Friday, July 27, 2012

கொஞ்சம் சினிமா கொஞ்சம் பாப்கார்ன் - கடன்காரன் போல் ஓடி ஒளிகிறேன்: ரஜினிகாந்த்





















Dinamani : 27 Jul 2012 12:36:25 AM IST
சென்னை, ஜூலை 26: பணம் வாங்கி விட்டு திருப்பிக்கொடுக்க முடியாத கடன்காரன் போல் ஓடி ஒளிகிறேன் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.


 மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு "கும்கி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரபுசாலமன் இயக்கியிருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது


 முதல் ஆடியோ சி.டி.யை ரஜினிகாந்த் முன்னிலையில் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: பட விழாக்களில் நான் அதிகம் கலந்துகொள்வதில்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு விழாவில் கலந்துகொண்டு இன்னொரு விழாவில் கலந்துகொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வருத்தப்படுவார்கள். மேலும் என்னுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு டாக்டர்களும் விழாக்களில் அதிகமாகப் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


 இந்த விழாவுக்கு வர வேண்டும் என பிரபு அழைத்தபோதே என்னால் வர இயலாது எனக் கூறியிருந்தேன். ஆனால், சிவாஜி வீட்டு விழா என்பதால் கடைசி நேரத்தில் கலந்துகொண்டுள்ளேன்.


 சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வந்தபோது என்னுடைய நண்பர் கமல்ஹாசன் என்னைப் பார்க்க மருத்துவமனைக்கே நேரில் வந்துவிட்டார். ஆனால், மருத்துவர்கள் இப்போதுள்ள நிலையில் சந்திக்க வேண்டாமே எனத் தயங்கியுள்ளனர். இந்தத் தகவலை தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார் கமல். நானும் உடல்நிலை குணமானவுடன் சென்னை வந்து சந்திக்கிறேன் எனக் கூற கமல் வருத்தத்துடன் சென்னைக்கு திரும்பிவிட்டார். சென்னை திரும்பியதும் நான் முதலில் பேசியது கமல்ஹாசனிடம்தான். இன்று ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னின் படத்தில் நடிக்க கமலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகுக்கும் இந்தியத் திரையுலகுக்கும் பெருமை சேர்த்துள்ளார் கமல். அப்படிப்பட்ட கமல் என் மீது கொண்ட பாசத்தை நினைத்து உருகிப்போனேன்.


 அதே போல ரசிகர்களும் தமிழக மக்களும் என் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவருடைய பிரார்த்தனையும்தான் என்னை குணமடையச் செய்தது. ரசிகர்கள் பற்றி நான் அதிகம் பேசுவது இல்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு நான் ஒரு கடன்காரன். அவர்கள் காட்டி வரும் அன்புக்கு நான் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் ரசிகர்களைப் பார்த்து - பணம் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்க முடியாத கடன்காரன் போல் - ஓடி ஒளிகிறேன்.


 இந்தப் படத்தில் அறிமுகமாகும் விக்ரம் பிரபுவுக்கு பயம் இருப்பது போல் தெரிகிறது. நடிகனுக்கு பயம், கவலை இருக்கக் கூடாது. பயத்தை இயக்குநர்கள் போக்கிவிடுவார்கள். திறமை மீது நம்பிக்கை இருந்தால் கவலைப்படக்கூடாது. சிவாஜியின் பேரன் என்பதை விக்ரம் பிரபு சினிமாத்துறையில் நிரூபிக்க வேண்டும்.


 இப்போது வரும் புதியவர்கள் ஒரு படத்திலேயே கவனம் செலுத்துகிறார்கள். படம் வரவேற்பைப் பெறாவிட்டால் பதற்றம் வந்துவிடும். அதனால் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று படங்களை செய்யுங்கள். அப்போதுதான் ஒரு படம் கைவிட்டாலும் இன்னொரு படம் காப்பாற்றும் என்றார்.
 விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:


 ரஜினிகாந்த் எப்போதும் நியாயமான மனிதர். இந்த விழாவிற்கு அவர் வந்து வாழ்த்தியது மிகவும் பொருத்தமானது.


 சிவாஜியின் நடிப்பும் வசனங்களும்தான் என்னைப் போன்றவர்களை நிமிர வைத்தது. அப்படிப்பட்டவருடைய பேரன் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது அழுத்தமான படி என சிலர் கூறினர். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் அடியெடுத்து வைத்திருப்பது மலை. அங்கே அருவி பொங்கியபடியே இருக்கும். அவர் கவனமாக இருக்க வேண்டும்.
 "அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் எனப் பார்க்காதே, கேட்காதே; எதையும் பகுத்தறிந்து பார்' என "பராசக்தி' படத்தில் சிவாஜி பேசியிருப்பார். அந்த வசனத்தையே விக்ரம் பிரபுவுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன் என்றார்.


 ஜெயலலிதா, கருணாநிதி வாழ்த்து: சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு திரையுலகில் அறிமுகமாவதை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் தொலைபேசி மூலம் பிரபுவிடம் வாழ்த்து தெரிவித்தனர். இத் தகவலை நடிகர் பிரபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 விழாவில் நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் லிங்குசாமி, கெüதம் மேனன், பி.வாசு, பிரபுசாலமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment