தி இந்து இராம.சீனுவாசன் டிசம்பர் 24 2013
பணம் இல்லாமல் நவீன பொருளாதாரம் இயங்காது. மக்கள் தினமும் பணத்தைக் கையாளுகிறார்கள், இருந்தாலும் பணம் என்றால் என்ன என்பதும், பணம் என்ன வேலை செய்கிறது என்பதும் தெளிவாகத் தெரியாமல் உள்ளனர்.
கீழே குறிப்பிட்டுள்ள மூன்று வேலைகளைச் செய்யும் எந்தப் பொருளையும் பணம் என்று சொல்லலாம்.
1. மதிப்பின் இருப்பிடம் ஒரு பொருள் (உதாரணமாக தங்கம்) சில காலம் வரை தன் மதிப்பைத் தக்கவைத்துகொண்டால், அதனை சேமித்து எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
2. அலகுகளாகப் பிரிக்கக்கூடியது ஒரு பொருளை சிறுசிறு அலகுகளாக பிரிக்கும் போது அதனைக்கொண்டு வேறு பலப் பொருட்களின் விலைகளை எளிதாகக் குறிப்பிடலாம். தங்கத்தை ஒரு சிறிய மிட்டாயின் மதிப்புக்கு இணையாக பிரிக்கமுடியாது, எனவே, அதனை பணமாகக்கொண்டு அனைத்து பொருட்களின் மதிப்பைக் கூறமுடியாது.
3. பரிவர்த்தனையின் இடைப்பொருளாக இருக்கவேண்டும் அனைத்து கொடுக்கல் வாங்கலிலும் ஒரு புறம் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.
பணத்தின் பயன்பாட்டை தெரிந்துகொள்ள, பணம் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்.
பணம் இல்லை என்றால், நாம் பண்டமாற்று முறைக்குத் தள்ளப்படுவோம். ஒவ்வொரு முறையும் நமக்கு வேண்டியதைப் பெற நம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்துப் பெறவேண்டும். நான் ஆசிரியன் என்றால், எனக்கு உணவு தேவை ஏற்படும் போதெல்லாம் மாணவர்களிடம் உணவுப் பொருட்களைப் பெறவேண்டும். மாணவனிடம் உணவுப் பொருட்கள் இல்லை என்றால்? இவ்வாறான பண்டமாற்று முறையில் எனக்குத் தேவைப்படும் உணவுப் பொருள் கிடைக்கும் வரை நான் பட்டினி இருக்கவேண்டும்.
எனவே உணவு போன்று எனக்குத் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் நானே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். பிறகு நான் எப்படி ஆசிரியன் என்ற சிறப்புத் தகுதியை வளர்த்துக்கொள்வது?
பணம் என்ற பரிவர்த்தனை இடைப்பொருள் இருந்தால், நான் என் ஆசிரியர் பணியை பணத்திற்கு விற்று பிறகு அப்பணத்தைக் கொண்டு எனக்குத் தேவையான எந்த ஒரு பொருளையும் வாங்கிக்கொள்ள முடியும். பணம் என்ற இடைப்பொருள் பரிவர்த்தனையை எளிதாக்கி, ஒவ்வொருவரும் ஒரு துறையில் தனி சிறப்பு தகுதி பெற வழிசெய்கிறது. ஒவ்வொருவரும் ஒரு துறையில் தனி சிறப்பு பெற, நாட்டின் மொத்த உற்பத்தி உயர்ந்து பொருளாதாரம் வளரும்.
எந்த ஒரு பொருள் மதிப்பை வேகமாக இழக்காமல், பொருட்களின் விலைகளைக் குறிப்பிட, பரிவர்த்தனை இடைப்பொருளாக உள்ளதோ அதுவே பணம்.
No comments:
Post a Comment