தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்டது அமெரிக்க கடன் பத்திரங்கள் இல்லை, பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கம் என்பவர் வீட்டில் இருந்து ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அவர் ஆஜரானார். அவருடன் அவரது வழக்குரைஞர் இளங்கோவும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
காலை 11.45 மணி முதல் இரவு வரை ராமலிங்கத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது வழக்குரைஞர் இளங்கோ விசாரணை நடந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. விசாரணை முடிவில், அவை கடன் பத்திரங்கள் இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.
விசாரணை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் கூறியது: ராமலிங்கம் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை அமெரிக்க கடன் பத்திரங்கள் இல்லை.
அவை பண பரிவர்த்தனை பத்திரங்கள்தான். இந்த பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.
அவரிடம் இருந்து 5 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பத்திரத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலர் ஆகும்.
இந்த பரிவர்த்தனை பத்திரங்களை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கியதாகவும், இவை தங்கப் பத்திரங்களுக்கு மாற்றாக பெறப்பட்டது என்றும் ராமலிங்கம் கூறுகிறார். விசாரணையில் ராமலிங்கம் பல்வேறு கோணங்களில் பதில் அளிக்கிறார். அமெரிக்காவில் இருந்து எந்தவித தகவலும் வருமான வரித்துறைக்கு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்காவிலிருந்து உறுதியான தகவல் கிடைத்துவிடும்.
இந்த பத்திரங்கள் 2011 பிப்ரவரி 25-ம் தேதி வழங்கப்பட்டுள்ளன. இதன் முதிர்வு காலம் 2015 பிப்ரவரி ஆகும்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு ராமலிங்கம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரியை அவர் செலுத்தவில்லை. ராமலிங்கத்தின் வங்கி லாக்கரில் இருந்து சில நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்) ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கு ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலை வியாபாரியின் வீட்டில் ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள் இருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment