தி இந்து  ஜனவரி 10 2014

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து சரியான காட்சிகளை அமைத்த விதத்தில் ’ஜில்லா’ வந்திருக்கு நல்லா!

மதுரை ஏரியா தாதா சிவன் (மோகன்லால்). அவரது கார் டிரைவர் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட, அவரது மகன் சக்தி(விஜய்)யை எடுத்து வளர்க்கிறார். சக்திக்கு போலீஸ் அதிகாரிகள் என்றாலே ஆகாது. போலீஸுடன் ஏற்பட்ட தகராறில் தனக்கு போலீஸில் செல்வாக்குள்ள ஆள் வேண்டும் என்று சக்தியை போலீஸ் ஆக்குகிறார். அதற்குபிறகு ஏற்பட்ட வெடி விபத்தில் சிவன் - சக்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது ஜெயித்தது யார் என்பதை 3 மணி நேர படமாக கூறியிருக்கிறார்கள்.

விஜய், மோகன்லால் என இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு, இருவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்தில் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர் நேசன். மதுரை தாதாவாக நரை தாடியுடன் மோகன்லால், நடிப்பில் பின்னியிருக்கிறார். மோகன்லாலை இமிடேட் செய்வது, அவரின் எதிரிகளை பந்தாடுவதில் ஆரம்பித்து, போலீஸாக ஆனவுடன் மோகன்லாலை திருத்த நினைப்பது என நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் விஜய். இடைவேளை சமயத்தில் விஜய் - மோகன்லால் பேசும் வசனக் காட்சிகள், படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

விஜய்யுடன் நடனமாட ஒரு பெண் வேண்டுமே என நாயகியாக காஜல் அகர்வாலை சேர்த்திருக்கிறார்கள். பாடலுக்கு மட்டும் இருந்தால் பத்தாது என்று சில காட்சிகளில் வந்து செல்கிறார். மற்றபடி 'ஜில்லா'வில் காஜல் ஸ்கோர் செய்ய ஸ்கோப் இல்லை. விஜய், மோகன்லால் இருவரையும் தொடர்ந்து அடுத்து இடத்தில் சூரி. போலீஸ் கான்ஸ்டபிளாக இவர் பேசும் வசனக் காட்சிகள் சிரிப்பு சரவெடி. இப்படத்தின் மூலம் இனி முக்கிய நாயகர்களின் படங்களில் சூரிக்கு ஒரு ரோல் ரிசர்வ்ட்.

பாடல்கள் மட்டுமல்லாது படத்தின் பின்னணி இசையிலும் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் இமான். போலீஸ் உடை போட்டுக் கொண்டு விஜய் நடந்து வரும் காட்சிகளில் இவரின் பின்னணி இசை ஓஹோ. கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவில் நிறைய இடத்தில் வரும் CHOPPER ஷாட்ஸ் பிரமிக்க வைக்கின்றன.

படத்தின் குறை என்றால் படத்தின் நீளம். 3 மணி நேரம் ஒடிக்கூடிய படமாக இருக்கிறது 'ஜில்லா'. மிகவும் நீளமான படம் என்பதால் எப்படா முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமன்றி இடைவேளைக்கு முன்பு இருந்த சுவாரசியம், பின்பு இல்லை. வில்லன் இவன் தான் என்று தெரிந்தும் க்ளைமாக்ஸில் நீளும் காட்சிகள்... முடியல. இடைவேளைக்குப் பின் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் திரைக்கதையில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கின்றன.

விஜய், மோகன்லாலுக்கு சரியா விதத்தில் காட்சிகளை அமைத்த சுவாரசியத்தை படத்தின் நீளத்திலும் காட்டியிருந்தால் இன்னும் ஜொலித்திருக்கும் 'ஜில்லா'