சென்னை, ஏப். 17- 2013மாலைமலர்
தங்கத்தின் விலை கடந்த வாரம் முதல் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.24,544-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 68 ஆக இருந்தது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கு தங்க நகைகள் வாங்க மிகவும் சிரமப்பட்டனர்.
திடீரென்று தங்கம் விலை சரிந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.2,544 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.2,441க்கும் ஒரு பவுன் ரூ.19,528 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சரிந்ததை தொடர்ந்து மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்னையில் வழக்கமாக தினமும் சுமார் 1000 கிலோ தங்கம் விற்பனையாகும். விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்க நகை விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் அப்போது விற்பனை சூடு பிடித்துள்ளது. எல்லா நகை கடைகளிலும் 2 மடங்கு விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் தியாகராய நகர், மைலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட பல பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் நகை கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. தியாகராயநகர் எல்.கே.எஸ். நகை கடை உரிமையாளர் செய்யது அகமது கூறும் போது, கடந்த 4 நாட்களாகவே விற்பனை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே விற்பனை அதிகரித்துள்ளது. மக்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மற்றும் சொந்த தேவைகளுக்காக அதிக அளவில் நகைகளை வாங்கி செல்கிறார்கள் என்றார். கடந்த 4 நாட்களில் மட்டும் தங்க விற்பனை ரூ.1000 கோடியை எட்டி பிடித்துள்ளதாக கூறுப்படுகிறது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார எழுச்சி மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சில நாடுகள் இருப்பில் வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்யலாம் என்று கருதப்படுவதால் தங்க முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்க தொடங்கி உள்ளனர். இதுவே விலை குறைவுக்கு காரணம் எனப்படுகிறது. மேலும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment