"இமயமலையும் கங்கையும் இந்தியாவுடன் எவ்வளவு பிரிக்க முடியாத அம்சங்களோ, அதைப் போலவே காந்தியமும் இந்தியாவும்" என்று மோகித்சென் ஒரு முறை குறிப்பிட்டார். 

தன்னலமறுப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, இந்திய விடுதலைக்குப் பிறகும் ஒரு துறவி போல் வாழ்ந்தமையே போன்ற உயர்ந்த அம்சங்கள் காந்தி அடிகளை இமயத்திற்கும் உயரமாக தூக்கி நிறுத்தி உள்ளன.

காந்திஜி ஒரு மிதவாதி, போராட்டங்களில் சிறு உரசலைக்கூட விரும்பாதவர் என்ற மென்மையான சித்திரமே நம்மிடம் பதிந்துள்ளது. காந்தி அகிம்சா மூர்த்தியாகவும் காந்தியம் அகிம்சையின் முறையீடாகவுமே அறியப்படுகிறது. கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தின் தளகர்த்தாவாக காந்தி முன்மொழியப்படுகிறார்.

1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின் நடந்த விடுதலைப் போராட்டத்தில், தனது ’இன்றைய இந்தியா’ என்ற நூலில் ரஜினி பாமித்த் முன்று முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடுகிறார்.

1. போராட்டத்தின் முதல் பேரலை1905-1910, 2. இரண்டாம் பேரலை 1919-1922, 3. மூன்றாம் பேரலை 1930-1934. இக்கால இடைவெளிக்குப் பிறகு 1942—களில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் ஆழிப் பேரலையாக அமைகிறது. செய் அல்லது செத்து மடி என்று காந்திஜி குறிப்பிடுகிறார். 

இக்காலத்தில் காந்திஜியின் அரசியல் நவடிக்கைகளை ஆய்வு செய்தவர்கள் பல மாற்றங்களை உணர முடியும். தொடக்கத்தில் ஆங்கிலேயரிடம் தமக்கு இருந்த விசுவாசத்தை காந்திஜி பல முறை ஒத்துக் கொண்டுள்ளார். விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாடும் கமிட்டியில் தானும் உறுப்பினர் என்றும் ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு மன்னரிடம் விசுவாசம் காட்டியதாகவும் தம் ’சத்திய சோதனை’யில் குறிப்பிடுகிறார். ”என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்துக் கீதம் பாட கற்றுக் கொடுத்தேன்” என்றும் காந்திஜி கூறுகிறார்.


1926-க்குப் பிறகு பூரண சுதந்திர தீர்மானத்தை காந்திஜி ஏற்றுக்கொண்டார். காந்திஜி அறிவித்த ரௌலட் மசோதா எதிர்ப்பு போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை மக்களின் பேராதரவை பெற்றன. இந்தியா முழுவதும் காட்டுத் தீயாய் இந்த போராட்டங்களின் கனல் தகித்தது. இந்தியர்கள் வெற்றிக்கு ஓரங்குல தூரத்தில் வந்து விட்டனர் என்று வெள்ளையரான லாயிட் பிரபு நெஞ்சு படபடத்தார். 

எனினும் தள்ளுமுள்ளுகள்
வலுக்கும்போது காந்திஜி திடீரென போராட்டங்களை நிறுத்தி விடுவார். 1922-ல் சௌரி – சௌரா நிகழ்வுகள், 146-ல் தல்வார் கப்பல் படை எழுச்சி உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு. இவ்வளவுக்கும், பல போராட்டங்களில் இந்தியத் தரப்பில் வன்முறை என்பது தற்காப்புக்காகவே இருந்தது.


"பலாத்கார முறையில் சுதந்திரம் பெறுவதைவிட தனிப்பட்ட முறையில் நான் யுகக் கணக்கில் காத்திருப்பேன்" என்று காந்திஜி கூறினார். இரண்டாம் உலகப் போர் காலமே இந்திய அரசியல் தட்ப வெப்பங்களை புரட்டிப் போட்டது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமான இங்கிலாந்தின் கூரையிலிருந்து ஓடுகள் விழுந்தன. இந்தியா கொதிநிலைக்கு மாறிக் கொண்டிருந்தது. சர் ஸ்ட்ராபோர்டு கிரிப்ஸ் என்பவர் தலைமையில் ஒரு குழுவை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர். இந்திய சுதந்திரம் குறித்து பரிந்துரை செய்ய இந்த குழு அறிவிக்கப்பட்டிருந்தது. இக்குழுவும் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் சுதந்திரத்திற்காக போராடிய அணிகளை அணுகியது.


கிரிப்ஸ் திட்டத்தை காந்திஜி எதிர்த்தார். போராட்டத்தின் தன்மையை மாற்றினார். புதிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்." முடிந்தவரை இந்த போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவே நான் முயற்சிப்பேன். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் அதன் நேச சக்திகளையும் இந்த போராட்டம் ஈர்க்காவிடில் நான் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டியது இருக்கும். அதன் பின்னால் இந்தியாவில் நடக்கும் காரியங்கள் அனைத்திற்கும்
பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பேற்க நேரிடும். நான் பொறுப்பேற்க இயலாது” என்று காந்திஜி கூறினார். 

12.7.1942 அரிசன் வார இதழில் புதிய போராட்டம் குறித்து காந்திஜி பின் வருமாறு எழுதினார்.

"இந்த தடவை முன் கூட்டியே அறிவித்துவிட்டு நான் கைதாகப் போவதில்லை. இந்த போராட்டத்தில் நம்மில் யாரும் கைதாக வேண்டிய அவசியம் இல்லை. இம்முறை நடக்க இருக்கும் போராட்டத்தை இயன்ற வரைக்கும் குறித்த காலகட்டத்தில் வேகமாகவும் நடத்த விரும்புகிறேன்."
காந்திஜியின் நிருபர்கள் சந்திப்பு 07.08.1942-ல் நடந்தது. இந்த சந்திப்பு வித்தியாசமாக இருந்தது. இந்த போராட்டத்தில் நீங்கள கைதாவீர்களா என்று காந்திஜியிடம் நிருபர்கள் கேட்டனர். "இல்லை, இந்த முறை நானாக கைதாகும் பிரச்சினையே எழவில்லை. அப்படியே கைது செய்யப்பட்டாலும் உண்ணாநோன்பு போன்ற பழைய முறைகளை கையாளுவேனா, இல்லையா என்பதை இப்போது ஒன்றும் கூற முடியாது" என்று மர்மமாக காந்திஜி பதில் கூறினார்.

இன்னும் உச்சத்தில் காந்திஜி சொன்னார். "பிரிட்டிஷ் அரசாங்கம் முன் கூட்டியே என்னை கைது செய்தால் நான் கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாடு முழுக்க இறுதி போராட்டம் துவங்கி விடும். அந்த போராட்டம் துவங்கிய உடனேயே பலாத்காரச் செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடிக்கும். இந்த முறை அப்படிப்பட்ட பலாத்கார புரட்சி ஏற்பட்டால் நான் அதை பொருட்படுத்த மாட்டேன்”.

பகத்சிங் போராட்ட முறையை காந்திஜி அங்கீகரிக்கவில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அடையாளப்பூர்வமாக டில்லி மத்தி சட்டசபையில் பகத்சிங் வெடிகுண்டு வீசினார். யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறினார். பகத்சிங்கிற்கோ மரண தண்டனையை வெள்ளையர்கள் 23.03.1931 அன்றுதிருட்டுத்தனமாக நிறைவேற்றினர்.

”பகத்சிங்கை தூக்கிலிட்டதன் மூலம் சுதந்திர இந்தியாவின் கூர்வாள் உறையிலிருந்து உருவப்பட்டு விட்டது. அதற்கு காரணமான பிரிட்டிஷாரை பழிக்குப் பழி வாங்காமல் உறைக்குள் வாள் திரும்பாது” என்று கவிக்குயில்சரோஜினி நாயுடு கூறினார்.

காந்திஜி நினைத்திருந்தால் பகத்சிங்கின் தூக்கு தடுக்கப்பட்டிருக்கும் என்ற கருத்தும் அப்போது உலவியது. பகத்சிங்கின் போராட்ட வடிவத்தை காந்திஜி ஏற்றுக் கொள்ளாததால் காந்திஜி கண்டு கொள்ளவில்லை என்று அப்போது பேசப்பட்டது. இவையெல்லாம் 1931-களில் நடந்தது.

மேலும் பத்தாண்டுகள ஓடின. பம்பாயிலிருந்து வெளியாகும் நியூஸ் கிரானிக்கிள் என்ற பத்திரிகையில் காந்திஜியின் அறிக்கை வெளிவந்தது.
”ஒரு வெகுஜன இயக்கத்தில் பலாத்காரப் போராட்டங்களும் செயல்களும் உட்பட்டவைதான், அங்கீகரிக்கப்பட்டவைதான்” காந்திஜியின் அறிக்கையா என்று பிரிட்டனுக்கே கிலி பிடித்து விட்டது. பட்டாபி சீத்தாராமையா அப்போது காங்கிரஸ் கட்சியின் புகழ் பெற்றத் தலைவர். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜியை எதிர்த்து நின்றவர்.

'பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி’ என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். ’ஆந்திர சுற்றறிக்கை’ என்று அந்த அறிக்கை அழைக்கப்பட்டது.


தந்திக் கம்பங்களை அறுக்கவும் தபால் ஆபீஸ்களை கைப்பற்றவும் தண்டவாளங்களையும் பாலங்களையும் வெடி வைத்து தகர்க்கவும் அந்த சுற்றறிக்கைஅனுமதி தந்தது..08.08.1942-ல் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மௌலானா அபுல்கலாம் ஆசாத் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு போராட்ட தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

”சாம்ராஜ்ய நாடுகளின் சொத்துக்கள் ஆதிக்கம் புரியும் வல்லரசு நாட்டின் பலத்தை அதிகரிப்பதில்லை. மாறாக சுமையாகவும் சாபக்கோடாகவும் விளங்குகிறது. நவீன ஏகாதிபத்திய ஆட்சிக்கு இணையற்ற உதாரணம் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆதிக்கமாகும். எனவே, இந்தியாவிலிருந்து உடனடியாக பிரிட்டஷ் ஆட்சி வெளியேற வேண்டும். என்ற கோரிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முழு பலத்துடன் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது” என்று இந்த தீர்மானம் விரிவாகப் பேசியது. இந்திய மக்கள் அனைவரும் கட்டுப்பாடான ராணுவ வீரர்கள் போல்
ஒற்றுமையுடன் பணியாற்றி காந்திஜியின் கட்டளைகளை நிறைவேற்ற அந்த தீர்மானம் அறைகூவி அழைத்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபடுவோர் தமக்குத்தாமே வழிகாட்டியாக மாறி முடிவுகளை எடுத்துச் செயல்பட காந்திஜியின் கட்டளைகள் அனுமதி வழங்கின.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரவே காந்திஜி, ஜவகர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர் என்பது கூட வெளி உலகிற்கு தெரியாது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்குத்தாமே வழிகாட்டிகளாக மாறினர். மிதுனம், ஆஸ்தி., சதாரா போன்ற மாவட்டங்களில் விடுதலை இயக்க வீரர்களால் காவல் நிலையங்கள் கைப்பற்றப்பட்டன. காவல்துறையினர் லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். பல இடங்களில் சுதந்திர இந்திய அரசு கிளைகள் உதயமாகின. அரசுக் கருவூலம் போராட்டக்காரர்கள் வசம் வந்தது. 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1930-ல கார்வால் கலகம் நடந்தது. விடுதலைப் போராட்டக்காரர்கள் முஸ்லீம் மதத்தினர், சிப்பாய்கள் இந்து
மதத்தினர், எனினும் சிப்பாய்கள் போராளிகளை சுட மறுத்தனர். தல்வார் கப்பல் படை எழுச்சியும் கூட இந்து-முஸ்லீம் இணைந்து நடத்தியதுதான். வன்முறை வெடித்த பல போராட்டங்களில் இந்தியாவை ஒரு வெறிக்கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது என்று காந்திஜி கூறிவந்தார். 

அப்படிப்பட்ட காந்திஜியே போராட்டவீர்ர்களை தம்மை தாமே வழிகாட்டிகளாக மாறச் சொன்னார் என்றால் மாற்றத்தின் அழுத்தத்தை நாம் உணர முடியாதா. காந்திஜி மட்டுமல்ல, அவரது இதயமாக, ஆன்மாவாக இருந்த அவரது சீடர்களும் தமது கருத்துகளை அப்படித்தான் முழங்கினர். காந்திஜியின் செயலரான மகாதேவ தேசாய் அரிசன பத்திரிக்கையில் ஆகஸ்டு போராட்டம் பற்றி பின்வருமாறு எழுதினார்.


”இந்த முறை நமது போராட்டம் சாத்வீக வழிப்படியே இருந்தாலும் அவை நம்முடைய எதிரியின் சகல நடவடிக்கைகளிலும் குறுக்கிடுவதாக அமைய வேண்டும்”. ஓடும் ஆற்று நீரில் கால்களிலிருந்து மண் அரிக்கப்படுவதுபோல் அகிம்சா முறை1940-களுக்கு பிந்தைய காலத்தில கரைந்து கொண்டிருந்தது. 

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்கு காரணம் மக்களின் பேரெழுச்சி. இதனை முடுக்கிவிட்டதில் காந்திஜியின் புது விசை முக்கிய பங்கு வகிக்கிறது. காந்தி அடிகளின் வரலாற்றில் இந்த பக்கங்களும் உரிய முக்கியத்துவம் பெறவேண்டும்.

 காய்தல் உவத்தல் இன்றி, விருப்பு வெறுப்பி இன்றி காந்திஜியும் காந்தியமும் மென்மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமா?

சான்று ஆதாரங்கள்:
1. இன்றைய இந்தியா – ரஜினி பாமிதத்
2. சத்திய சோதனை – மகாத்மா காந்தி
3. வரலாறு படைத்த வழக்குகள் – சிவலை இளமதி
4. மகாத்மா ஒர் மார்க்சிஸ்ட் மதிப்பீடு (எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஜி,
சர்தேசாய், மோகித்சென்)