Monday, August 19, 2013

உலகமயமாதல் :ஏற்றத்தாழ்வு உண்டு; எழுச்சி இல்லை




First Published : 19 August 2013 03:52 AM IST
கடந்த முப்பது ஆண்டுகளாக உலகமயமாதல் என்ற மாயமான் தோற்றுவித்துள்ள ஏற்றத்தாழ்வு வளர்ந்து செல்வதாக உலகளாவிய நிலையில் பல்வேறு பொருளாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இந்த ஏற்றத்தாழ்வு வளர்ச்சியுற்ற வடக்கு நாடுகளில் சொற்பமாகவும் வளரும் நாடுகளில் மிகுந்தும் காணப்படுகிறது. இந்தியாவிலும் சரி ஏனைய தெற்கு நாடுகளிலும் சரி சொத்துகளிலும், வருமானத்திலும் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகளைத் துல்லியமாகவே கவனிக்கலாம்.
கடந்த நூற்றாண்டில் வருமானத்திலும் சொத்திலும் தோன்றிய ஏற்றத்தாழ்வு காரணமாக ரஷியாவிலும் சீனாவிலும் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. இந்தியாவில் சோஷலிசக் கருத்துகள் வேர்விட்டன. என்ன பயன்? லெனின் பிறந்த நாட்டில் ஊழல் உண்டு. மா.சே.துங் பிறந்த நாட்டிலும் ஊழல் உண்டு. காந்தியும் நேருவும் பிறந்த நாட்டிலும் ஊழல் சந்தி சிரிக்கிறது. தொழில்புரட்சி ஏற்பட்டது பிரிட்டனில். தொழிலாளர் புரட்சி ஏற்பட்டது சோவியத் ரஷியாவில். இன்று தொழிலாளர் வருமானத்திலேயே ஏற்றத்தாழ்வு உள்ளபோது, தொழிற்சங்கப் பொருளாதாரம் எதுவும் சமதர்மத்தை ஏற்படுத்தும் என்பது மதியீனம்.
கருப்புப்பணமும் உலகளாவியதாக உள்ளது. வளர்ச்சியை மையமிட்ட வளரும் நாடுகளும், கம்யூனிச - சோஷலிச நாடுகளும் உலகமயமாதல் என்ற மாயமான் வலையில் விழுந்த பின்னர், கிடைத்த பலன் வீழ்ச்சியே தவிர வளர்ச்சி இல்லை.
 இன்று உலகமயமாதலுக்குப் பின் விளைந்த ஏற்றத்தாழ்வை இந்தியாவில் கவனிக்க எந்தப் புள்ளிவிவரமும் தேவையில்லை. இந்திய ஏற்றத்தாழ்வு பிரத்தியட்ச ரூபிணியாகக் காட்சி தருகிறது. இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களில் 50 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்கின்றனர். சராசரி மாதவருமானம் இவர்களுக்கு ரூ. 2,000-ஐ விடக் குறைவுதான். மீதி 50 கோடி மக்களில் சுமார் 40 கோடி மக்களின் வருமானம் ரூ. 2,000-லிருந்து ரூ. 10,000 என்று கொள்ளலாம்.
 இந்த வரிசையில் விவசாயத் தொழிலாளர்கள், நிரந்தரமற்ற வேறுதுறைப் பணியாளர்கள் அடங்குவர். மீதி 10 கோடி மக்களில் சுமார் 9 கோடி மக்கள் கீழ்நிலை நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், எழுத்தர்கள், எழுத்தாளர்கள். சிறு வியாபாரிகள் வருமானம் மாதம் ரூ. 20,000 முதல் 1,00,000 வரை வேறுபடலாம். மீதி 1 கோடி மக்களின் வருமானம் 1,00,000-க்கு மேல் பில்லியன் வரை என்று கொள்வோமானால், இதில் கீழ்வரிசையில் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் கார்ப்பரேட் எக்சிக்யூட்டிவ்கள், நிர்வாக இயக்குநர்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், மேல்மட்ட கெஜட்டட் அலுவலர்கள், நடுத்தரத் தொழில் அதிபர்கள் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். மேல்மட்ட அதிகார வர்க்கம் அபாரமாக, 1,00,000 ரூபாய் முதல் 10,00,000 வரை வருமானம் பெறலாம். மீதி 50 லட்சத்தில் அடங்குவோர் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், பெரிய தொழிலதிபர்கள், கருப்புப் பண முதலாளிகள். இவர்களில் அநேகமாக ஆயிரம் பேர் உலகப் பணக்காரர்கள் வரிசையில் வரக்கூடிய மில்லியன் பில்லியனர்களாக இருப்பார்கள்.
 வளர்ச்சி என்பது இந்தியாவில் 1 சதவீத மக்களுக்கு லாபம் வழங்கியிருக்கலாம். மீதி 99 சதவீத மக்களுக்கு லாபம் இல்லாதது மட்டுமல்ல அவர்களை இலவசங்களுக்கு ஏங்கும் மக்களாக்கிவிட்டது. இவ்வளவு ஏற்றத்தாழ்வு இருந்தாலும் மக்கள் எழுச்சி ஏற்படவில்லை.
 வறுமையை ஒழிப்பது ஏற்றத்தாழ்வைப் போக்குவது எல்லாம் ஒரு நாட்டின் பொருளாதார எழுச்சிக்கு அறிகுறி. உலக அரசியலில் கம்யூனிசமும் சோஷலிசமும் தோற்றுவிட்டாலும் முதலாளித்துவ அடிப்படையில் ஏற்றத்தாழ்வையும் வறுமையையும் ஒழிக்கும் எழுச்சி 1929-இல் தோன்றி 10 ஆண்டுக்காலம் உலகை ஆட்சி செய்த மாபெரும் வீழ்ச்சியை (கிரேட் டிப்ரஷன்) ஒழிக்க கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ஜி.டி.பி. அதுதான் இந்தியாவில் ஆட்சி செய்கிறது.
 1930-இல் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு சொல்லாட்சிதான் ஜி.டி.பி. என்ற ஒட்டு மொத்த உற்பத்தி, பணி வருமான மதிப்பு. இது உயர்ந்தால் வளர்ச்சி ஏற்பட்டு வீழ்ச்சி மடிந்து நாடு வளம் பெறும் என்று நம்பப்பட்டது. 1929 முதல் 1940 வரை மாபெரும் பொருளாதார வீழ்ச்சி நீடித்த காலகட்டத்தில் ஹிட்லரின் நாசிசத்தை எதிர்த்து நிகழ்ந்த இரண்டாவது உலகப்போர் காரணமாக நிகழ்ந்த எழுச்சி பொருளாதார வீழ்ச்சியைக் காப்பாற்றியுள்ளது.
 இப்படிப்பட்ட போர் அரசியல் காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியைப் போக்க ரூஸ்வெல்ட்டுக்கு ஆலோசனை வழங்கிய ஜான் மேனார்டு கீன்சை உலகம் அறியும். ஆனால் ஜி.டி.பியைக் கண்டுபிடித்த சைமன் குஸ்நட்ஸ் என்ற அமெரிக்கப் பொருளியல் மேதையைப் பற்றிப் பலர் அறிய மாட்டார்கள். இவர் ரஷியாவில் பிறந்தவர். கீன்சைப்போல் இவரும் வீழ்ச்சியைப் போக்கிப் பொருளாதாரத்தை உயர்த்த திட்டங்கள் வகுத்தார். வருமான ஏற்றத்தாழ்வைப் போக்க முதற்கண் தேசவருமானம் பற்றிய புள்ளிவிவரமும் சொத்து, பணிகள், தொழில் உற்பத்தி பற்றிய பணமதிப்பையும் கணக்கிட்டு ஜி.டி.பியை நிர்ணயித்தபின், வருமான வினியோகம் பற்றி திட்டமிட வேண்டுமென்றார்.
 ஜி.டி.பி என்ற கருத்து குஸ்நட்ஸýடையது என்றாலும் முதல் முதலாக உலகில் தேசவருமானம் பற்றிய மதிப்பீட்டைச் செய்தவர் தாதாபாய் நவ்ரோஜி (1868). பின்னர் வில்லியம் டிக்பி, பின்ட்லே ஷிர்ராஸ், (1900 - 1911) ஷா மற்றும் கம்பாட்டா (1921) ஆகியோரும் இந்திய தேசவருமானத்தை மதிப்பிட்டுள்ளனர்.
 குஸ்நட்ஸின் சமகாலத்தில் இந்தியாவில் வி.கே.ஆர்.வி. ராவ் மற்றும் ஆர்.சி. தேசாய் கணக்கிட்டார்கள். அமெரிக்காவில் குஸ்நட்சைப் பின்பற்றி வி.கே.ஆர்.வி. ராவ் விஞ்ஞான ரீதியாக  இந்திய தேச வருமானம் கணக்கிடும் வழிமுறையைச் செய்துள்ளார். அன்று ராவ் போட்ட கணக்கு முறையைத்தான் தேசிய திட்ட மாதிரி ஆய்வுகள் கடைப்பிடிக்கின்றன.
  1955-இல் சைமன் குஸ்நட்ஸ் வருமான ஏற்றத்தாழ்வைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ""வளர்ச்சியின் தொடக்கத்தில் ஒரு சமூகம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளபோது தனிநபர் வருமானம் குறைவாயிருக்கும். ஏற்றத்தாழ்வு இடைவெளியும் குறைவாக இருக்கும். தொழில் வளர்ச்சியும், நகரமயமாதலும் நிகழும்போது பொருளாதார வளர்ச்சி வேகமாகச் செல்லும். அதேசமயம் வருமான ஏற்றத்தாழ்வும் அகண்டு செல்லும். குறைந்த வருமானமுள்ளவர்கள் கொதித்து எழுவார்கள். அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்று ஏற்றத்தாழ்வு இடைவெளியைக் குறைக்கக்கூடிய சமூக முதலீடுகளான நலவாழ்வு, கல்வி, தொழிலாளர் நலன் என்று செலவிடும்போது, ஏற்றத்தாழ்வு இடைவெளி குறையும்'' என்று கூறியுள்ளார். அப்படி எதுவும் இந்தியாவில் நிகழவில்லை. குஸ்நட்ஸ் கூறியதைத்தான் அமார்த்தியா சென்னும் இப்போது கூறி வருகிறார்.
 தமிழ்நாட்டில் மண்வெட்டி, கடப்பாரை பிடித்து கடினமான வேலை செய்யும் ஒரு விவசாயத் தொழிலாளிக்கு தினம் ரூ. 400 வருமானம் உண்டு. 30 நாள்களில் 15 முதல் 20 நாள்கள் வேலைக்குச் செல்வதாகக் கொண்டால் மாதம் ரூ. 5,000 முதல் 6,000 வருமானம் என்று கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு விவசாயத் தொழிலாளி தனது பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க ஆசைப்படுகிறார். எல்.கே.ஜி. படிக்கவே மாதம் சராசரி ரூ. 800 செலவாகும். அவர் குடும்பத்தில் யாருக்காவது நோய் வரும்போது கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்வதில்லை. அது அருகில் இருக்காது. இருந்தாலும் கவனிக்க மாட்டார்கள். ஆகவே, பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகளே கதி. ஜுரம், வயிற்றுவலி என்று சென்றாலே ரூ. 500-க்கு மேல் தனியார் மருத்துவமனையில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
 தனியார் ஆங்கிலப் பள்ளியும், தனியார் மருத்துவமனையும் விவரம் அறியாத அப்பாவித் தொழிலாளர்களின் பணத்தை அட்டை உறிஞ்சுவது போல் உறிஞ்சிவிடுகின்றன. பற்றாததற்குப் பற்றாக்குறைப் பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவை அடித்தட்டு மக்களுக்கு எவ்வளவு துயரம் இருந்தாலும், சகித்துக்கொண்டு கூட்டுவட்டிக்குக் கடன் வாங்கி வட்டி கட்டியே வாழ்நாளை ஓட்டுகிறார்கள்.
 சொத்துக் கணக்குக்கு வந்தால் நாட்டின் ஒட்டு மொத்த சொத்துகளில் சுமார் 50 சதவிகிதம் மேல்மட்டப் பணக்காரர்கள் வரிசையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபதிகள், உலகப் பணக்காரர்கள் வரிசையில் வரக்கூடிய இந்தியத் தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களவை மாநிலங்களவை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள் அடங்கலாம்.
 நமது மதிப்பிற்குரிய நிதியமைச்சர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் வளர்ச்சிப் பாதையை உருவாக்கி ஜி.டி.பி.யை உயர்த்தியுள்ளது என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்வதுண்டு. நிதியமைச்சரின் பேச்சில் இரண்டு தப்பெண்ணங்கள் உள்ளன. முதலில், வளர்ச்சியில் வீழ்ச்சியே கண்ட பலன். 2004 - 2008 - களில் 10 முதல் 13 சதவீதமாயிருந்த ஜி.டி.பி வளர்ச்சி 2011 - 12-இல் 6.5 சதவீதமாகக் குறைந்து 2012 - 13-இல் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 இரண்டாவது தப்பெண்ணம், வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும் தொடர்பு இல்லை. எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவில்லை. ஏழைமக்களின் வருமான உயர்வுக்கும் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக நிதியமைச்சர் கூறுவது, உண்மைக்குப் புறம்பானது.
 ஜி.டி.பி.யில் தொழிலாளர் சம்பளத்தின் பங்கு கடந்த 20 ஆண்டுகளில் 30 சதவீதம் குறைந்துள்ளதாக உலகத் தொழிலாளர் நல அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது. ஏழைகளின் வருமானம் எப்படி உயரும்? ஜி.டி.பி. கணக்கில் வராத கருப்புப் பணம் உங்கள் கையில். அது வருமான வரியை ஏமாற்றிய பணம். எங்கள் பணம்  என்று சொல்லி 435 ரூபாயை ஆதார அட்டைப்படி எங்கள் கணக்கில் வங்கியில் சேர்ப்பித்துவிட்டு ரூ. 900 கொடுத்து கேஸ் சிலிண்டர் வாங்கச் சொன்னால் நாங்கள் எங்கே போவோம்? என்று ஒரு தொழிலாளி கூறுவது நிதியமைச்சரின் செவியில் விழுந்தாலும்கூட அவரால் பேச முடியாது - வாழ்க பாரதம்!
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment