வாசு கார்த்தி தி இந்து டிசம்பர் 29 2013
தொழில் முனைவோராக இருந்த, தற்போது தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு வகுப்புகளை எடுத்து வரும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின் சீனியர் டைரக்டர் ராமநாதன் ஹரிஹரனை சந்தித்தோம். விழா ஒன்றுக்காக சென்னை வந்திருந்த அவரிடம் பேசினோம். இரண்டு கோப்பை காபி அருந்தும் அளவுக்கு ஒரு காலை பொழுதில் நமக்கு நேரம் ஒதுக்கி இருந்தார்.
அந்த நீண்ட பேட்டியின் சுருக்கமான வடிவம் உங்களுக்காக…
உங்களின் ஆரம்ப காலம் பற்றி சொல்லுகளேன்?
எனக்கு பூர்விகம் மதுரை என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தாம்பரத்தில் இருக்கும் பள்ளியில் படித்தேன். அதன்பிறகு பி.எஸ்.இ. கணிதம் படித்து முடித்து, எக்ஸ்.எல்.ஆர்.ஐ இன்ஸ்டியூட்டில் நிர்வாகம் படிக்க சென்றேன்.
இப்போது எம்.பி.ஏ. படிப்பது என்பது சாதாரண விஷயம்., ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு எப்படி எம்.பி.ஏ. படிக்க தோன்றியது? அதுவும் கணக்கு பாடம் எடுத்த பிறகு எப்படி எம்பிஏ?
அதற்கு கணிதம்தான் காரணம். அப்பா சொல்லியதால் சேர்ந்துவிட்டாலும், எனக்கு கணக்கு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு கல்லூரி காலத்தில் நிறைய படிக்க நேரம் கிடைக்கும். பல விதமான புத்தகங்களை படிப்பேன். என் அப்பாவும் புத்தகம் படிப்பவர் என்பதால் அவரும் சில புத்தகங்களை படிக்க சொல்லி சிபாரிசு செய்வார். மேலும் எனக்கு பல விதமான மக்களிடையே பேசுவது அவர்களை நிர்வாகம் செய்வது எனக்கு பிடித்திருந்ததால் எக்ஸ். எல்.ஆர்.ஐ.யில் சேர்ந்தேன். நான் படிக்கும் போது மிகச்சில நிர்வாக கல்லூரிகள் மட்டும்தான் இருந்தது.
அதன்பிறகு?
படித்தவுடன் ஒரு பார்மா கம்பெனியில் மெடிக்கல் ரெப் ஆக வேலைக்கு சேர்ந்தேன். இந்த துறையில் மட்டும் நேரடியாக மேலாளர் ஆக முடியாது. மெடிக்கல் ரெப்பாக இருந்து கற்றுக்கொண்ட பிறகுதான் மேலே வரமுடியும். அங்கு ஒரு சில வருடங்கள் வேலை செய்தேன். அதன் பிறகு என்.ஐ.ஐடி. நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இங்கு எனக்கு நல்ல பொறுப்பு கிடைத்தது. என்.ஐ.ஐ.டி. கணிப்பொறி கல்வியை சொல்லித்தருவதால், நான் பாடம் எடுக்க வேண்டி இருக்கும, பிஸினஸ் விரிவாக்க பணிகளில் ஈடுபட வேண்டும். உள்ளிட்ட பல முக்கியமான வேலைகளை செய்தேன். சுமார் 10 வருடம் வேலை செய்த பிறகு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸிக்கு 2001-ம் ஆண்டு சென்றேன்.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸுக்கு (ஐ.எஸ்.பி) எப்படி?
சர்வதேச தரத்தில் இந்தியாவில் ஒரு நிர்வாக கல்லூரி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 2001 ஆண்டு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் ஆரம்பிக்கப்பட்டது. என்னுடன் வேலை பார்த்த நண்பர் அங்கு சென்றார். அவர் கூப்பிட்டதால் அங்கு சென்றேன். பிஸினஸ் விரிவாக்கம் மற்றும் பாடம் எடுப்பது உள்ளிட்ட இரண்டு வேலைகளையுமே நான் செய்திருந்தால் அங்கு கார்பரேட்களுக்கு பாடம் பிரிவுக்கு சென்றேன். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை அங்கு வேலைப் பார்த்தேன். அதன் பிறகு தனியாக தொழில் துவங்கினேன்.
ஐ.எஸ்.பி. போன்ற கல்வி நிலையத்தில் இருந்து ஏன் வெளியே வர வேண்டும்?
சிறு வயதில் இருந்து தொழில்முனைராக வர வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. மேலும் இதுவரை பல விஷயங்களை நாம் கற்றிருக்கிறோம் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அதை டெஸ்ட் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் நண்பருடன் சேர்ந்து நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
முக்கியமான பொறுப்பில் இருந்துவிட்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறீர்கள்? எப்படி இருந்தது அந்த அனுபவம்?
கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிரின்ட்அவுட் உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளை கூட நானே செய்ய வேண்டும். ஆரம்ப நிலையில் பெரிய அளவுக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியாது. ஆனாலும் அது ஒரு பிரச்சினையே இல்லை.
பிறகு மீண்டும் எப்படி ஐ.எஸ்.பிக்கு?
ஐ.எஸ்.பி.யில் இருந்து வந்துவிட்டாலும் எல்லாரும் நண்பர்கள்தானே. தொடர்பில்தான் இருந்துவந்தோம். அவர் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அவருடைய இடத்துக்கு என்னை வருமாறு கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். மேலும், பிஸினஸும் வளர்ந்து விட்டது. என் பிஸினஸ் முயற்சி வெற்றி பெற்றுவிட்டதால் இது போதும் என்று என்னுடைய பங்குகளை முழுமையாக பார்டனருக்கு விற்றுவிட்டு நான் ஐஎஸ்பிக்கு வந்துவிட்டேன்.
மாணவர்களுக்கு பாடம் எடுப்பது வேறு, எக்ஸிகியூட்டிவ்களுக்கு பாடம் எடுப்பது வேறு. மேலும் எக்ஸியூட்டிங்களுக்கு ஓரளவுக்கு அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்கும்.! அவர்களை எப்படி கையாளுகிறீர்கள்?
மாணவர்களுக்கு மொத்த விஷயத்தையும் சொல்லித்தரவேண்டும். ஆனால் எக்ஸிகியூட்டிவ்களுக்கு பிரச்சினை அடிப்படையில்தான் வகுப்புகள் இருக்கும். மேலும் எக்ஸிகியூட்டிவ்களுக்கு வகுப்பு எடுக்கும் போது மிகுந்த ஆராய்ச்சியுடன், அதிக தகவல்களுடன் தான் செல்ல வேண்டி இருக்கும். மேலும் எக்ஸிகியூட்டிவ்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தாலும், பாடம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட விஷயத்தில் பெரிய எக்ஸ்பர்டாக இருப்பதால், அவர் சொல்லுவதை கேட்டுக்கொள்ளுவார்கள்.
ஒரு உதாரணம் சொல்லுங்களேன்?
சில வருடங்களுக்கு டெலிகாம் துறையில் ஒரு பிர்ச்சினை வந்தது. அதுவரை ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு கட்டணம் என டெலிகாம் நிறுவனங்கள் வாங்கிவந்தார்கள். ஆனால் டாடா டொகோமோ வந்த பிறகு ஒரு வினாடி கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மொத்த டெலிகாம் துறையும் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பல முயற்சிகளை செய்தார்கள்.
அப்போது டெலிகாம் நிறுவன உயரதிகாரிகளுக்கு நாங்கள் ஒரு வகுப்பு எடுத்தோம். எங்களுடைய ஆராச்சியில் இதே போன்ற பிரச்சினை சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் வந்திருந்தது. அப்போது அங்கிருக்கும் நிறுவனங்கள் என்ன செய்தார்கள், இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை சொல்லிக்கொடுத்தோம். ஒரு பிரச்சினைக்கு, அதன் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரே தீர்வை கொடுத்தால் கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தை, தனித்திறமை இருக்கிறது.
எக்ஸிகியூட்டிவ்களுக்கு தலைமை பண்பு குறித்த பாடங்களை கூட நீங்கள் (ஐ.எஸ்.பி) எடுக்கிறீர்கள்? தலைமை பண்பு குறித்து அவர்களுக்கு தெரியாதா?
பல விதமான தலைமை நிலைகள் இருக்கிறது. முதல் முறையாக தலைமை பொறுப்பு வருபவருக்கு இருக்கும் பிரச்சினை வேறாக இருக்கும். பிரமிட்டின் மேலே உயரும் போது, உங்களுக்கு மேலே இருப்பவரிடம் எப்படி பழக வேண்டும், உங்களுக்கு கீழே இருப்பவரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி முடிவு எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை சொல்லிக்கொடுப்போம். மேலும் ஒரு தலைமை பொறுப்பில் இருந்து இன்னொரு தலைமை பொறுப்புக்கு மாறுபவர்கள் இருப்பார்கள், பல நிறுவனங்களை நடத்துபவர்கள் இருப்பார்கள். மேலும் இதே பொறுப்பில் இருந்த இன்னொருவர் எப்படி முடிவெடுத்தார் என்ற தகவல்கள் அவருக்கு கிடைக்காது. இதுபோன்ற பல விஷயங்களை அவருக்கு சொல்லிக்கொடுப்போம்.
தொழில்முனைவு பாடம் மூலம் தொழில்முனைவோரை உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
தொழில் முனைவு எண்ணத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் இந்த பாடத்தில் சேருவார்கள். தொழில்முனைவில் இருக்கும் பிரச்னைகள், சவால்கள், வாய்ப்புகள், தொழிலை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்போம். மேலும், மாணவர்கள் மட்டும் இந்த படிப்புக்கு வருவதில்லை. ஏற்கெனவே தொழிலை செய்துக்கொண்டு இருப்பவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் வருவார்கள்.
திருத்தணியில் ஒரு பெண்மணி இட்லி மாவு விற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் பிஸினஸை வளர்க்க முடியவில்லை. அவரைப்போன்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, அவர்கள் தங்களது பிஸினஸை இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்.
இந்த கேள்வியை கேட்டதால் நினைவுக்கு வருகிறது. நாட்டின் வளர்ச்சியை அளவிட பல குறியீடுகள் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது ஒரு நாட்டில் பெண் தொழில்முனைவோர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதும் முக்கியம். பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது நாட்டிற்கு மிக அவசியம்.
சி.இ.ஓ.களுக்கு சம்பள எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் பேச்சு எழுந்திருக்கிறதே?
சி.இ.ஒ.களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நிறுவனத்தின் போர்டும், பங்குதாரர்களுக்கு எடுக்க வேண்டிய முடிவு. அதற்கு ஒரு எல்லையை நிர்ணயம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. மேலும், சி.இ.ஒ.களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஒரு சி.இ.ஒ. ஒரு வருடத்தில் தன்னை நிரூபித்தாக வேண்டும். ஒரு வேளை நிரூபிக்கவில்லை என்றால் அவ்வளவுதான். ஒரு வேளை அவர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு தேவையான சம்பளத்தை கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை.
எம்.பி.ஏ. கல்லூரிகளின் தரம் எப்படி?
கல்லூரிகளின் தரம் இன்னும் உயர்த்தப்பட வேண்டும். எம்.பி.ஏ. கல்லூரிகள் ஆராய்ச்சிக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த காலத்தில் என்ன நடந்தது என்று சொல்லிக் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு, தற்போது பிஸினஸ் எப்படி நடந்து வருகிறது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதில் நிர்வாக பேராசியர்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. சமயங்களில் அவர்களிடம் படித்த மாணவர்கள் அவர்களைவிட பெரிய பொறுப்பில் இருப்பார்கள். அதிக சம்பளம் வாங்குவார்கள். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இதுதான் நம் சங்கல்பம் என்று பேராசிரியர்கள் நினைக்க வேண்டும். கல்லூரி நிர்வாகங்களும் பேராசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும்.
எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நிறைய கற்றுக்கொள்ளுங்கள். இந்த சமூகத்துக்கு தன்னால் எப்படி உதவ முடியும் என்பது பற்றி யோசியுங்கள். நிறைய நபர்களை சந்தியுங்கள். Your Network Is Your Net Worth.
No comments:
Post a Comment