Tuesday, November 12, 2013

கொடுக்கும் பணத்துக்கு எதுக்கு வட்டி?



பேராசிரியர் இராம.சீனுவாசன் :தி இந்து  :நவமபர் 12,2013

எங்க வீட்டுகிட்ட ஒருத்தர் வட்டிக்கு கடன் கொடுப்பார். எப்ப பார்த்தாலும் ஒரு டீக்கடைல உட்கார்ந்திருப்பார். யாராவது பணம் கேட்டா பக்கத்துல உள்ள அவர் வீட்டுக்கு அழைத்துப்போய் பணம் கொடுப்பார்.

ஊர்ல ஒரு பேச்சு உண்டு.. வேலை செய்யாம உட்கார்ந்தே சம்பாதிக்கிறார் என்று. இப்ப யோசிச்சுப் பார்த்தா அவர் ஒன்னும் அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுத்ததா தெரியவில்லை. அவருக்கு நன்கு தெரிந்தவர்களுக்கே கடன் கொடுத்திருக்கிறார். எனவே, திருப்பி வாங்குவதில் ஒன்றும் சிரமம் இருந்ததில்லை.

கடன் கொடுப்பவர்கள் ஏன் வட்டி வாங்க வேண்டும்? வட்டி வாங்குவது தவறு என்று சொல்லும் சமய, சமூக நூல்கள் பல உண்டு. பொருளியலில் இதற்கு பல கோட்பாடுகள் உண்டு. சந்தை பொருளியல் பாடம் நடத்தும்போது ‘பணத்தின் நேர மதிப்பு’ (Time Value of Money) என்ற ஒரு கருத்தைக் கூறுவார்கள்.

இன்று நீ எனக்கு ரூ.100 கொடு, அடுத்த வருடம் இதே நாளில் ரூ.100 திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று நான் கேட்க நீங்கள் கொடுத்தால், உங்களுக்கு பணத்தின் நேர மதிப்பு தெரியவில்லை என்று அர்த்தம். இந்த ஒரு வருடத்தில் என்னவெல்லாமோ நடக்கலாம்.

ஒன்று.. ஒரு வருடத்தில் விலைவாசி ஏறும்போது, அதே ரூ.100 அடுத்த வருடம் உங்களுக்கு குறைவான பொருட்களையே பெற்றுத் தரும். ஒரு வருடத்துக்கான எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தை சரிக்கட்ட உங்களுக்கு ஒரு வட்டி கொடுக்க வேண்டும்.

இரண்டாவது.. எனக்கு நீங்கள் ரூ.100 கொடுத்தால் உங்களின் தற்போதைய நுகர்வை ஒரு வருடம் வரை தள்ளிப்போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதாவது ஒரு வருடம் வரை காத்திருந்துதான் நீங்கள் அந்த 100 ரூபாயை பயன்படுத்த
முடியும். இந்த காத்திருப்புக்காக உங்களுக்கு நான் ஒரு வட்டி வழங்க வேண்டும். உங்களது அத்தியாவசியத் தேவையை தள்ளிப்போட்டு எனக்கு பணம் கொடுத்தால், காத்திருப்புக்கான வட்டியும் உயரும்.

மூன்றாவது.. இந்த ஒரு வருடத்தில்
என்னுடைய பொருளாதாரம் மிக மோசமாகி
உங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் போகலாம். அல்லது ஒரு வருடத்தில் உங்களால்ஏதோ ஒரு காரணத்தினால் இந்த பணத்தை அனுபவிக்க முடியாமல் போகலாம்.

 இவ்வாறு நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஒரு வட்டி கொடுக்கவேண்டும்.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்ததுதான் பணத்தின் நேர மதிப்பு. இதுதான் வட்டி வாங்குவதற்கான அடிப்படை.

நீங்கள் ஒரு வருடத்துக்கு பணம் கடன் கொடுக்கும்போது 10% வட்டி எதிர்பார்க்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு பணவீக்கம் 10% விட குறைவாக இருக்கும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு.

உதாரணமாக, 9% பணவீக்கம் எதிர்பார்ப்பதாக வைத்துக்கொள்வோம், மீதமுள்ள 1% தான் உங்கள் காத்திருப்புக்கும், நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்குமான விலை. உங்களின் காத்திருப்புக்கான விலை அதிகமானால், ரிஸ்க் அதிகமானால் வட்டி வீதமும் உயரவேண்டும்.

இப்போதெல்லாம் வங்கிகள் 9% வரை நீண்டகால வைப்புத்தொகைக்கு வட்டி கொடுக்கின்றன. வங்கிகளிடம் ரிஸ்க் குறைவு என்பதால், பணவீக்கத்துக்கும் காத்திருப்புக்கும் வட்டி கொடுத்தால் போதும்.

அடுத்த ஒரு வருடத்தில் நுகர்வு விலை குறியீடு 9%-ஐ விட அதிகமாக உயரும் என்று நீங்கள் கருதினால் 9% வட்டிக்கு வங்கியில் பணத்தைப் போடுவது சரியல்ல.

No comments:

Post a Comment