Monday, September 30, 2013

நுகர்வோர் கடன்... இனி இல்லை 0% வட்டி!




நாணயம் விகடன்:
06 Oct, 2012013

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்... என அடுத்துவரும் மாதங்களில் பண்டிகைகள் 
அணிவகுத்து நிற்கின்றன. வட்டி எதுவும் இல்லாமல் சுலபத் தவணையில் இந்தப் பண்டிகை காலத்தில் கடன் கிடைக்கும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடத் திட்டமிட்டிருப்பவர்கள் பலர். ஆனால், வட்டி எதுவும் இல்லாத ஜீரோ பெர்சன்ட் திட்டத்தில் எந்த வங்கியும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை விற்கக் கூடாது என ஆர்.பி.ஐ. இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாணயம் விகடன் 15.9.2013 தேதி யிட்ட இதழில் ஜீரோ பெர்சன்ட் வட்டி விகிதத்தில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து விரிவாக கட்டுரை வெளியிட்டோம். இப்போது ஆர்.பி.ஐ.யும் இதைத்  தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. இப்படியரு அதிரடி உத்தரவு வெளியிடக்  காரணம், விற்பனையாகும் பொருட்களின் தொகையில் எவ்வளவு தொகை கடைக் காரர்களுக்குப் போகிறது, எவ்வளவு தொகை வங்கி களுக்கு வட்டியாகச் செல் கிறது என்பது நுகர்வோருக்கு தெரிய வேண்டும் என்பதற்குத்தான்.  
ஒரு பொருளின் விலை யில் தள்ளுபடி போக மீதமுள்ள தொகைக்கு    வட்டி விகிதம் என்ன?, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு?,  மாதாமாதம் இ.எம்.ஐ. எவ்வளவு தொகை கட்டவேண்டும்  என்பதை எல்லாம் வாடிக்கையாளருக்கு தெளிவாக விளக்கிச் சொன்ன பிறகுதான் பொருளை விற்பனை செய்ய வேண்டும் என ஆர்.பி.ஐ. அறிவித்திருப்பதோடு, தனியார் நிதி நிறுவனங்களும் ஜீரோ பெர்சன்ட் வட்டி திட்டத்தில் கடன் தரக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது.
வங்கிகளின் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்திற்கு கீழ் கடன் வழங்கக்கூடாது என்பதும் ரிசர்வ் வங்கியின் விதி களில் ஒன்று. மேலும், டெபிட் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் தொடர்பை வங்கிகள் துண்டிக்க வேண்டும் எனவும் ஆர்.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.
இதுவரை பெரும்பாலான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஜீரோ பெர்சன்ட் வட்டி விகிதம் எனச் சொல்லி கடன் தரும் தொகைக்கான வட்டியை உற்பத்தியாளர் தரும் தள்ளுபடி மற்றும் செயல்பாட்டுக் கட்டணம் மூலம் வசூலித்துவிடுவார்கள். இனிமேல் இப்படி செய்ய முடியாது. கிரெடிட் கார்டு மூலமாக ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி  மதிப்பில் பொருட்கள் விற்பனை யாகிறது. இதில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இ.எம்.ஐ. முறையில் விற்பனையாகிறது. ஒரு பொருளை முழுத் தொகை கட்டி வாங்கும்போது 10% தள்ளுபடி கிடைக்கும். அதே பொருளை கிரெடிட் கார்டு மூலம் இ.எம்.ஐ.-ல் வாங்கும் போது இந்தத் தள்ளுபடி இல்லாமல் செயல்பாட்டுக் கட்டணம் 5% சேர்த்து 6 மாத இ.எம்.ஐ.-ல் கடனைத் திரும்பச் செலுத்தும்போது ஆண்டுக்கு 33%  வட்டி நம் கையைவிட்டுச் செல்லும்.  
ஆர்.பி.ஐ.-ன் இந்த அறிவிப்பால் பொருட்களை விற்கும் கடைகளுக்கு என்ன பாதிப்பு என வியாபாரிகளிடம் விசாரித்தோம்.
''ஜீரோ பெர்சன்ட் வட்டி  என்பது ஒரு வியாபார உத்திதான். இனிமேல் உற்பத்தியாளர் தரும் தள்ளுபடியுடன் லாபத்தை மட்டும் சேர்த்து பொருளின் விலையை நிர்ணயிப்போம். வட்டி சதவிகிதத்தை வாடிக்கையாளர்களிடம் சொல்லி, அதை வசூலிப் போம். தள்ளுபடி இல்லாத பொருட்களுக்கும் இதையே செய்வோம். இதனால் லாபத்தில் எந்த பாதிப்பும் வராது.
ஆனால், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவது குறையும். இதைத் தடுக்க, குறைந்த முன்பணத்தில் கடன் தருவோம். வாங்கும் வட்டி விகிதத்தைச் சற்று குறைத்து விளம்பரம் செய்வோம்'' என்கிறார்கள் வியாபாரிகள்.
ஆக, ஆர்.பி.ஐ. என்னதான் உத்தரவு போட்டாலும் பழைய வழக்கத்தை வேறு ஒரு பெயரில் கடைக்காரர்கள் தரவே செய்வார்கள். எனவே, வாடிக்கையாளர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்.
 -  இரா.ரூபாவதி.

No comments:

Post a Comment