Wednesday, April 18, 2012

டீசல், கேஸ் விலையை உயர்த்த ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்





 தினமணி18 Apr 2012 12:23:29 AM IST



மும்பை, ஏப்.17: டீசல், கேஸ், கெரசின் விலைகளை உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது. நிதிப் பளுவை குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 "நிதி பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இதை மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்.


 பெட்ரோல் விலை சந்தை நிலவரத்தைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டாலும், டீசல், கேஸ், கெரசின் விலைகளை அரசே தீர்மானிக்கிறது. இவற்றிற்கு அளிக்கப்படும் மானியத்தால் பட்ஜெட் செலவினம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 111 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, ஏப்ரல் மத்தியில் 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் பொருள்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகை நிச்சயம் அதிகரிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



 அரசு அளித்து வரும் மானியங்கள் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து வருகின்றன. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 5.9 சதவீதமாக உயர்ந்தது. அது நடப்பு நிதியாண்டில் 5.1 சதவீதமாக தொடரும் என்று தெரிகிறது.



 இந்தியா 80 சதவீத பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி மூலமாகவே பெறுகிறது. பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுவரும் மானிய அளவை இந்த நிதியாண்டில் ஜி.டி.பி.யில் 2 சதவீதமாகவும், வரும் காலங்களில் 1.75 சதவீதமாகவும் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.



 2012-13 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருள்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடியை மானியமாக அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் 2011 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் ஜி.டி.பி.யில் 4 சதவீதமாக உயர்ந்தது. நாட்டிற்குள் வரும் அன்னியச் செலாவணிக்கும், வெளியேறும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள வித்தியாசமே நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாகும்.

No comments:

Post a Comment