ஒன்இந்தியா: மார்ச் 30, 2012, 9:43 [IST
சென்னை: அமெரிக்க சுற்றுலா விசாவை புதுப்பிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி நிக் மான்ரிங் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நிக்மான்ரிங் கூறியதாவது:
அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி உள்ளோம். விசா கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டு 57 ஆயிரம் பேர் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 4 விழுக்காடு குறைவு.
விசாவுக்கான நேர்முகத்தேர்வு இனி ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி ஆகிய மொழிகளிலும் நேர்முகத்தேர்வை சந்திக்கலாம். இதற்காக தனித்தனி பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த 5 நாட்களில் விசா கிடைத்துவிடும்.
சென்னையில் மட்டும் எல்-1 விசா.
குறிப்பிட்ட பணியாளர்களுக்காக மட்டும் வழங்கப்படும் எல்-1 விசா கேட்டு 6044 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த ஆண்டு இந்த பிரிவில் 4,700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன. இது 24 விழுக்காடு அதிகம் ஆகும். முன்பு இதற்கான விண்ணப்பங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என அனைத்து அமெரிக்க தூதரங்களிலும் பெறப்பட்டன. இத்தகைய விண்ணப்பதாரர்கள் பெரும்பாலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தற்போது சென்னை தூதரகத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பெறுகிறோம்.
விசா புதுப்பிப்பு
சுற்றுலா பயணிகளுக்கான விசாவை தூதரக அலுவலகத்திற்கு நேரில் வந்து புதுப்பிக்காமல் தபால் மூலமே விண்ணப்பித்து பெறும் வகையில் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில், 10 ஆண்டு செல்லக்கூடிய விசாவை புதுப்பிப்பதற்கோ அல்லது காலக்கெடு முடிவடைந்து 48 மாதங்கள் (4 ஆண்டுகள்) கடந்து விட்ட விசாவை புதுப்பிக்க தபாலில் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தால் போதும். விசா புதுப்பிக்கப்பட்டு தபால் மூலம் உடனடியாக அனுப்பப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment