Wednesday, August 22, 2012

சென்னை இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.



ஒன்இந்தியா :22 Aug 2021 

சென்னை: கிராமமாக இருந்து மாநகரமான சென்னை இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
இன்று மாநகரமாக உள்ள சென்னை ஒரு காலத்தில் சிறு, சிறு கிராமங்களாக இருந்தது. அவற்றை பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆண்டனர். மன்னர் ஆட்சி நடக்கையில் வெளிநாட்டு வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் சென்னை கடற்கரையில் வந்திறங்கினர். அப்போது சென்னை, சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.

1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் சென்னப்பட்டிணத்தில் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். பின்னர் ஓராண்டு கழித்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து தான் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த காரணத்தால் சென்னப்பட்டிணத்தை சுற்றி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
தொடர்ந்து 1688ம் ஆண்டு சென்னையை முதல் நகரசபையாக அறிவித்தார் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை ஆன பெருமை சென்னைக்கு கிடைத்தது.
இந்நிலையில் 1746ல் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை நகரை பிரான்ஸ் நாட்டினர் கைப்பற்றினர். பின்னர் 1749ம் ஆண்டு அவை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இரண்டாம் முறை சென்னை ஆங்கிலேயர்கள் கைக்கு வந்த பிறகே அதீத வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களை சென்னையுடன் இணைக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. 


கிராமமாக இருந்த சென்னப்பட்டிணம் மதராஸ் மாகாணம் மற்றும் மதராஸ்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மகாணாத்தின் தலைநகரானது சென்னை.

பின்னர் 1956ம் ஆண்டு இந்திய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். கடந்த 1996ம் ஆண்டு மதராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று அழைக்கப்பட்டது. பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் காஸ்மோபாலிடன் நகரமாக உள்ளது சென்னை.

இந்தியாவிலேயே அதிகமாக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையில் தான் உள்ளன. ஜவுளி, பெட்ரோ கெமிக்கல்ஸ் என்று பல்வேறு துறைகளில் சென்னை சிறந்து விளங்கி வருகிறது.


சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இது தவிர கப்பல் போக்குவரத்தும் உள்ளது. மேலும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் விரைவில் வரவிருக்கின்றன.
பண்டைய கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக சென்னை பல்கலைக்கழகம், உயர் நீதிமன்றம், எழும்பூர் அருங்காட்சியகம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் ஆகியவை கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
அந்த காலத்தில் கூவம் மற்றும் அடையாறு ஆகியவை தூய்மையாக இருந்தன. ஆனால் தற்போது சென்னையின் மக்கள் தொகையால் அவற்றில் சாக்கடை தான் ஓடுகிறது. கிராமமாக இருந்து நகரமாக மாறி தற்போது கிரேட்டர் சென்னையாக தரம் உயர்ந்துள்ள தமிழகத்தின் தலைநகரம் இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

No comments:

Post a Comment