Friday, January 17, 2014

வறுமைக்கோடு (Poverty Line) என்றால் என்ன?

ஜோதி சிவஞானம் தி இந்து வெள்ளி, ஜனவரி 17, 2014


றுமையை வரையறுப்பதிலும், கணக்கிடுவதிலும் பொருளாதாரத்தின் பங்கு முக்கியம் என்று பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி 2011 -ல் மறைந்த சுரேஷ் டெண்டுல்கர் வரை பல பொருளியல் அறிஞர்கள், அரசின் வல்லுநர் குழுக்கள், உலக வங்கி போன்ற அமைப்புகள் வறுமையினை அளவிட முயன்றும், அதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் நடந்தேறியும், எல்லோரும் எற்றுக்கொள்ளுமளவுக்கு எந்த ஒரு வரையறையும், அளவீடும் இன்றுவரை எட்டப்படவில்லை.

‘வறுமை’ என்ன அர்த்தத்தை ஏந்தி வருகின்றதென்பது யார் கேள்வி கேட்கின்றார்கள், அது எப்படி புரிந்துகொள்ளப்பட்டு, யார் பதிலளிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. வறுமை பற்றி பல்வேறு மதிப்பீடுகள் இருந்தபோதும், வெகுவான விவாதத்திற்கும் அதிக சர்ச்சைக்கும், ஏன் அண்மையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியது திட்டக்குழுவின் வரையறையும் மதிப்பீடும்தான் என்பதால் அதனைப் பார்போம்.


திட்டக்குழுவின் வறுமை மதிப்பீடு

அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள். திட்டக்குழு இதை நகர்ப்புறத்துக்கு 2,400 கலோரி, கிராமப்புறத்துக்கு 2100 கலோரி என 1973-74 இல் மாற்றியமைத்தது; இதனடிப்படையில் அன்றைய விலைவாசியில் தினமும் 2400 கலோரியுள்ள உணவை கிராமங்களில் வாங்க ஒரு மாதத்திற்கு ஒருவருக்குத் தேவைப்பட்ட பணம் ரூ.49.10; நகர்ப்புறத்தில் தினமும் 2100 கலோரி உணவு வாங்க ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட பணம் ரூ.56.
இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள். இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர். 1973-74-ல் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுத் தேவையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வறுமைக்கோடு எந்தவித பெரிய மாற்றமும் இன்றி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடந்து கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் விலைவாசி ஏற்றத்துக்குத் தேவையான திருத்தங்கள் மட்டும் இதில் செய்யப்பட்டது. திட்டக்குழுவின் இந்த அணுகுமுறையும், ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும்தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துவிடுகின்றான் என்ற நிலைப்பாடும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாயின.

திட்டக்குழு, தன்னுடைய வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஐந்தாண்டுக்கொருமுறை NSS –ன் (National Sample Survey Organisation) நுகர்வோர் செலவினப்புள்ளி விவரத்தைக் கொண்டு வறுமையில் உள்ளோரை எண்ணிக்கையிலும், “தலை எண்ணிக்கை விகிதத்திலும்” ( Head Count Ratio ) கணக்கிடுகின்றது. அதாவது, வறுமைக்கோடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தேவைகள் இல்லாத மக்கள், எண்ணிக்கையில் எத்தனை பேர், மக்கள் தொகையில் எத்துனை சதவீதம் என கணக்கிடப்படுகின்றது.

1973-74-ல், ஒவ்வொரு நூறு பேரில் 55 பேர் ஏழைகளாகக் கணிக்கப்பட்டார்கள். அது 1999-2000-ல் இந்தியாவில் 26 பேராகவும், தமிழ் நாட்டில் 21 பேராகவும் குறைந்துள்ளதாக திட்டக்குழு கணித்தது. நகர்ப்புற, கிராமிய வறுமையினை ஒப்பிடுகையில், தேசிய அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தமிழ் நாட்டில் நகரத்தைவிட கிராமப்புறத்தில் வறுமை சற்று அதிகமாக இருந்தது.

பல பொருளியல் அறிஞர்கள் இதே NSS–ன் புள்ளி விவரத்தைக் கொண்டு திட்டக்குழுவின் மதிப்பீட்டைவிட வறுமை அதிகமாக உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். எனினும், அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் திட்டக்குழுவின் மதிப்பீடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
குறைந்தபட்ச உணவை மட்டுமே நமது அடிப்படைத் தேவை என்று திட்டக்குழு கூறுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உணவு, உடை, தங்குமிடம், குடிநீர் கல்வி, சுகாதாரம், வேலை போன்ற வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகளை இழந்திருக்கும் நிலையை வறுமை எனலாம். இந்த இழப்புகள் எவை எவை என்பதை உறுதிசெய்வதில் சுய உணர்வுகளை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும், சமூக உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அதாவது சமூகத்தால் உணரப்படக்கூடிய அடிப்படை மனித தேவைகளின் இழப்பே வறுமை ஆகும். இவை, உணவு, உடை, தங்குமிடம், கல்வி என பொருள் பரிமாணத்தை சார்ந்தவைகளாக இருக்கலாம்;. பாலியல் மற்றும் சாதி வேற்றுமைகள் போன்ற பொருள்சார் காரணங்களாகவும் இருக்கலாம். எனினும், அரசின் வறுமை கணக்கீட்டில் இவையனைத்தும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. பொருள் பரிமாணத்தில் கூட, நமது அடிப்படைத் தேவைகள் என சமுதாயம் எதிர்பார்க்கக்கூடிய அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

மேலும், திட்டக்குழு வறுமையினை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த சுழலில் வறுமை மதிப்பீடு செய்யும் முறையினை மறு ஆய்வு செய்ய சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையில் ஒரு புதிய வல்லுநர் குழுவினை திட்டக்குழு அமைத்து, அக்குழு தனது அறிக்கையினை நவம்பர் 2009-ல் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் வறுமை தற்போது மதிப்பிடப்படுகின்றது.


No comments:

Post a Comment