Wednesday, September 11, 2013

`நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ - மஹா கவி பாரதி



செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று!

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்.
மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். 
மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். 
அழகிய தமிழ் மகன் இவன்!

Vikatan EMagazine :11 Sep  2013
பாரதி..! ( பாகம் - 1 )
கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!



தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார்.
 தூக்கத்தில் உயிர் பிரிந்தது. 
அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. 
அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!

No comments:

Post a Comment