Tuesday, September 17, 2013

விலகினார் அமெரிக்க அதிகாரி - உயர்ந்தது ரூபாய் மதிப்பு!



Return to frontpage
செவ்வாய், செப்டம்பர் 17, 2013

வாசு கார்த்தி


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரி கட்டுமா என்று கேட்பவர்களுக்கு 'கட்டும்' என்றுதான் சொல்ல வேண்டும். 

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜெனட் ஆலன் பதவி ஏற்கபோவதாக வந்த செய்திகளால் ரூபாய் மதிப்பு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடர்ந்து சரிந்துக்கொண்டே வந்த ரூபாயின் மதிப்பு இப்போது உயர்ந்து கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரு டாலருக்கு 63.48 ரூபாயாக முடிவடைந்தது. 

திங்கள்கிழமை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 62.48 ரூபாய் வரை உயர்நது, வர்த்தகத்தின் முடிவில் 62.83 ரூபாயாக முடிவடைந்தது.

சென்ற மாத நிலைமையைப் பார்க்கும் போது ஒரு கட்டத்தில் 70 ரூபாய் அளவுக்கு சரிந்துவிடும் என்றே பல முதலீட்டாளர்களும் நினைத்தார்கள். 

இந்த மாத ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னாராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் டாலரில் கடன் திரட்டுவதையும், இந்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் டாலர்களை ரிசர்வ் வங்கியில் அடமானம் வைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுத்ததால் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.

“ரகுராம் ராஜன் விளைவுகளுக்கு” பிறகும் திங்கள்கிழமை ரூபாய் மதிப்பு உயர காரணம் இருக்கிறது என்றார் ஆனந்த் ரதியின் தலைமை கரன்ஸி அனலிஸ்ட் சிவசுப்ரமணியம். 

ரூபாயின் ஏற்ற இறக்கங்களுக்கு இந்திய நடவடிக்கைகள் மட்டும் காரணம் அல்ல. டாலரின் ஏற்ற இறக்கங்களும் ரூபாய்க்கு முக்கியம்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவர் பென் பெர்னான்கி வரும் ஜனவரி மாதம் ஓய்வு பெற இருக்கிறார். 

அவருக்கு அடுத்த தலைவர் யார் என்பதை கூடிய விரைவில் அமெரிக்க அரசாங்கம் அறிவிக்க இருக்கிறது. 

அதில் லாரி சம்மர்ஸ் மற்றும் ஜெனட் ஆலன் ஆகிய இருவர் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது.

 இந்த நிலையில் முக்கிய போட்டியாளாரான லாரி சம்மர்ஸ் அந்த போட்டியில் இருந்து விலகுவதாக சொல்லி இருக்கிறார்.

இவர் அமெரிக்க அரசாங்கம் தற்போது செய்துவரும் 85 பில்லியன் டாலர் ஊக்க நடவடிக்கைகளுக்கு (புதிதாக பணத்தை அச்சடித்து பணபுழக்கத்தை அதிகரிப்பது) எதிரானவர். 

இந்தப் போட்டியில் இருந்து இவர் விலகிவிட்டதால், ஜெனட் ஆலன் பதவி ஏற்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.. 

இவர் அமெரிக்க அரசு செய்துவரும் ஊக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவானவர். இதனால் அமெரிக்க டாலர் வலுவிழந்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு அதிகரித்து.

 இந்திய ரூபாய் மட்டுமல்லாமல் உலகின் முக்கிய நாணயங்களும் அமெரிக்க டாலருக்கு எதிராக உயரவே செய்தது. 

திங்கள்கிழமை பணவீக்க தகவல்கள் வந்ததால், ரூபாயின் மதிப்பில் சிறிய சரிவுடன் முடிந்தது என்றார்.

புதன் கிழமை நடக்கும் ஃபெடரல் ரிசர்வ் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் மற்றும் வெள்ளிகிழமை நடக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆகியவற்றைப் பொருத்து ரூபாயின் எதிர்காலம் இருக்கும்.