Saturday, February 2, 2013

கற்றுக் கொடுக்கிறார் காந்திஜி




வெ. ஜீவகுமார் :தினமணி ‏ 3th jan 2012
ஆண்டு - 1936; இடம் - நாக்பூர் புகை வண்டி நிலையம்; வயதான கணவனும் மனைவியும் ரயிலில் உட்கார்ந்துள்ளனர். சுற்றிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். வாழ்த்து கோஷங்கள் வானை முட்டுகின்றன. அந்தத் தம்பதி உட்கார்ந்திருந்த ரயில் பெட்டி அருகில் கிழிந்த துணிகளோடு ஒருவர் நெருங்குகிறார். சன்னல் அருகே உட்கார்ந்திருக்கும் அந்த அம்மையாரிடம் ஒரு ஆரஞ்சுப் பழத்தை நீட்டுகிறார்.
"அம்மா, இதோ உங்களுக்கு என் அன்பின் சின்னம்''.
அந்த அம்மையாரின் கணவர் அருகில் உட்கார்ந்திருக்கிறார். கிழிந்த சட்டை அணிந்திருப்பவர் அவரைப் பார்த்து கூறுகிறார் ""நீங்கள் பெரிய மனுஷன் என்றால் அதற்கு முழுக் காரணமும் அம்மாதான்'' என்கிறார்.
ரயில் ஓடத் தொடங்குகிறது. அந்தக் கிழிந்த சட்டை அணிந்திருப்பவரின் குரல் மீண்டும் கேட்கிறது. கணவரும் மனைவியும் மனக்குழப்பத்துடன் பயணம் செய்கின்றனர். அந்தத் தம்பதி வேறு யாருமல்ல மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூர்பாவும்தான்; கிழிந்த சட்டை அணிந்திருந்தவர் அவர்களின் மூத்த மகன் ஹரிலால்.
இன்று நாம் காணும் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல், தலைவர்களின் குடும்ப ஆதிக்கம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம், படிக்கிறோம், உணர்கிறோம்.
ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்று நினைப்பவர்களும் இருக்கலாம். இந்திரா காந்தியின் கணவர் "பெரோஸ் காந்தி' என்றே நம்மில் பலர் அறிந்துள்ளோம். இந்திராவின் கணவர் பெயர் "பெரோஸ் கான்' என்பதும் நேரு இந்தத் திருமணத்தை விரும்பாத சூழலில் பெரோஸ் கான், பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண்மைகள்.
ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பெரோஸ் கான் பெரிதும் உதவுகிறார். 1942-இல் பெரோஸ், இந்திரா மணவிழா நடக்கிறது.
1944-இல் ராஜீவ், 1946-இல் சஞ்சய் பிறக்கின்றனர். ராஜீவ் கான், சஞ்சய் கான் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள், ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று அழைக்கப்படுகின்றனர். ராகுல் காந்தி, வருண் காந்தி வரை அந்தப் பெயர் நீடித்துக்கொண்டே போகிறது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா பெயருடனும் "காந்தி' சேர்க்கப்பட்டது.
இந்த "காந்தி'களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் தில்லி செங்கோட்டை அரியணையோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. காந்திஜிக்கும், கஸ்தூர்பாவுக்கும் பிறந்த மகன்கள் நான்கு பேர். ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். ஹரிலாலுக்கும் முன்பு பிறந்த மூத்த மகன் பிறந்த சில நாள்களிலேயே இறந்துவிட்டார்.
எந்த அரியணைக் கனவுகளோடும் இவர்கள் வளர்க்கப்படவில்லை. மாறாக சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் நாட்டுக்காக ஏராளமாக ரத்தம் சிந்தினர். இவர்களின் உடலும் உள்ளமும் புண்ணாகித் துன்புற்றனர்.
தந்தை - தனயன் என்ற உறவு காந்திஜிக்கும் அவரின் மூத்த மகன் ஹரிலாலுக்கும் வித்தியாசமான சூழலில் சிதைந்துபோய் இருந்தது. எனினும் ஹரிலால் விடுதலைப் போராட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி இருந்த சூழலில், தொடக்கம் முதலே காந்திஜியுடன் அவரது மூத்த புதல்வன் இணைந்து வாழ முடியவில்லை. நெறிதவறிப்போன தனது மூத்த புதல்வனின் வாழ்க்கையைச் சரிசெய்ய காந்திஜி முயற்சி மேற்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்துக்கு ஹரிலாலையும் அழைத்தார். தென் ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் சிறையில் சத்தியாக்கிரகியாகிய ஹரிலாலின் உடைமைகள் தகரப்பெட்டியில் வைக்கப்பட்டு அவரது முதுகுடன் சேர்த்துக் கட்டப்பட்டன. கைகளில் விலங்கு பூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார் ஹரிலால்.
காந்திஜி தன் புதல்வர்களையும் ஏன், பேரப்பிள்ளைகளையும்கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 240 மைல்கள் நடந்த புகழ்பெற்ற "தண்டி யாத்திரை'யில் காந்தி தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்கவைத்து அழைத்துச் சென்றார். காந்தியின் 61-ஆவது வயதில் கோடை வெயிலில் அது நடந்தது.
தமது உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்தை ஈடுபடுத்தினார். அடியும் உதையும் பெற்று அவர்கள் காயத்தில் ஈக்கள் மொய்க்க சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று காந்திஜி உறுதியாக இருந்தார்.
லண்டனில் காந்தியின் மூத்த மகன் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பீரன் ஜீவா மேத்தா அதற்காக உதவிகள் செய்தார். காந்திஜியின் மகனை லண்டன் அனுப்பி வைக்கும்படி கேட்டார்.
 காந்தியின் குடும்பத்துக்கு என்று அந்தப் பிரத்யேக ஏற்பாட்டை பீரன் ஜீவா மேத்தா செய்தார். காந்தியின் மகனுக்கும் பிறரைவிட முழுமையான தகுதி இருந்தது. எனினும் ஆசைப்பட்ட மகனை காந்தி லண்டனுக்கு அனுப்பி வைக்கவில்லை.
காந்தியின் மூத்த மகன் ஹரிலால் வழக்குரைஞராகப் படிக்க விரும்பியதற்கு காந்தி உதவவில்லை. காந்தியின் இரண்டாம் மகன் மணிலால் படிக்கவும் காந்தி உதவவில்லை. தான் சிறையில் இருந்தபோது, சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவு தரவேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தார் காந்திஜி.
ஹரிலால் மிகுந்த வறுமையில் வாடியபோது அவர் தம்பி மணிலால் ஓரளவு உதவினார். காந்திஜி மகன் ஹரிலாலின் நடவடிக்கையில் ஏற்கெனவே அதிர்ச்சியுற்றிருந்தார். மணிலால் அண்ணன் ஹரிலாலுக்கு உதவியது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. இதற்காக தம் எதிர்ப்பைக் காட்டும் வகையில் காந்தி, தானே ஒரு வாரம் பட்டினி கிடந்தார்.
தம் இரண்டாம் மகன் மணிலாலை சென்னைக்கு ரயில் ஏற்றி அனுப்பினார். "உன்னை (என்னுடைய மகன் என்று) அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும்' என்று வீட்டை விட்டு அனுப்பினார். மணிலால் சென்னையில் மூட்டை தூக்கி பொருள் ஈட்டினார். சந்தைகளில் நடைபாதைகளில் படுத்து உறங்கினார்.
காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர் மணிலால்தான். உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளானார். மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக்கைதியாக வாழ்ந்தார். 25 முறை - மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் - சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரே நேரத்தில் காந்தி ஒரு சிறையில், கஸ்தூர்பா மற்றொரு சிறையில், மூத்த மகன் ஹரிலால் தெருப்பிச்சைக்காரனாக, மற்றொரு மகன் மணிலால் மண்டை உடைபட்டு சிறைக்கைதியாக, காந்திஜியின் மற்ற இரு மகன்கள் ராம்தாஸ், தேவதாஸ் வேறு வேறு சிறைச்சாலைகளில் - இவ்வாறுதான் காந்திஜியின் குடும்பம் 1947-க்கு முன்னால் வாழ்ந்தது.
காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவின் தியாகம் நிகரற்றது. கஸ்தூர்பாவுடன் அவரது மகன் ராம்தாஸ் 15 வயதில் இருந்தபோது ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறைச்சாலைகள் அப்போதெல்லாம் தவம் நடக்கும் பர்ணசாலைகளாக இல்லை. 1907-இல் டிரான்ஸ்வால் சிறையில் காந்தி கைதியாக இருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு உள்நாட்டுக் கைதியும் சீனக் கைதியும் இருந்தனர். அவர்கள் தங்களை நிர்வாணமாக்கிக் கொண்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டனர். இரவு முழுதும் தூங்க முடியாமல் காந்தி மிரண்டுபோன மனநிலையில் கிடந்தார்.
சிறைச்சாலை வாழ்க்கை காட்டு விலங்குகளுடன் வாழ்வதுபோல இருந்தது. இந்த நிலையில்தான் காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவின் வாழ்க்கை சிறைச்சாலையிலேயே முடிந்தது. சிறைச்சாலை வளாகத்தில்தான் அவரின் இறுதிச் சடங்குகள் நடந்தன.
6 முறை - சுமார் 2 ஆண்டுகள் - கஸ்தூர்பா சிறைக் கைதியாக வாழ்ந்தார். தமது 69-வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் கஸ்தூர்பா தைரியமாக இருந்தார். சொந்த ஊர் ராஜ்கோட்டில், இறக்கைகள் நறுக்கப்பட்ட பறவையாக சிறைக் கைதியாக வாழ்ந்தார். அவரின் 72-ஆவது வயதில் விலைமாதுகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் அவரை அடைத்துவைத்தது அன்றைய கொடூர அரசு. அப்போது கடைசி மகன் தேவதாஸ் பஞ்சாப் சிறையில் இருந்தார்.
இந்திய விடுதலைக்காக காந்திஜியின் குடும்பம் இப்படித்தான் மகத்தான விலை கொடுக்க வேண்டிவந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, ஒரு பியூன் வேலையைக்கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதை காந்திஜி விரும்பவில்லை.
பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர், ஜின்னா போன்ற பல தலைவர்களுடன் காந்திஜிக்கு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். எனினும் காந்தியடிகளை சான்றுகாட்டவும் முதன்மைப்படுத்தவுமான நிகழ்வுகளும் ஏராளம் உண்டு.
ஒரு கிறிஸ்துவ ஆதிதிராவிடரின் மலத்தைச் சுத்தம்செய்ய தன் மனைவிக்கு உத்தரவிட்டது, நாவிதத் தொழிலாக இருந்தாலும் ஒழுங்காகக் கற்றுக் கொள் என்று மகன் ராம்தாஸிடம் கூறியது என்று காந்தி பற்றி ஏராளமான செய்திகளைக் கூறலாம்.
உலகில் பல்வேறு நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் நடந்துள்ளன. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியதாக காந்தியடிகள் பலரால் முன்மொழியப்படுகிறார். கியூபா, பொலிவியாவின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடியதாக எர்னஸ்ட் சேகுவெரா அறியப்படுகிறார். பல நிகழ்வுகளில் இருவரையும் ஒப்பிட முடியாது. எனினும் சில ஒருங்கிணைந்த அம்சங்களும் உள்ளன. இருவரின் மரணமும் இயற்கையானதல்ல. துப்பாக்கித் தோட்டாக்களே இருவரின் வாழ்வையும் முடித்தன.
தம் வாரிசுகளை இவர்கள் எந்த வகையில் எதிர்பார்த்தார்கள் என்பதிலும் விசித்திரமான சில ஒற்றுமை அம்சங்கள் உள்ளன.
தம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ""சே'' பின்வருமாறு கடிதம் எழுதினார்.
""இக்கடிதத்தை நீங்கள் படிக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா என்பதே சந்தேகம். என்னை அதிகம் நினைத்திருக்க மாட்டீர்கள். சின்னக் குழந்தைகளுக்கு என்னை நினைத்துப் பார்க்க எதுவும் இருக்காது. நீங்கள் நல்ல புரட்சியாளராக வளர வேண்டும். எங்கு அநீதி நடந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும்''.
இத்தகைய மகத்தான மனிதர்கள் தங்கள் குழந்தைகளை சொகுசு வாழ்க்கைக்குத் தயார்படுத்தவில்லை. தங்களைப்போன்றே தங்கள் குழந்தைகளும் சமூகத்துக்கு உழைக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தனர்.
""விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால், உன்னை தெய்வமாக வழிபடுவேன்'' என்று மனைவி கஸ்தூர்பாவிடம் காந்தி அடிகள் கூறினார்.
காந்திஜியின் தியாகம் மட்டுமல்ல, காந்திஜியின் குடும்பத்தின் தியாகமும் நிறைய நிறையக் கற்றுக்கொடுக்கிறது. 
பொது நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப்பவர்களை சமூகம் சுவாசிக்கும்வரை கொண்டாடிக்கொண்டே இருக்கும்.
கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

No comments:

Post a Comment