Thursday, April 25, 2013

தங்கத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும்...






First Published :Dinamani 25 April 2013 03:43 AM IST
கடந்த சில தினங்களில் தங்கத்தைப் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டது; பேசப்பட்டுவிட்டது! என்றாலும் சில அடிப்படைக் கேள்விகள் தொடருகின்றன. உதாரணமாக, சென்ற 12 ஆண்டுகள், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே போனது எப்படி? அதன் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது எதனால்? இந்தச் சரிவு எவ்வளவு காலம் தொடரும்? அதில் இனி முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகுமா? தங்கத்தின் விலை பழைய உச்சத்தை எட்டுமா? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? இந்திய மக்களுக்கு "தங்க மோகம்' குறையுமா?
÷இதற்கெல்லாம் விடை காண வேண்டுமானால், கடந்த 12 ஆண்டுகளின் உலக நிகழ்வுகளை உன்னிப்பாக அலச வேண்டும். தங்கத்தின் விலை உயர்ந்ததற்குக் காரணம், ஆபரணங்களுக்கான தேவை (டிமாண்டு) அதிகரித்ததால் அல்ல; மாறாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததால்தான், அதன் விலை பல மடங்காக உயர்ந்தது.
கடந்த 11 ஆண்டுகளில், தங்கத்தின் விலை ஆறரை மடங்கு அதிகரித்தது. 2003-இல் தங்க நகை விற்பனை 2,500 டன்னாக இருந்தது. 2012-இல் தங்க நகை விற்பனை 1,908 டன்களாகச் சரிந்தது.
÷அதே காலகட்டத்தில், முதலீடு செய்வதற்காக வாங்கப்பட்ட தங்கக் காசுகள் மற்றும் தங்கக் கட்டிகள் 304 டன்களிலிருந்து, 1,256 டன்னாக, அதாவது நான்கு மடங்குக்கும் மேல், உயர்ந்தது. அதேபோல், இ.டி.எஃப். என்கிற தங்க பரஸ்பர நிதி முதலீடு 2004-இல் இருந்ததைவிட 2012-இல் இரண்டு மடங்காக அதிகரித்தது.
÷2003-ஆம் ஆண்டு முதல், "பிரிக்' நாடுகளான பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. ஆனால், அமெரிக்கா, இராக் போரின் காரணமாக, வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகியது. 2008-ஆம் ஆண்டு, அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்தது. அதே காலகட்டத்தில், "யூரோ' நாணயமும் மதிப்பிழந்தது. இதனால், உலக அளவில் முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்தனர்.
÷முக்கியமாக, மேற்கூறிய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஊக பேர வணிகர்களும், தங்க முதலீட்டில் குதித்தனர். இவர்கள் தங்கத்தின் விலையைச் செயற்கையாகவும் அதிகரிக்கச் செய்தனர் என்பது உலகறிந்த ரகசியம்!
÷மக்கள் தங்கத்தை காசுகளாகவும், கட்டிகளாகவும் வாங்கி முதலீடு செய்ததை விட, ஊக பேரத்தில் நடந்துள்ள தங்க முதலீடுகளின் மதிப்பு பல மடங்குகள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
÷தங்கத்தின் விலை 2003 முதல் ஏறிக்கொண்டே போனது. அது 2011 செப்டம்பர் மாதம் உச்சத்தை எட்டியது. இனி, இது ஏதோ ஒரு நிலையில் சரியத் தொடங்கும் என்பதை ஊகித்த ஊக பேர வணிகர்கள், 2011 கடைசியிலும் 2012-ஆம் ஆண்டிலும் ஊக பேர முதலீட்டை படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்கள்.
÷சர்வதேசப் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் பெரு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தங்களிடம் இருப்பில் உள்ள தங்கத்தை விற்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தன. "கோல்டுமேன் சாக்ஸ்' என்கிற சர்வதேச நிதி அமைப்பு 2014-ஆம் ஆண்டு தங்க விலை குறையும் என்று அண்மையில் கருத்து தெரிவித்தது.
÷ஏற்கெனவே, ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருந்தன. இந்நிலையில் புதிதாக, சைப்ரஸ் நாடும் பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. அந்த நாட்டின் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது சந்தையில் தங்க வரத்தை அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அந்தச் செய்தியே, தங்கத்தின் தற்போதைய வீழ்ச்சிக்குக் கடைசி முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
÷சரி, தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடையுமா? சரிவு நீண்ட காலம் தொடருமா? இதற்குமேலும், கடும் வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. 2013-ஆம் ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலை சிறிதளவு அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக இருக்கும். ஆனால், பெரிய வீழ்ச்சியோ, கணிசமான விலை ஏற்றமோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.
÷இந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம் என்றால், தங்கத்தின் விலை நீண்டகால அடிப்படையில் உயருவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளன. கடந்த காலத்தில், விலை அதீதமாக உயர்ந்தபோது, ஆபரணங்களின் விற்பனை குறைந்தது. முதலீடுகளுக்காக தங்கக் கட்டிகள், காசுகள் வாங்குவது அதிகரித்தது. இப்போது, விலை குறைந்துள்ளதால், தங்க நகைகளின் விற்பனை அதிகரிக்கும். இதனால் விலையும் உயரும்.
உலகின் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தின் பாதிப்பிலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டில் ஒரு பகுதியையாவது தங்கமாக வைத்திருக்க விரும்புவார்கள். இதனாலும் தங்கத்தின் விலை உயரும்.
÷பல நாடுகளில், மத்திய வங்கிகள் (ரிசர்வ் வங்கிகள்) தங்களது கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்; அமெரிக்க டாலர்களின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றன. எனவே தான், தங்கத்தின் விலை இதற்கு மேலும், வீழ்ச்சி அடையாது என்று நம்பலாம்.
அடுத்து, நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்திட இது ஏற்ற தருணமா என்றால், சில சுய கட்டுப்பாடுகளுடன் நிச்சயமாக முதலீடு செய்யலாம். அது என்ன கட்டுப்பாடுகள் என்றால், தங்கத்தில் முதலீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், பணத்தை நான்கு பாகமாக பிரித்துக் கொண்டு, இப்போது ஒரு பகுதியை முதலீடு செய்யலாம். அடுத்த சில தினங்களில் அல்லது வாரங்களில் மீண்டும் ஒரு முறை விலை சற்று குறைந்தால் மேலும் ஒரு பகுதித் தொகையை முதலீடு செய்யலாம். இப்படியாக, அடுத்தடுத்து விலை குறையும்போது முதலீடு செய்யலாம். இதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமோ என்ற வருத்தம் ஏற்படாது.
÷நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்? ஆண்டுக்கு ஆண்டு தங்கத்தின் உலக அளவிலான உற்பத்தி சுருங்கிக் கொண்டே போகிறது. தென் ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் மட்டுமே தங்கச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. அங்கெல்லாம் தங்கத் தாது எடுப்பதற்கு முன்பை விட மிக அதிக ஆழத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. தங்க ஆபரணங்கள், தங்க முதலீடு, மத்திய வங்கிகளின் தேவை ஆகியவற்றுக்காக தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
÷சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான அல்லது அதைவிட கூடுதல் மதிப்பு வாய்ந்த முதலீட்டுப் பொருளாகத் தங்கம் கருதப்படுகிறது. இதனால், சீனா தனது பல டிரில்லியன் டாலர் அளவிலான ஜி.டி.பி. (நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு) யில் 1.6 சதவீதம் தங்கத்தை இப்போது கையிருப்பாக வைத்துள்ளது. இதை வருங்காலத்தில் 2.5 சதவீதமாக, படிப்படியாக, உயர்த்திக்கொள்ள விரும்புகிறது. அந்த அதிகரிப்பு ஒரே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு என்றாலும், அதற்கே பெரிய அளவில் தங்கம் வாங்கியாக வேண்டும்.
÷இதுதவிர, நம்நாட்டில் தங்கத்தை வெறும் உலோகமாகப் பார்ப்பதில்லை. அது நம் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்து விட்ட "மங்களகரமான' உலோகம். இந்தியர்கள் தங்கத்தை ஆசைக்காக, ஆபரணத்துக்காக, அந்தஸ்தின் அடையாளமாக, ஏன் சுபச் செலவுகளுக்காகக் கூட வாங்குகிறார்கள்.
÷வங்கிகளிலும், வங்கி சாராத நிதி நிறுவனங்களிலும் 1.21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கக் கடன் கொடுத்திருக்கிறார்கள்!
திருமணங்களில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது வெளிப்படை! ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் சுமார் 80,000 முதல் 90,000 திருமணங்கள் நிகழ்கின்றன. அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் திருமணங்களுக்கு மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்.
÷சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் ஆண்டுக்கு 300 டன் முதல் 350 டன் வரை இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், தற்போது 900 டன் முதல் 1,000 டன் வரை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (கரண்ட் அக்கவுண்ட் டெஃபிசிட்) எகிறியது.
தங்க விலை இப்போது குறைந்திருப்பது அரசுக்கு நல்ல செய்திதான்! அதேபோல், இல்லத்தரசிகளுக்கும் நல்ல செய்தி!
÷ஆனால், இந்த வீழ்ச்சி நிலையானது அல்ல; 2014-ஆம் ஆண்டு மத்தியில், மீண்டும் தங்கம் எழுச்சி அடையும் என உலகப் பொருளாதார வல்லுனர்களும், பெரிய தங்க வியாபாரிகளும் கருத்து தெரிவிக்கிறார்கள். அதேநேரம், 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தங்கம் கண்ட உச்சத்தை, அது மீண்டும் எட்டிப் பிடிக்க சில வருடங்கள் ஆகலாம்.
கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர்.

No comments:

Post a Comment