தினமலர் :14 july 2013
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனம் ஆனந்த் சினி சர்வீஸ். தென்னிந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனராக அக்னினேனி ரவிசங்கர் பிரசாத் இருந்து வந்தார். இவர் ஜெமினி லேப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தை நடத்தியதுடன் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாமில் ஆனந்த் ரெசிடென்சி என்ற நட்சத்திர ஓட்டலையும் நடத்தி வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஏனாம் சென்ற அவர், தனது ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன்பு நடைப் பயிற்சிக்காக வெளியில் சென்றவர் பின்பு ஓட்டலுக்கு திரும்பவில்லை. இதுபற்றி ஓட்டல் மானேஜர் ஏனாம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரவிசங்கர் பிரசாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் சவுபந்தலங்கா என்ற இடத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் அவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னை கொண்டுவரப்படும் ரவிசங்கர் பிரசாத்தின் உடல் சினிமா பிரமுகர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. ரவி பிரசாத்தின் மறைவையொட்டி நாளை (திங்கட்கிழமை) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.
54 வயதே ஆன ரவிசங்கர் பிரசாத் கடன் பிரச்னைகளால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழில்போட்டியால் அவரை யாரும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவிசங்கர் பிரசாத்தின் மரணம் தமிழ், மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment