, தி இந்து
டாக்டர். ஆர்.கார்த்திகேயன்
நவம்பர் 24 2013
விடிந்தால் தீபாவளி. பனிந்திர சாமாவுக்கு பண்டிகை கொண்டாட வீடு செல்ல வேண்டும். பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்ல பஸ் டிக்கட் வேண்டும். நான்கு மணி நேரம் அலைந்தும் பஸ்ஸில் டிக்கட் கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் கேட்டாயிற்று. எல்லா ஏஜண்டுகளிடமும் பேசியாயிற்று நேரிலும் போனிலும். நெரிசலும் அலைக்கழிப்பும் தான் மிச்சம். பெருத்த ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்.
பெங்களூரில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம். எல்லாம் இருந்தும் ஒரு பஸ் டிக்கட் வாங்க முடியவில்லை. சாமாவின் மனம் கிளர்ச்சியாகவே இருக்கிறது.
எந்த பஸ்ஸிலும் டிக்கட் இல்லை என்றால் ஏன் இத்தனை கூட்டம்? எல்லாரும் ஏமாற்றமாய் திரும்பவில்லையே? சிலருக்கு கிடைக்கிறது சிலருக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைக்குமா இல்லையா என்பது சிதம்பர ரகசியமா?
அதேபோல ஊரைத் தாண்டும் அனைத்து பேருந்துகளிலும் ஒரு சீட் கூட காலி இல்லாமல் செல்கிறது என்பதும் உண்மையில்லை. பஸ்ஸில் டிக்கட் தேடும் ஒரு நபரை அந்த ஜனக் கூட்டத்திலேயே வைத்துகொண்டு ஒவ்வொரு பஸ் முதலாளியும் பல இடங்களில் அலுவலகம் வைத்து பல முகவர்களை நியமித்து, பல விலைகளில் விற்று இருந்தும் பல நாட்களில் ஆட்கள் நிறையாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அப்பொழுது எந்த வண்டியில் எத்தனை சீட், எந்த சீட் உள்ளது என்று எல்லாருக்கும் எல்லா நேரமும் தெரிந்தால் எப்படி இருக்கும்? இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்க முடியாதா?
பிட்ஸ் பிலானியில் படித்த மென்பொருள் மண்டை சகலத்தையும் பின்னோக்கி யோசிக்கிறது. ஊரெங்கும் தீபாவளிக்கு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, சாமா இந்த பஸ் முதலாளிகளுக்கு மென்பொருள் எழுதுவது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.
விடுமுறை விட்டு வந்த சகாக்களிடமும் இதைச் சொல்ல, அந்த ஆந்திர நண்பர்களும் இந்த காய்ச்சலில் கலந்துகொண்டு மூன்று நாட்கள் கம்பெனிக்கு மட்டம் அடித்து ஒரு புதிய தொழிலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. இது தான் Red Bus பிறந்த கதை.
எப்படி ஜெயித்தார்கள் இவர்கள் என்று ஆறு ஸ்டார்ட் அப் கம்பனிகளின் சுருக்கமான வரலாறு கொண்ட புத்தகம் தான் The Start Up Diaries. இதுபோல பல புத்தகங்கள் வந்தாலும் இந்த வாரம் இதைப் பற்றிப் பேச முக்கிய காரணம் ஒன்று தான். இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனர்களிடம் நேர்காணல் செய்து அவர்களின் வெற்றிக் கதைகளாக மட்டும் இதை எழுதாது அவர்கள் செய்த தவறுகள், மடத்தனங்கள் பட்ட தோல்விகள், அவமானங்கள் என சகலத்தையும் எழுதியுள்ளதால் தொழில் ஆரம்பிக்க நினைக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இதைப் பரிந்துரைக்கிறேன்.
இதை எழுதிய நீதி ஜெயின் - ககன் ஜெயின் தம்பதியும் தொழில் முனைவோர் என்பதால் மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம். முன்னுரை எழுதிய மா ஃபா பாண்டியராஜனும் முதல் தலைமுறை தொழிலதிபர் என்பதால் அந்த எழுத்துக்களும் நூலுக்கு வலு சேர்க்கிறது.
சாமாவின் கதை மட்டுமல்ல, ONE 97 விஜய் சேகர் ஷர்மா, EKO
அபினவ் சின்ஹா மற்றும் அபிஷேக் சின்ஹா, COLOSCEUM MEDIA அஜித் அந்தாரே, THE LOOT ஜெய் குப்தா & YO!CHINA ஆஷிஷ் தேவ் கபூர் ஆகியோர் கதைகளும் சுவாரசியமானவை.
எல்லா கதைகளிலும் சில பொதுத் தன்மைகள் உள்ளன.
அனைவரும் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர்கள். யாருமே வெள்ளிக் கரண்டியுடன் பிறக்கவில்லை.
அனைவருக்கும் ஆதாரம் கல்லூரிப் படிப்பும் ஒரு நிறுவன வேலையும் இருந்தன.
யாரும் எடுத்தவுடன் வெற்றி பெறவில்லை. கடன், நஷ்டம், பங்குதாரர்கள் பிரிவு, துரோகம் என சந்தித்த பின்னும் மீண்டும் முயற்சிக்கத் தயங்காதவர்கள் அனைவரும்.
தொழில்நுட்பம் இவர்கள் அனைவரின் பிஸினஸ் மாடலில் முக்கியப் பங்கு இருந்தது. இருக்கிறது.
சரியாக தொழில் தொடங்கும்போது அனைவருக்குமே ஒரு தேவ தூதர் நிதி அளிக்கவோ, வழி நடத்தவோ, தொழிலில் பங்கு கொள்ளவோ வருகிறார்.
குறைந்தது 5 வருடங்களாவது சம்பளம், லாபம், வசதிகள் என எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்துள்ளார்கள்.
ஸ்டார்ட் அப் சூத்திரம் தெரிந்து வெற்றி கண்ட பின் அதிலிருந்து வெளியேறியோ/ வெளியேறாமலோ பிற ஸ்டார்ட் அப்புகளுக்கு நிதி அளித்து வழி நடத்துகிறார்கள்.
ஒரு கம்பனியை துவக்கி, நடத்தி, அதன் மதீப்பிட்டை பெருக்கி தக்க நேரத்தில் வெளியேறி கணிசமான லாபத்துடன் அடுத்த கனவை திடமாக துவக்கும் இவர்கள் போன்றோரை Serial Entrepreneurs என்கிறோம். இந்த விளையாட்டு பிடிபட இந்த நூல் படிக்கலாம்.
40 பக்கத்திற்கு ஒரு கம்பனி கதை என்பதால் ஒரு நாவல் படிக்கும் சௌகரியத்துடன் சுலபமாகச் செல்கிறது. நடுவில் அறிவுரைகள், பொழிப்புரைகள் இல்லாதிருப்பது பெரிய ஆறுதல்.
தொழில் துவங்குவது இங்கு இன்னமும் பெரிய சவால் தான். மார்வடிகளுக்கு தான் வரும். நமக்கு வராது என்றார்கள். நாம் படித்து ஒருவரிடம் அதிக சம்பளத்தில் வேலை செய்வது தான் உச்சபட்ச லட்சியம்.
கடாரம் சென்று வணிகம் வென்றான், கப்பல் கட்டினான் என்பதெல்லாம் சரித்திரம் படிக்காததால் இந்த தலைமுறைக்கு எட்டவே இல்லை.
500 பொறியியல் கல்லூரிகளில் படித்து இங்கு பெரும்பான்மையானவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடமுள்ள தொழில்நுட்ப எண்ணங்களை தொழில்களாக மாற்றும் ரசவாதத்தை கற்றுத்தர ஏற்பாடு செய்தாலே போதும். அதற்கு நிஜ நாயகர்களை அழைத்து உரையாடச் செய்ய வேண்டும்.
இதுபோன்ற நூல்கள் தமிழில் வந்தால் தான் தொழில் இலக்கியம் தமிழில் வேர் கொள்ளும். தமிழ் நாட்டில் வந்த ஸ்டார்ட் அப்களை தொகுத்து இது வெளிவந்துள்ளதால் பலருக்கு நம்பிக்கை ஊற்றாக இருக்கும்.
“எனக்கும் நிறைய ஐடியா இருக்கு சார். பணம் தான் பிரச்சினை” என்று சொல்வோர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எதுவும் இல்லாமல் ஆரம்பித்து ஜெயித்ததவர்கள் தான் இங்கு அதிகம்.
“பத்துக்கு ஒன்பது தோல்வி தான் சார். நான் பாத்துட்டேன்” என்றால் உண்மை அதைவிட கொடியது. ஆயிரத்தில் ஒன்று தான் பெரிதாக ஜெயிக்கிறது.
சரி, ஆயிரம் விந்தில் ஒன்று தானே பிழைத்து உயிர் பெறுகிறது!