Wednesday, July 3, 2013

4 லாரிகளில் இருந்து ரூ.200 கோடி பணம், நகை பறிமுதல்


மும்பை வருமான வரித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள பணம், நகைகள் எடுத்துச் சென்ற 4 லாரிகள்.
மும்பை வருமான வரித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள பணம், நகைகள் எடுத்துச் சென்ற 4 லாரிகள்.

மும்பையில் வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய அதிரடி சோதனையில் 150 பைகளில் இருந்த பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட இந்த பணம், நகைகளின் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
மும்பையில் இருந்து குஜராத்துக்கு தனியார் கூரியர் சேவை மூலம் லாரிகளில் கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு லாரியிலும் சுமார் 15 பேர் வரை பாதுகாப்புக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை (விசாரணைப் பிரிவு) இயக்குநர் ஜெனரல் ஸ்வதந்திர குமார் கூறியது: தெற்கு மும்பை, மத்திய ரயில்வே நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் 4 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் (என்ஐஏ) இணைந்து திங்கள்கிழமை இரவு இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கணக்கில் காட்டப்படாத பெருமளவிலான பணம் மும்பையில் இருந்து குஜராத்துக்கு லாரிகளில் கடத்தப்படுவதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணத்தை எண்ணுவதிலும், தங்க, வைர நகைகளை எடைபோட்டு மதிப்பிடும் பணியிலும் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்பணி முடிந்த பின்புதான் அவற்றின் மொத்த மதிப்பை சரியாகக் கூற முடியும்.
சில ஊடகங்கள் கூறியுள்ளதுபோல ரூ.1000 கோடி பணம், நகைகள் கைப்பற்றப்படவில்லை என்றார். இந்தப் பணம் முழுவதும் கணக்கில் வராதவை. அவற்றின் மதிப்பு நிச்சயமாக ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பணம் ஹவாலா பரிமாற்றம் மூலம் கொண்டு வரப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது? 
இப்பணம் பயங்கரவாதிகளுக்காக கொண்டு செல்லப்பட்டதா, அல்லது அரசியல் கட்சிகளின் நிதிக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல், "இந்த சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருந்தால் விசாரணை மும்பை போலீஸிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிப்பார்கள்' என்றார்.
போலீஸ் பாதுகாப்புடன்... பணம் எடுத்துச் சென்ற லாரிகள் மும்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளன.
தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் பணம், நகை போன்ற மதிப்புமிக்க பொருள்கள் எடுத்துச் செல்லப்படும்போது, கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம்தான் என்று மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பணம், நகைகள் கணக்கில் காட்டப்பட்டவைதானா என்பதை உறுதி செய்வது போலீஸாரின் பணியல்ல என்று மும்பை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment