திருவண்ணாமலை கிருத்திகை தீப திருவிழா....
கார்த்திகை ,12, நந்தன வருடம்
27 நவம்பர் 2012
நன்றி : வாயாடி
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
நன்றி :செய்தி & புகைப்படங்கள் -தினமணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபத்தை பக்தர்களுக்குக் காட்டும் சிவாச்சாரியார்.
பஞ்சபூதத் தலங்கள் ஐந்தில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.
சிவனே மலையாகக் காட்சி: பிரம்மா, விஷ்ணுவுக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இப்பிரச்னையைத் தீர்க்க முயன்ற சிவன், தனது அடியையும், முடியையும் எவர் கண்டெடுத்து வருகிறார்களோ அவரே பெரியவர் என்றார். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடியையும், முடியையும் காணமுடியவில்லை.
இதையடுத்து, இருவருக்கும் ஜோதி வடிவமாக சிவன் காட்சியளித்ததைச் சித்தரிக்கும் வகையில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாகவும் வணங்கப்படுகிறது.
பரணி தீபம்: தீபத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பரணி தீபம் செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 2.45 முதல் 3.40 மணி வரை பரணி பூஜை நடத்தப்பட்டு, 3.45 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை மலை மீது செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட மகா தீபம்.
இதே நேரத்தில் மகா மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்தியின் வலது புறம் பஞ்ச மடக்குகள் வைத்து தீபம் ஏற்றப்பட்டு, சிவாச்சாரியார்களால் மடக்குப் பூஜை செய்யப்பட்டது.
4 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அதே கற்பூர தீபத்தைக் கொண்டு பஞ்ச மடக்குகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியார்கள் மூலம் இதர சுவாமி சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.
2 அமைச்சர்கள் பங்கேற்பு: விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா, ஆட்சியர் விஜய் பிங்ளே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, மேலாளர் இந்திரஜித், மேற்பார்வையாளர் துவாரகநாத் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மகா தீபம்: இதையடுத்து, கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 9 மணிக்கு தீபம் ஏற்றத் தேவையான திரிகள் நாட்டார்கள் சமூகத்தினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி விமானங்கள் ஐந்தும் தீபதரிசன மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. 5.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சுவாமி சன்னதியில் எழுந்தருளினர். 5.50 முதல் 5.59 மணிக்குள் சுவாமி சன்னதி பின்புறம் இருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு, சரியாக 6 மணிக்கு தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எதிரே காட்சியளித்தார்.
காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்குகளை மூங்கில் தட்டில் வைத்து, தீபமுறை நாட்டார்கள் தலையில் சுமந்துகொண்டு 2ஆம் பிரகாரத்தில் வலம் வந்து, கொடிமரம் முன்பு நிறுவப்பட்ட அகண்ட தீப குண்டத்தில் சேர்த்தனர்.
இதே நேரத்தில் வைகுந்த வாசல் வழியாக, மலை உச்சிக்கு தீபம் ஏற்றுவதற்கான "எலால் தீபம்' மூலம் சமிக்ஞை காட்டப்பட்டது. தொடர்ந்து, மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது, கோயில் வளாகம், திருவண்ணாமலை நகரம், ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருந்த பல லட்சம் பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று கரங்களை உயர்த்தி, முழக்கமிட்டு வணங்கினர்.
ஒளிவெள்ளம்: மலையில் தீப தரிசனம் பார்த்த மக்கள் வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டனர். இதனால் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் பிரகாசித்தது.
வாணவேடிக்கை: பின்னர், தீபதரிசன மண்டபத்தில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 3ஆம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது, கோயிலின் வடமேற்கு மூலையில் வாணவேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தீபதரிசன மண்டபத்தில் எழுந்தருளினர்.
தெப்பல் திருவிழா: விழாவின் தொடர்ச்சியாக புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. டிசம்பர் 1ஆம் தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்தாண்டுத் திருவிழா: முன்னதாக, இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்று வந்தன.
தேரோட்டம்: நவம்பர் 23ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 24ஆம் தேதி விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் (பஞ்ச ரதங்கள்) தேரோட்டமும் நடைபெற்றன.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவன்.
வடக்கு மண்டல ஐஜி பி.கண்ணப்பன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
..............................................................................................................................................................
நன்றி : தினமலர்
260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
திருவண்ணாமலையில் உருவான ஆதீனம்
குன்றக்குடி ஆதீனம் பக்திப்பணியில் பிரபலமானது. இந்த ஆதீனத்தை ஸ்ரீலஸ்ரீதெய்வசிகாமணி தேசிகர் திருவண்ணாமலையில் தோற்றுவித்தார். பின்னர் அது சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்கு மாற்றப்பட்டது. பிறகு குன்றக்குடிக்கு மாறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தத்தின் பெயரும் சிவகங்கை. சிவகங்கைக் கரையில் உருவான ஆதீனம், அதே பெயருள்ள ஊருக்கு மாறியது விந்தை தானே!
No comments:
Post a Comment