Friday, October 26, 2012

:"மகாத்மா காந்திக்கு,தேசத் தந்தை என்ற பட்டம் அளிக்க, அரசியல் சட்டத்தில் இடமில்லை'





தினமலர்: அக்டோபர் 25,2012,23:35 IST


புதுடில்லி:"மகாத்மா காந்திக்கு,தேசத் தந்தை என்ற பட்டம் அளிக்க, அரசியல் சட்டத்தில் இடமில்லை' என, ஆறாம் வகுப்பு மாணவியின் விண்ணப்பத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.லக்னோவை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராசர், மகாத்மா காந்தி பற்றியும், அவரை தேசத் தந்தை என, குறிப்பிடுவதற்கான காரணங்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களைத் திரட்ட முயற்சித்தார்.

இதில், மகாத்மா காந்திக்கு எவ்வித பட்டமும் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாணவி ஐஸ்வர்யா, கடந்தாண்டு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், "மகாத்மா காந்தியை, தேசத் தந்தையாக அரசு அறிவிக்க வேண்டும். அதுகுறித்து, அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.கடிதத்திற்கு பல மாதங்கள் ஆகியும், பதில் வராததால், தன் கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு மாணவி ஐஸ்வர்யா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்ப கடிதம், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, மாணவிக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மாணவி ஐஸ்வர்யாவுக்கு விளக்கம் அளித்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில் கூறியதாவது:கல்வி மற்றும் ராணுவம் தவிர, மற்றவற்றுக்கு, எந்த பட்டமும் வழங்க அனுமதில்லை என்பது அரசியல் சட்டம் பிரிவு 18(1) கீழ் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, மகாத்மா காந்திக்கு, தேசத் தந்தை என்ற பட்டம் அளிக்க, சட்டத்தில் இடமில்லை. இதனால், மாணவியின் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment