Monday, October 1, 2012

முதல்முறையாக டல்லாஸில் விநாயகர் சிலை கரைப்பு!

 Vinayakar Idols Immersed At Dallas

ஒன்இந்தியா: திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2012, 13:05 [IST


டல்லாஸ் (யு.எஸ்): டல்லாஸில் உள்ள இந்து கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. முதல் முறையாக விநாயகர் சிலைக் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மும்பையிலிருந்து வரவழைக்கப் பட்ட 5 அடி விநாயகர் சிலைக்கு பதினோரு நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீச்சல்குளத்தில் கரைக்கப்பட்டது.
அடாது மழையிலும்...
மும்பையில் விநாயகர் ஊர்வலம் நிறைவடையும் நாளில், பருவ மழையும் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். பெரும்பாலும் அவ்வாறே நடந்து வருகிறது. டெக்சாஸ் மாகாணம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மழையை காணாமல் வறட்சியில் இருந்த நிலையில், சனிக்கிழமை டல்லாஸ் மட்டுமல்லாமல், மாகாணம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மும்பையில் முடிவடையும் பருவமழை, டெக்சாஸில் ஆரம்ப மாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அந்த மழையிலும் ஐநூறுக்கும் மேலான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மும்பை ஸ்டைலில் ஆண்கள் பெண்கள் ஆட்டம்
மும்பை ஊர்வலத்தில் பாட்டுகளுடன், ஆட்டம் பாட்டம் என ஆண்களும் பெண்களும் கடற்கரை வரை சென்று சிலையை கரைப்பது வழக்கம். அதே போல் இங்கும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் இறுதியில், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீச்சல் குளத்தில் சிலை கரைக்கப் பட்டது.
களிமண் சிலை போலில்லாமல், தானாகவே நீரோடு நீராக கரையக்கூடிய சிறப்பு அம்சத்துடன் மும்பையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த்து. சித்தி விநாயக் கணேஷ் மண்டல் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் இந்து கோவில் நிர்வாகிகளுடன் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள். தமிழர்கள் உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
டெக்சாஸில் இதுதான் முதல் முறையாக நடந்த விநாயகர் ஊர்வலம், சிலை கரைப்பு என்பது குறிப்பிடத்தக்கது
-டல்லாஸிலிருந்து உதயன்

No comments:

Post a Comment