால் ஒரு குடும்பத் தலைவனாக நிகழ்வுகளை எப்படி ஆட்கொள்கிறார் என்பது கதையின் அவுட்லைன்.

த்ரில்லர் என்றால் க்ரைம் த்ரில்லரை தான் நிறைய கண்டிருப்போம். எமோஷனல் த்ரில்லர் அவ்வளவாக கையாளப்படாத ஒரு தடம். 'த்ருஷ்யம்' பிடித்திருப்பது இதைத்தான். முதல் ஒரு மணி நேரத்திற்கு படத்தில் வரும் மையக் கதாபாத்திரத்தின் வண்ணங்களை ஆழமாக அஸ்திவாரம் போடுகிறார் இயக்குநர். மோகன்லாலின் குடும்பம், அவரின் சுபாவம் அனைத்தும் நமக்கு பிடித்துப் போகிறது. ஓர் ஆலமர வேரினைப் போல் பிற்பாதிப் படத்தை தாங்கி நிற்கும் சக்தியாக முதல் ஒரு மணி நேரம் செலவழிக்கப்படுகிறது.
இப்போது படத்தில் வரும் மையக் கதாபாத்திரங்களை நாம் ரசிக்கத் தொடங்கி விட்டோம், அவரின் வாழ்வியல் நமக்கு பிடித்துப் போகிறது. இனிமேல் அவர்கள் சந்திக்கும் திருப்பங்கள் நம்மை பாதிக்கும் - இதுதான் இயக்குநர் கையாண்ட யுக்தி.
இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளும் லப் டப் என்று பயணிக்கும் இதயத் துடிப்பை திக் திக் என ரோலர் கோஸ்டரில் பயணிக்க வைக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு, பரிதாபம், கண்ணீர், ஆச்சர்யம், புன்னகை, பயம் அனைத்தும் நிறைந்துள்ள ஓர் அனுபவம்.
இரண்டாம் பாதியில் திடீர் என்று மோன்லால் எப்படி இவ்வளவு புத்திசாலி ஆனார்? இதை போன்ற கேள்விகள் ஒன்றும் நம்மிடையே நிலவாது. தெள்ளத்தெளிவாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
படத்தில் வரும் ஒரு வசனம் 'ஒரு சாதாரண நான்காம் கிளாஸ் படிச்ச நாட்டுப்புறத்தான்.. அவனால என்ன செய்ய முடியும்னு நினைனச்சேன்.. ஆனா அவன் நம்ம நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் கிடையாது' இது தான் படம் பார்க்கிறவர்களுக்கு தோன்றுகிற விஷயம்.
கதையைத் தெளிவாக விவரிக்காத நோக்கமும் இது தான். கதை தெரியாமல் பார்த்ததால் பல நிகழ்வுகள் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தன. மோகன்லாலின் கதாபாத்திரத்தில் அமைந்த சாதுர்யம் அசாத்தியம்.
முழு படத்தையும் பார்த்து சிந்தித்துப் பார்த்தால் படத்தில் வரும் ஒரு காட்சி கூட தேவையில்லாமல் அமைக்கப்படவில்லை. எவ்வளவு தான் இயக்குநர் சாதுர்யாமாக யோசித்தாலும் சில சமயம் பார்வையாளர் அடுத்தடுத்த நிகழ்வுகளை யூகித்து படைப்பாளரை மிஞ்சுவதுண்டு. ஆனால், இங்கே இயக்குநரே பார்வையாளராக பல கோணங்களில் யோசித்து இருக்கிறார். எப்படி யூகித்தாலும் ஏதோ ஒரு வகையில் தூக்கிவாரி போடச் செய்திருக்கிறார்.
நம்மை அறியாமலே படம் பார்த்துக் கொண்டே இருப்போம் 'ஹய்யோ கிளைமாக்ஸ் அங்கேயே சொல்லப்பட்டிருக்கா என்ற அதிர்ச்சி தான் படம் முடிகையில்.
படம் முடிகையில் மோகன்லால் தன் இமைகளை மூடும் பொழுது நம் விழிகளை ஆக்கிரமிக்கிறார். அரங்கிலிருந்து வெளிவருகையில் ஏதேதோ கதைகளை உடன் வந்த நண்பர் பைக்கில் சொல்லிக் கொண்டே வந்தார் ஒன்றும் செவிகளுக்குள் செல்லவில்லையே. 'த்ருஷ்யம்', 'த்ருஷ்யம்', 'த்ருஷ்யம்' மட்டுமே.
முகநூல் நண்பர்களிடம் இந்தப் படத்தைப் பாருங்கள் என்று கூறலாம் என சாட் பாக்ஸில் அடித்தால் அப்போதும் அவர் பெயருக்கு பதிலாக 'Dr' என்று த்ருஷ்யத்தை அடிக்கத் துவங்குகிறேன். படம் என்னை ஏதோ செய்து விட்டது.
மோகன்லால் மட்டுமல்ல, அவரது மனைவியாக மீனா, இவர்களின் பிள்ளைகளாக வரும் இரு பெண்கள், கான்ஸ்ட்பிள் சகாதேவனாக வரும் ஷஜோன், ஐ.ஜீ.யாக வரும் ஆஷாஷரத் இவர்களின் நடிப்பும் பிரமாதம். படத்தின் வரும் ஒவ்வொரு உதிரி கதாபாத்திரமும் சிறப்பாக கோர்க்கப்பட்டு, மாலையாகி படத்தை கௌரவிக்கிறது.
இந்தக் கதை எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட்டாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். ஆனால் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் சிதைக்காமல், மாற்றாமல் கொண்டு வருவது தான் மிகப்பெரிய சவால்.
இரண்டாயிரத்திலிருந்து வெளிவந்த மிக முக்கிய இந்தியப் படங்களின் வரிசையில் 'த்ருஷ்யம்' கண்டிப்பாக இடம் பெறும். தமிழில் கமல் ஹாசன் அல்லது ரஜினிகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி, பொதுவாக பிரகாஷ்ராஜ், ஹிந்தியில் அமிதாப் பச்சன் இவர்கள் நடித்தால் த்ருஷ்யம் தாறுமாறாக வெற்றி பெறும்.
'கும்கி வீரன்' என்று டோனி ஜா டப்பிங் படங்களை எல்லாம் ஆரவாரமாக ரிலீஸ் செய்யறீங்க. ப்ளீஸ் தமிழ் நாட்டில் நிறைய அரங்கங்களில் 'த்ருஷ்யம்' போன்ற படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.
அப்போது சங்கரா பரணம், சாகர சங்கமம், மரோ சரித்ரா, சித்ரம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஐயர் தி கிரேட் போன்ற படங்கள் ஓடி உருவாக்கிய வரலாறு மீண்டும் மீண்டும் மீட்பிக்கும்.
த்ருஷ்யம் – ஹிஸ் ஹைனஸ் மோகன்லால்!

No comments:

Post a Comment