இந்து ஞாயிறு, டிசம்பர் 15, 2013
பெரும்பாலான இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே மொத்தத் திறமை யையும் காண்பித்துவிட்டு இரண்டாவது படத்தில் ஏமாற்றி விடுவார்கள். நல்லவேளையாக சரவணன் ரசிகர்களை ஏமாற்ற வில்லை. அவரது முதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ போல சமூக விழிப்புணர்வுப் படமில்லை ‘இவன் வேற மாதிரி’. முழுமையான வணிகத் திரைப்படம். முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையே நான் வேற மாதிரி என்று காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
சட்டக் கல்லூரி பிரச்சினையில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்சினைக்குக் காரணகர்த்தா சட்ட அமைச்சர். ஜெயிலில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய பரோலில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய கெடு முடிகிறது.
பிரச்சினை பெரிதாக உரு வெடுக்க சட்ட அமைச்சர் ராஜி னாமா செய்ய வேண்டிவருகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதுதான் த்ரில்லிங்கான இரண்டாம் பாதி.
இடையில் காதல் அத்தி யாயமும் உண்டு. இரண்டரை மணிநேரப் படத்தை ஆக்ரமிப்பது சரவணனின் திரைக்கதையும் வசனங்களும்தான். ஒரு சிறிய க்ளூவை வைத்து யார் கடத்தியது என்று கண்டுபிடிக்கும் எபிசோட் பிரமாதம். “எனக்கு 22 வருட அனுபவம்,’’ “இல்லை நீங்க 22 வருஷ பழைய ஆள்”, “நான் இன்னும் சாகல, நாளைக்கு வா” என வசனங்களால் விளையாடி யிருக்கிறார் சரவணன்.
முதல் பத்து நிமிடங்கள் அதிக வசனம் இல்லாமல் பின்னணி இசையில் மட்டுமே படம் பயணிக்கிறது. சட்டக் கல்லூரி கலவரத்தின் காட்சி களைத் தொலைக்காட்சியில் பார்த்தபடியே மீள்பதிவு செய்தி ருக்கிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் திரைக்கதைக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஆக்ஷன் - த்ரில்லர் படத்துக்கான பதற்றத்தையும் வேகத்தையும் இவர்கள் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது, துணிமணி எடுத்துக்கொடுப்பது ஆகிய கிளிஷேக்கள் உள்ளன. வலிந்து திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் இருக்கின்றன. கைது செய்ய வரும் போலீஸைக் கொலை செய்வதில் கொஞ்சமும் லாஜிக் இல்லை.
கதை என்று பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை. நிஜ வாழ்வில் சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்துக்குப் பின்னணி சாதி வெறி. இயக்குநர் அந்தக் கலவரத்தைத் தொட்டுக்கொள்கிறார். ஆனால் சாதியை விட்டுவிடுகிறார். தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன்களில் ஒருவரான கெட்ட அரசியல்வாதியை வைத்துக் கதையை நகர்த்துகிறார்.
இத்தகைய குறைகளை மீறி இரண்டரை மணி நேரம் இயக்குனர் நம்மைக் கட்டிப் போடுகிறார்.
அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
No comments:
Post a Comment