Friday, March 1, 2013

சிங்கப்பூர் போதுங்க!



 சிங்கப்பூர் போதுங்க!
கிரி on FEBRUARY 28, 2013


சிங்கப்பூரில் உள்ள எங்கள் அலுவலகத்தில் உள்ள சர்வர் அறை AC யை மாத சர்வீஸ் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளோம். மாதம் ஒருமுறை அனைத்தும் சரியாக உள்ளதா! என்று சோதனை செய்து செல்வார்கள். இவ்வாறு வரும் ஊழியர்களிடம் எப்போதும் நான் சகஜமாக பழகுவேன். இதில் மூவர் அவ்வப்போது மாறி விட்டாலும், வரும் எவராக இருந்தாலும் உடனே நன்கு பழகி விடுவார்கள். சீன நிறுவனம் என்றாலும் அதில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பணி புரிகிறார்கள்.
இதில் ஒருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், அவரது சொந்த ஊரான சென்னைக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட விடுமுறையில் சென்று வந்தார். இவர் சிங்கப்பூரில் கடந்த 12 வருடங்களாகப் பணி புரிந்து வருகிறார். ஒவ்வொரு மாதம் வரும் போதும் ஊருக்கு சென்றீர்களா? குழந்தைகள் எப்படி உள்ளார்கள்? என்று விசாரிக்கத் தவற மாட்டார்.
இந்த முறை வந்த போது, தனக்கு வரும் ஜூன் மாதத்தோடு விசா முடிவடைவதாகவும், தான் நீட்டிக்கப் போவதில்லை என்றும், ஊருக்கே நிரந்தரமாகச் செல்லப் போவதாகவும், “சிங்கப்பூர் போதுங்க!” என்று கூறினார். பொதுவாக இது போல நான் கேட்டதில்லை அதனால், இயல்பாகவே இருக்கும் ஆர்வத்தில் “ஏன் செல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய காரணங்கள் பின் வருமாறு.
12 வருடங்கள் இங்கே இருந்து விட்டேன். தற்போது விடுமுறையில் சென்றதில், மனைவி இரண்டாவது முறையாக கருத்தரித்து இருக்கிறார். இவரை பார்க்க ஆள் வேண்டும். என்னுடைய பெற்றோர்களோ அல்லது அவருடைய பெற்றோர்களோ பார்த்துக்கொள்ளலாம் என்றாலும், எனக்கும் ஊரிலேயே இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இங்கே இருந்து சம்பாதித்ததில் சென்னை புறநகரில் வீடு கட்டி இருக்கிறேன். எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது மற்றும் மற்ற இரு வீடுகளை வாடகைக்கு விட்டு இருக்கிறேன். அதில் மாதம் 8 ஆயிரம் வருகிறது. இந்த விடுமுறையில் சென்ற போது விலைவாசி / சென்னை வந்தால் எப்படி செலவுகளை சமாளிப்பது போன்ற விசயங்களை விரிவாகத் தெரிந்து கொண்டேன்.
சிங்கப்பூரில் இருந்தால், அவர்கள் தங்களுடைய தேவைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு செலவு இருந்து கொண்டே இருக்கிறது. புதிதாக ஏதாவது வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இருக்கிறது. இது போல இருந்தால் நான் எப்படித் தான் ஊருக்குப் போவது? எனக்கும் ஊரில் இருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.
இங்கே என்னைப் போன்ற பெரும்பாலனவர்கள், ஊருக்குச் சென்றால் என்ன செய்வது என்று தெரியாமலே இங்கேயே தொடர்ந்து இருக்கிறார்கள். அதோடு இங்குள்ள சொகுசும் அவர்களுக்கு நன்கு பழகி விடுகிறது. ஊரில் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் தொந்தரவு, உறவினர்கள் கேள்வி, அதோடு சம்பளமும் குறைவாகக் கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், இங்கே இருந்து தொலைபேசியிலேயே பேசி சமாளிக்கலாம். அதே ஊரில் இருந்தால், அனைத்தையும் நேரிலேயே எதிர் கொள்ள வேண்டும். இங்கே இருந்தால் வேலை இருந்தாலும், முடிந்த பிறகு கேள்வி கேட்க ஆளில்லை நம் விருப்பம் போல இருக்கலாம்.
எனவே இங்குள்ளவர்கள் ஊருக்குச் செல்ல யோசிக்கிறார்கள். ஊருக்குச் சென்றால் சரியான வேலை கிடைக்காது, சிரமப்பட வேண்டும் என்று பயப்படுகிறார்கள். இதனால் இங்கேயே தங்கள் பணியை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தேவைகளை குறைத்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. எனவே, இது வரை சம்பாதித்தது போதும் என்று முடிவு செய்து விட்டேன். இனி குடும்பத்துடன் இருக்கவே விருப்பப்படுகிறேன். வாடகை 8 ஆயிரம் வருகிறது, சொந்த வீடுள்ளதால் வீட்டு வாடகை இல்லை. எப்படியும் நான் ஊருக்குச் சென்று சும்மா இருக்கப் போவதில்லை ஏதாவது இது போல AC மெக்கானிக் வேலை செய்யப் போகிறேன் எனவே, இது என் வாழ்க்கைத் தேவைக்குப் போதும்” என்று கூறினார்.
உண்மையில் இவர் கூறுவதை கேட்கவே எனக்கு ஆசையாக இருந்தது. எவ்வளவு அழகான, நடைமுறை உண்மையை பிரதிபலிக்கும் பேச்சு.
குறிப்பு: வெளிநாட்டில் IT பணியில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் பெரும்பாலும் கொஞ்ச நாள் வெளிநாட்டுப் பெருமை, அங்குள்ள பணிச் சூழல், சொகுசு, மற்ற பொது வசதி பற்றிப் பெருமை பேசுவதை கவனித்து இருப்பீர்கள் அதோடு கடுப்பும் ஆகி இருப்பீர்கள். இது IT துறையில் உள்ளவர்கள் மட்டும் செய்வதல்ல, எந்த ஒரு வேலையில் இருந்து வருபவரும் செய்வதே. இங்கே கட்டடப் பணியில் இருப்பவர்கள் கூட நம் ஊரில் வந்து வேலை செய்ய வேண்டி வந்தால், சிங்கப்பூரில் வேலை செய்தது போல வராது என்று பெருமை பேசுவார்கள். அது உண்மையும் கூட. பல சொகுசுகளை அனுபவித்து திடீர் என்று மாறும் போது அதைக் கண்டு அவர்கள் வெளிப்படுத்தும் “ஆதங்கம்” அதிகமாகச் சென்று “பந்தா” என்பது போல ஆகி விடுகிறது. இது பற்றி வேறு ஒரு பதிவில் விளக்கமாகக் கூறுகிறேன். கொசுறுவாக கூறக் கூடிய விசயமல்ல இது.
 இது இன்னொரு நண்பன் அனுபவம்
இது என்னுடைய IT துறையில் இருக்கும் நண்பன் கூறியது. “இங்கு போதுமான அளவிற்கு சம்பாதித்து விட்டேன். IT துறை அல்லாது மரம் வளர்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் எனக்கு ஆர்வம் அதிகம் எனவே, என்னுடைய நிறுவனத்தையும் கவனித்துக்கொண்டு [இவருக்கு சென்னையில் ஒரு IT நிறுவனம் உள்ளது] உடன் எனக்குப் பிடித்த மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தப் போகிறேன். அதோடு, குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். எனவே, அவர்கள் நம் இந்திய சூழலில் வளருவதையே விரும்புகிறேன். அடுத்த 10 வருடங்களில் IT துறை அல்லாத மற்ற துறையில் முழுவதுமாக இறங்கும் அளவிற்கு என்னை தயார் படுத்துவதே என்னுடைய தற்போதைய நோக்கம்” என்று கூறினார்.
இவர் வரும் 2013 ஏப்ரல் மாதத்தோடு நிரந்தரமாக இந்தியா செல்கிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் சரியான தருணம் இது. இவர் சிங்கப்பூரில் கடந்த ஆறு வருடங்களாக இருக்கிறார்.
இவருக்கு, இயற்கை வேளாண்மை, தமிழர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றில் ரொம்ப ஈடுபாடு. பேசுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அது குறித்து மேலும் தகவல்களை சேகரித்து / பார்வையிட்டு தன்னை தயார்படுத்தி வருகிறார். தன்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறிந்து, தமிழ் தெரியாமல் போய் விடக் கூடாது என்று தன்னுடைய குழந்தைகள் வளர்ப்பில் கூட இதை கவனமாக செய்து வருகிறார். வீட்டில் பேசும் போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் காரணம், தற்போது இங்குள்ள [சிங்கப்பூர்] குழந்தைகள் பெரும்பாலும் தமிழ் பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றன. நம் ஊரிலும் இப்படித்தான் என்றாலும், இங்குள்ள அளவிற்கு மோசமல்ல.
இதில் நான் கூறிய இருவருமே தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளவர்கள் ஆனால், அவற்றைத் தொடராமல் இந்தியா செல்கிறார்கள். இருவருமே ஒவ்வொரு எல்லையில் தங்கள் பணியில் இருப்பவர்கள். ஒருவர் AC மெக்கானிக், இன்னொருவர் IT துறை.
பொதுவா நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதை இங்கே பதிவாக எழுதுவதில்லை. பதிவர்களிடம் நான் அளவாக பேசுவதற்கான காரணமும் இது தான். நாம் தனிப்பட்ட முறையில் கூறும் கருத்துக்களைக் கூட “ஆஹா! பதிவு எழுத ஒரு மேட்டர் கிடைத்தது” என்று எழுதி நம்மை சங்கடத்திற்கு ஆளாக்கி விடுகிறார்கள். இதை எழுதும் போது இருவரிடமும் அனுமதி பெற்றே எழுதினேன். என்னுடைய IT நண்பனிடம் இது பற்றி எழுத அனுமதி கேட்ட பொழுது, “இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அனைவரிடமும் பகிரப்பட வேண்டும்” என்று கூறியது அவருக்கு உண்மையில் இதில் இருந்த இருந்த ஆர்வத்தைக் காட்டியது.
நான் இவர்கள் இருவர் கூறியதின் கலவையே! நான் என்னுடைய கடனைக் கட்டவே சிங்கப்பூர் வந்தேன் அதோடு, அனைவருக்கும் இருக்கும் இயல்பான வெளிநாட்டு ஆர்வம்.  வெளிநாட்டிலேயே  நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமல்ல. இது தற்போது எடுத்த முடிவல்ல, நான் இங்கு வரும் முன்பே எடுத்தது. நான் இங்கு வந்து 5 வருடம் 5 மாதங்கள் ஆகி விட்டது.
ஒரு சிலர் “இந்தியா பிடிக்கவில்லை, குற்றங்கள், ஊழல்கள் அதிகம், இங்குள்ள வசதிகள் எனக்கு பிடித்துள்ளது. நான் குடியுரிமை [Citizenship] பெற்று அதே நாட்டிலேயே இருக்கப் போகிறேன்” என்று கூறுகிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட எண்ணங்கள் / விருப்பங்கள். எனவே, இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை. நாம் இப்படி இருக்க நினைப்பதால் அனைவருமே நம்மைப் போலவே நினைக்க வேண்டும் என்பது சரியான ஒன்று அல்ல.
எங்களுக்கு கடன் அதிகளவில் இருந்தது. நான் இங்கே வந்ததே முக்கியமாகக் கடனைக் கட்டத்தான். கடனைக் கட்டி விட்டேன். நாங்கள் வாங்கிய இடத்தில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். அதற்குண்டான கடனை நாங்கள் இதற்காகவே முன்பே திட்டமிட்டு வாங்கிய இடத்தை விற்றும், என்னுடைய சம்பளத்தைக் கொண்டும், அடுத்த வருட நடுவில் கட்டி விடுவேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எனக்கு இங்கே இருக்க வேண்டிய மிகப்பெரிய தேவை இல்லை. எனக்குண்டான அடிப்படைப் பிரச்சனைகள் / தேவைகள் முடிந்து, ஓரளவு சேமித்த பிறகும், தொடர்ந்து நான் வெளிநாட்டிலேயே இருந்தால், அது சொகுசு / ஆடம்பரத் தேவைக்காக மட்டுமே இருக்க முடியும். நம்முடைய ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி என்பதே கிடையாது!
அவ்வாறு இருந்தால், நான் மேலும் சேமிக்க முடியும் என்றாலும், அதற்கான தேவைகள், மேலே அவர் கூறியது போல, வந்து கொண்டே தான் இருக்கும். இன்னொரு இடம் வாங்க வேண்டும், அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டும் என்று, நம்முடைய ஆசைக்கு என்றும் எல்லையே கிடையாது. நம்முடைய தேவைகளை குறைத்துக்கொண்டாலே நமக்கான சிரமும் குறைகிறது, அதற்காக அனைத்தையும் துறந்தும் இருக்க முடியாது. கட்டுப்பாடான ஆசைகள் நமக்கு / நம் குடும்பத்திற்கு நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நான் அடுத்த வருட [2014] இறுதியில் இந்தியாவே திரும்பி விடலாம் என்று கடந்த வருடமே [2012] முடிவு செய்து விட்டேன் ஆனால், ஒருவேளை இடையிலேயே செல்ல வேண்டி இருந்தாலும் இருக்கலாம் / அடுத்த வருட இறுதியில் செல்லும் போது சரியான வேலை / மாற்றல் கிடைக்க வேண்டும் / குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் ஒரு வருடம் கூடுதல் ஆகலாம். எதுவும் நாம் நினைத்தது போல நடப்பதில்லையே. “நடக்கும் நடக்காது” என்பது வேறு விஷயம் ஆனால், நாம் திட்டமிட்டு வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு, அதைத் தான் தற்போதும் செய்து இருக்கிறேன்.
இவர்கள் இருவரும் என்னுடைய முடிவை இன்னும் உறுதியாக்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை. என் நண்பன் கூறியது போல, எனக்கும் IT துறை சாராத பல்வேறு விருப்பங்கள் உண்டு இருப்பினும், நம் விருப்பங்களை விட “நிதர்சனம்” என்ற ஒன்றுள்ளதே!

No comments:

Post a Comment