தி இந்து இராம.சீனுவாசன் திங்கள், டிசம்பர் 9, 2013
சென்ற வியாழக்கிழமை, சீன அரசாங்கம் தனது வங்கிகள் பிட்காயின் என்ற கணினி பணத்தில் பரிவர்த்தனை செய்வதை தடைசெய்தது.
அதே நாளில் பிரான்ஸ், பிட்காயின் பயன்பாடு வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் பிட்காயின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, வரும் டிசம்பர் 14-15, 2013 பெங்களூரில் இது பற்றிய முதல் மாநாடு நடைபெற உள்ளது.
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனை பெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் (algorithm) வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் (mining) என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும் போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும். இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது, அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர். இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் (password) உண்டு. இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக்க ஒரு வழி உண்டு. நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கான பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றி விடுவேன். என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயினை எடுக்கும் வழிக்கான கடவுச்சொல் யாருக்கும் தெரியாத வரையில் என்னுடைய மெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்கும்.
ஒவ்வொரு நாட்டின் பணமும் அந்தந்த நாட்டின் மைய வங்கியால் உருவாக்கப்பட்டு அதன் மாற்று விகிதங்கள் ஓரளவுக்கு நிலை நிறுத்தப்படும். பணத்தின் பயன்பாடு தொடர்பான சட்டங்களும் உண்டு. ஆனால், எந்த நாட்டு மைய வங்கி யும் உருவாக்காத பிட்காயின், எந்த நாட்டு சட்டத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கிறது.
என்னதான் நடக்குது இங்கே?
கடந்த மாதம் பிட்காயின் பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்ட பாங்க் ஆப் அமெரிக்கா, இந்த மெய்நிகர் பணம் இ-காமர்ஸ், கணினி பணமாற்றத்தில் ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று கூறியது. ஜெர்மன் அரசு பிட்காயின் பரிவர்த்தனையை அங்கீகரித்து அதன் மீது வரி விதிக்கவும் செய்கிறது.
ரிச்சர்ட் பிரான்சன் என்ற தொழிலதிபர் தன் விமான நிறுவனத்தில் பிட்காயினை பயன்படுத்தி விமான சீட்டு வாங்கலாம் என்று கூறுகிறார். சீனாவில் பெய்டூ என்ற இணைய தளம் பிட்காயினை பயன்படுத்தி வியாபாரம் செய்வதை ஊக்குவிக்கிறது. அமெரிக்க மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கி இதுபோன்ற மெய்நிகர் பணம் நீண்ட காலத்துக்கு துரிதமான பாதுகாப்பான பண மாற்றத்தை சிறப்பாக செய்ய உதவும் என்று கூறுகிறார்.
பிட்காயினின் மாற்று விகிதமும் தாறுமாறாக மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் பிட்காயினின் அமெரிக்க டாலர் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது, கடந்த டிசம்பர் 5, 2013 அன்று ஒரு பிட்காயின் மதிப்பு 1200 டாலர். இதனால், பிட்காயின் வாங்கி விற்க பலர் முயற்சிக்கின்றனர். தற்போது உலகில் 11 முதல் 12 மில்லியன் பிட்காயின் இருப்பதாக கூறப்படுகிறது. இதை டோக்கியோவில் உள்ள மெட் காக்ஸ் போன்ற நிறுவனங்கள் வாங்கவும் விற்கவும் உதவுகின்றன. இது மேலும் ஒரு முதலீட்டு சாதனமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே, பிட்காயினை யாரும் நிரந்தர மாக வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது அதனை மற்ற நாட்டு பணமாக மாற்றிக் கொள்கின்றனர்.
ஒருபுறம் பிட்காயின் முதலீட்டு சாதனமாக மாற, மற்றொரு புறம் இதனை திருடவும் செய்கின்றனர். மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயின் திருட்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாத பிட்காயினை வைத்திருப்பவர்கள், அதை இழந்தால் சட்டரீதியான நிவாரணம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
பிட்காயின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கும் பயன்படுவதாக அமெரிக்க காவல் துறை கண்டுபிடித்துள்ளது. சில்க் ரோட் என்ற இணையதளம் மூலம் சட்டவிரோத வியாபாரம் செய்த ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதே போன்று மற்றொரு மெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து அழித்தது. இதனால்தான் இந்த மெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கூறுகின்றன.
இந்தியாவில்?
இந்தியாவில் பிட்காயினை சில வியாபாரிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
அடுத்த வாரம் பெங்களூருவில் நடை பெறவுள்ள மாநாட்டில் ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகளின் அதிகாரிகள் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment